பொலிஸ் உயரதிகாரியின் மனைவிக்கு பயணக் கட்டுப்பாடுகளை மீற இடமளிக்காததால் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு உடனடி இடமாற்றம்

உடற் பயிற்சிகளுக்காக, கொழும்பு – மருதானை, ஆனந்த சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் சோதனை சாவடியை கடந்து செல்ல முற்பட்ட, கொழும்பு பிரதேசத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரின் மனைவிக்கு அனுமதி வழங்காமையை மையப்படுத்தி பொலிஸ் காண்ஸ்டபிள் ஒருவர் சில நிமிடங்களில் வேறு ஒரு சோதனை சாவடிக்கு இடமாற்றப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மருதானை பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்டு, பொரளை – மருதானை வீதியில் ஆனந்த கல்லூரிக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு  இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

பொலிஸ் உயரதிகாரி ஒருவரின் மனைவி, தனது வீட்டிலிருந்து ஒழுங்கை ஊடாக  மருதானை – பொரளை பிரதான வீதிக்கு உடற் பயிற்சியை முன்னெடுக்க சென்றுள்ளார். இதன்போது ஆனந்த சந்தியில் உள்ள சோதனை சாவடியில் கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள், அவரை பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளதால் முன்னோக்கி செல்ல அனுமதிக்க முடியாது எனக் கூறி திரும்பி வீட்டுக்குச் செல்லுமாரறு கூறியுள்ளார்.

இதன்போது, குறித்த ஆண் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரின் பெயரைக் கூறி, தான் அவரது மனைவி என கூறி, கான்ஸ்டபிளை ஏசிவிட்டு முன்னோக்கி செல்ல முற்பட்டுள்ளார். எனினும் குறித்த கான்ஸ்டபிள் இதன் போது, ‘ மெடம்… சட்டம் எல்லோருக்கும் சமமானதே. தயவு செய்து திரும்பி வீட்டுக்கே செல்லுங்கள்.’ என குறிப்பிட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது குறித்த பெண், பொலிஸ் உயரதிகாரிக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்து, அதனை குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கேட்கும் விதமாக சப்தத்தை அதிகரித்து வைத்துள்ளார்.

இதன்போது மறு முனையில் பேசியுள்ள நபர், தன்னை உயர் பொலிஸ் அதிகாரி என்பதை உறுதி செய்யும் விதமாக தனது பெயரையும் பதவியையும் இணைத்து கூறிவிட்டு, ‘  அது எனது மனைவி. அவளுக்கு ஜாகிங் செல்ல  வழி விடு.’ என  கடும் தொனியில் கூறியுள்ளார்.

இதன்போது குறித்த காண்ஸ்டபிள், ‘ சேர்… பயணக் கட்டுப்பாடு உள்ள இந்த நேரத்தில் ஜாகிங் செல்லும் ஏனையவர்களுக்கு என்ன செய்வது?’ என  கேட்டுள்ளார்.

‘ஐசே…. ஜாகிங் ஆடை சரியாக அணிந்திருந்தால் செல்ல அனுமதி.’ என கடும் தொனியில் கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.

இதனையடுத்து அந்த உயர் பொலிஸ் அதிகாரியின் மனைவியும் தொடர்ந்தும் தனது உடற் பயிற்சி நடவடிக்கைகளை முன்னெடுக்க சென்றுள்ளார்.

சம்பவம் இடம்பெற்று சில நிமிடங்களில், குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் அந்த சோதனை சாவடியிலிருந்து உடனடியாக மாற்றப்பட்டு, புஞ்சி பொரளை சோதனை சாவடியில் கடமையாற்றுமாறு கட்டளை வந்துள்ளது.

இதனால் ஆத்திரத்துக்கு உள்ளாகியுள்ள ஏனைய பொலிஸ் கனிஷ்ட நிலை உத்தியோகத்தர்கள், இது தொடர்பில்  சம்பவத்துடன் தொடர்புபட்ட உயர் அதிகாரிக்கு எதிராக அவரது மேல் அதிகாரிக்கு முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்து 3 மணி நேரத்தின் பின்னர் மீளவும் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஆனந்த சந்தி  பொலிஸ் சோதனை சாவடிக்கே மீள கடமைகளை முன்னெடுக்க அழைக்கப்பட்டுள்ளார். -வீரகேசரி பத்திரிகை- (எம்.எப்.எம்.பஸீர்)