கண்டி முஸ்லிம்களிடத்தில் கூடுதல் எச்சரிக்கை தேவை

கண்டி முஸ்லிம்களிடத்தில் கூடுதல் எச்சரிக்கை தேவை – பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் வலியுறுத்து

கண்டி மாவட்டத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. நாளாந்தம் 10 தொடக்கம் 15 பேர் மரணமடைகின்றனர். கடந்த இரு வார காலத்திற்குள் 10 இற்கும் மேற்பட்ட ஜனாஸாக்கள் அடக்கம் செய்வதற்காக ஓட்டமாவடிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எம். எச். அப்துல் ஹலீம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,

கண்டி மாவட்டத்தில் நாளாந்தம் நூற்றுக்கணக்கான கொரோனா தொற்றாளர்கள் இணங் காணப்படுகின்றனர். வீரியமுள்ள கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டு 10 தொடக்கம் 15 உயிரிழப்பு சம்பவங்கள் தினமும் பதிவாகின்றன. இது நிலமை மோசமடைந்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

அத்துடன், முஸ்லிம் கிராமங்களிலும் நாளாந்தம் கொரோனா தொற்றுக்குள்ளானோர் அடையாளம் காணப்படுவதுடன், பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த இரு வாரங்களில் 15 வரையிலான ஜனாஸாக்கள் அடக்கம் செய்வதற்காக ஓட்டமாவடி பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. எனவே முஸ்லிம்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்.

கண்டி மாவட்டத்தில் இதுவரையில் சுமார் 40 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொவிட் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். நாவலப்பிட்டி பகுதியில் மாத்திரம் சுமார் பத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. கம்பளை, உடுநுவர, கடுகஸ்தோட்டை, தெல்தெனிய, தெல்தோட்டை மற்றும் கண்டி மாநகர எல்லை பகுதிகளில் மரணங்கள் பதிவாகியுள்ளன. எனவே மக்கள் மிகுந்த ஆவதானத்துடன் செயற்பட வேண்டும்.

செயற் திறன் மிக்க அரசாங்கம் என கூறிக்கொள்ளும் இவர்களால் கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. சுகாதார தரப்பினரை ஒருபோதும் குறை கூற முடியாது. அவர்கள் பல முறை எச்சரிக்கை விடுத்த போதிலும் அரசாங்கம் அதனை அலட்சியம் செய்தது. அரசாங்கத்தின் பொடுபோக்கு நிலையின் விளைவை அப்பாவி பொதுமக்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Read:  மின் துண்டிப்பு நடைமுறையில் மாற்றம்

சர்வதேச உதவிகளை பெற்று கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிகள் மேற்கொள்ள மேலும் தாமதித்தால் நாட்டின் நிலைமை இன்னும் மோசமடையலாம். நாட்டு மக்களின் நலனை முற்படுத்தி அரசாங்கம் துரிதமாக செயற்பட வேண்டும் என்றார்.