பயணக்கட்டுப்பாடுகள் ஜூன் 7ஆம் திகதி வரை நீடிப்பு

தற்போது அமுலில்  உள்ள  நாடளாவிய  பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.இதனை  இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளை 25 ஆம் திகதியும் 31 ஆம் திகதியும் ஜுன் மாதம் 4 திகதியும் பயணக் கட்டுப்பாட்டில் தளர்வு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக இம்மாதம் 31ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று இடம்பெற்ற கொவிட் தடுப்பு செயல்பாட்டு மையத்தின் விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 31ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணத்தடை தளர்த்தப்பட்டு அன்றைய தினம் இரவு 11 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என்வும், பின்னர் ஜூன் 4ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு மீண்டும் பயணத்தடை தளர்த்தப்பட்டு அன்றைய தினம் இரவு 11 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலப்பகுதியில் பொதுமக்கள் அருகில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, முன்பு அறிவிக்கப்பட்டதைப் போன்று நாளை (25) அதிகாலை 4 மணிக்கு பயணத்தடை தளர்த்தப்பட்டு நாளை இரவு 11 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.