வெடித்து சிதறும் அபாயம்! நெருங்க முடியாதவாறு சரக்குக் கப்பல் முழுதும் பரவியுள்ள தீ! 

கொழும்பு துறைமுகத்துக்கு வடமேல் திசையில்,  9.5 கடல் மைல் தூரத்தில், கொழும்பு துறைமுகத்துக்குள் நுழையும் நோக்குடன் நங்கூரமிடப்பட்டிருந்த சரக்குக் கப்பலில் பரவிய  திடீர் தீ மிக மோசமான நிலையில் அக்கப்பலை ஆட்கொண்டுள்ள நிலையில், நேற்று குறித்த தீயானது கப்பல் முழுதும் பரவியுள்ளது. கப்பலின் பின் பகுதியில் பரவ ஆரம்பித்த தீ தற்போது கப்பலின் முன்பகுதி வரை அனைத்து பகுதிகளையும் ஆட்கொண்டுள்ளதாக, நேற்றுகாலை விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஊடாக முன்னெடுத்த மேற்பார்வையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நேற்று மாலையாகும் போது, கப்பலின் நடுப் பகுதியில் தீ பரவல் சற்று தணிந்திருந்ததாகவும், முன், பின் பகுதிகளில் தொடர்ந்தும் பாரிய தீ பரவலை அவதானிக்க முடிந்ததாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா கேசரியிடம் தெரிவித்தார். இவ்வாறான நிலையில் குறித்த கப்பலை நெருங்க முடியாத நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 இதனிடையே, குறித்த கப்பல் முழுதும் தீ பரவியுள்ள நிலையில், கப்பலின் எண்ணெய் தாங்கிக்கு தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு கப்பல் எண்ணெய் தாங்கிக்கு தீ பரவினால்  கப்பல் வெடித்து சிதறும் அபாயம் காணப்படுவதாக சமுத்திரவியல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனீ லஹந்தபுர குறிப்பிட்டார்.

‘ கப்பலின் எண்ணெய் கசிவு இதுவரை அவதானிக்கப்படவில்லை. எனினும் இந்த தீ பரவல் தொடர்ந்தால் எண்னெய் தாங்கி வெடித்து எண்ணெய் கசிவு ஏற்படலாம். அவ்வாறு இடம்பெற்றால் அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

 எனவே நாம் அவ்வாறான நிலைமையை கையாள முன்னாயத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். இது தொடர்பில் சர்வதேச நிபுணத்துவம் மிக்க நிறுவனம் ஒன்றுடன் நாம் இணைய வழியே தொடர்புபட்டுள்ளோம். எண்ணெய் தாங்கி வெடித்தால், பெரும்பாலும் தற்போதைய கால நிலை, காற்றின் திசைக்கு அமைய அது நீர்கொழும்பு மற்றும் அதனை அண்மித்த கடற் பகுதியை வெகுவாக பாதிக்கும் என அனுமானித்துள்ளோம்.

 அவ்வாறு  எண்ணெய் கசிவு எற்படுமாக இருப்பின் கப்பலை சுற்றி தற்போதே தடுப்புகளை அமைப்பதன் ஊடாக அதனை கட்டுப்படுத்தலாம். எனினும் கப்பல் தற்போது உள்ள சூழலில் அது சாத்தியமற்றது. எனவே கரையோரம் சார்ந்து உடனடி நடவடிக்கைகளுக்கு தயாராவதே புத்திசாலித்தனமானது. அதற்கான தயார் படுத்தல்கள் இடம்பெற்று தேவையான உபகரணங்கள் மற்றும் மனித வளம் உரிய இடங்களில் தயார் படுத்தப்பட்டுள்ளது.’ என சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனீ லஹந்தபுர கூறினார்.

இவ்வாறான நிலையில், அண்மையில் கிழக்கு கடலில் தீ விபத்துக்கு உள்ளான நியூ டயமண்ட் கப்பலின் எண்ணெய் கசிவினை கட்டுப்படுத்த உதவிய  இந்திய கடலோர காவற்படை கப்பல்கள் தற்போதும் கொழும்பு கடலில் நிலை கொள்ளச் செய்யப்பட்டுள்ளன. எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்குக் கப்பலின் தீ ஆபத்தான  கட்டதை  அடைந்துள்ள நிலையிலேயே, கடல் சூழல் சார் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் மிக நிபுணத்துவம் பெற்ற தொழில் நுட்பத்துடன் கூடிய கப்பல்களே இவ்வாறு கொழும்பை வந்தடைந்து உரிய இடங்களில் நிலைகொள்ளச் செய்யப்பட்டுள்ளன.

கடற்படை தளபதி வைஸ் அத்மிரால் நிசாந்த உலுகேதென்னவின் கோரிக்கை பிரகாரம், இந்திய கடலோர காவற்படைக்கு சொந்தமான ‘ வைபாவ்  , வஜ்ரா மற்றும் சமுத்ரா பிரகாரி ஆகிய கப்பல்கள் கொழும்பை அடைந்துள்ளன.  இக்கப்பல்களுக்கு மேலதிகமாக இந்திய கடலோர காவல் படையின் லிலி ட்ரோலர் படகும் தீ பரவலை கட்டுப்படுத்தும் பணிகளுக்காக கொழும்பு கடலை அடைந்துள்ளது.

‘ கப்பலின் தீ மிக ஆபத்தாக பரவி வரும் நிலையில், கப்பலை நெருங்க முடியாத சூழல் உள்ளது. இந்தியாவின் உதவியும் தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக பெறப்பட்டுள்ளது. அதில் இந்தியா, கடல் சார் சூழல் பாதுகாப்பு தொடர்பில் நிபுணத்துவம் மிக்க கப்பல்களையும் அனுப்பியுள்ளது.. குறிப்பாக இந்திய அதிகாரிகள் நேற்று தீ பற்றி எரியும் கப்பலை சூழ உள்ள பிரதேசத்தின் வெப்பத் தன்மையை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.’ என இந்தியாவின் ஒத்துழைப்பு குறித்து கேட்ட போது கடற்படை ஊடகப் பேச்சளர் கெப்டன் இந்திக டி சில்வா கேசரியிடம் குறிப்பிட்டார்.

இதேவேளை இந்திய கடலோர காவற்படையின் டோனியர் ரக விமானம் தீயணைப்பு மற்றும்  சமுத்திரவியல் சூழல் பாதுகாப்பு பணிகளுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் கொடியுடன் கூடிய எக்ஸ்பிரஸ் பேர்ள் எனும் குறித்த கப்பலில் கடந்த 19 ஆம் திகதி பிற்பகல் இந்த திடீர் தீ பரவல் ஆரம்பித்துள்ளதாக, தமக்கு அறிவிக்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா கேசரிக்கு தெரிவித்தார். எனினும் 21 ஆம் திகதி  நண்பகலாகும் போது குறித்த கப்பலின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. எனினும்  விட்டு விட்டு தீ பரவல்கள் ஏற்படுகின்றமை அவதானிக்கப்பட்ட  நிலையில், கடற்படையின் சிறப்பு தீயணைப்பு பிரிவினர் உள்ளடங்கிய குழுவினர்  குறித்த கப்பலை சூழ விஷேட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக கெப்டன் இந்திக டி சில்வா மேலும் கூறினார்.

தீ பரவல் குறித்த தகவல் கடற்படையினருக்கு கிடைக்கப் பெற்றதும், கடற்படையின்  ஸ்ரீ லங்கா சாகர,  சிதுரல ஆகிய  ஆழ் கடல் கண்கானிப்பு கப்பல்கள்,  அதிவேக தாக்குதல் படகொன்றும்  தீயணைப்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  இதனைவிட துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான 3 டக் படகுகளும் தீயணைப்பு பணிகலில் ஈடுபட்டு வந்தன.

இந்நிலையிலேயே பல மணிநேர போராட்டத்தின் பின்னர் கடந்த 21 ஆம் திகதி தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் இலங்கையின் கடல் பிராந்தியத்தில் நிலவும் சீரற்ற கால நிலை ( பலத்த காற்றுடன் கூடிய நிலை) காரணமாக, நேற்று முன் தினம் குறித்த கப்பலில் தீ மிக வேகமாக பரவ ஆரம்பித்தது. இதன்போது வெடிப்புச் சம்பவங்களும் பதிவாகின. நேற்றுவரை கப்பலில் இருந்த பல கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளன. அதன் எண்ணிக்கையை சரியாக கூற முடியாது என களத்தில் உள்ள கடற்படை குழுவுக்கு தலைமையளிக்கும் கட்டளை அதிகாரி குறிப்பிட்டார். 

இவ்வாறான பின்னணியில் நேற்றைய தினம் காலையும்  தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக விமானப்படையின் உதவி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க கேசரியிடம் கூறினார். 

இதன்போது 425 கிலோ தீயணைப்பு இரசாயனம் கப்பல் மீது தூவப்பட்டதுடன், கப்பலின் தற்போதைய நிலை தொடர்பில் துல்லியமான புகைப்படங்களை எடுத்து, கப்பல் மீட்புக் குழுவினருக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையில், குறித்த சரக்குக் கப்பலின் தீயை அணைக்க, கப்பல் மீட்புக் குழுவும், கடற்படை, விமானப்படை ஆகியன இணைந்து செயற்படும் நிலையில்,  கப்பல் வெடித்து எண்னெய் கசிவு ஏற்பட்டால் அதனை கையாளத் தக்கவிதமான தயார் படுத்தல்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. -வீரகேசரி பத்திரிகை- (எம்.எப்.எம்.பஸீர்)

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter