குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தடுப்புக்காவல் உத்தரவிலிருந்து விடுவிக்குமாறு கோரி உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ரிஷாத் பதியுதீனின் சட்டத்தரணிகளால் குறித்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், குறித்த திணைக்களத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் , குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கடந்த தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் 3 மாத தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரிஷாட் பதியுதீன் எம்.பி. பின்வருமாறு குறிப்பிட்டார்.
எந்த குற்றமும் சுமத்தப்படாது , ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி என்னை மூன்று மாதங்களாக தடுத்துவைத்திருப்பது எவ்விதத்தில் நியாயம்? நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதனை நீதிமன்றத்தின் முன்னால் கொண்டுசெல்ல வேண்டும். அல்லது அதனை சட்ட மா அதிபருக்கு அனுப்பி என்னை கைதுசெய்வதற்கான அனுமதியை பெற்றிருக்க வேண்டும். ஆனால், அது எதுவும் செய்யாது 22 நாட்களாக என்னை அந்த நான்காவது மாடியில் தடுத்துவைத்திருக்கின்றார்கள்.
என்னை அழைத்துச்சென்று என்னுடைய அமைச்சின் செயலாளர், அமைச்சின் மேலதிக செயலாளர் யார்? அவர்களுடன் தொலைபேசியில் பேசினீர்களா போன்ற கேள்விகளையே கேட்டனர். என்னை போன்ற சிறுபான்மையின தலைவரை கைது செய்து சிறையில் வைத்திருப்பதை விரும்பாத சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இந்த நாட்டில் இருப்பார்கள். அரசியல் தலைமைகள், சிவில் அமைப்புகள் என்பனவும் இருக்கும்.
ஐந்து முறை மக்களால் தெரிவுசெய்யப்பட்டு 20 வருடங்களாக நாடாளுமன்றத்தில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் மீது எவ்வித குற்றச்சாட்டையும் நாடாளுமன்றத்தில் முன்வைக்காது, எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லாத நிலையில் யாரோ ஒரு மதத் தலைவரை திருப்திப்படுத்துவதற்காக சிறுபான்மையின முஸ்லிம் சமூகத்தின் அதிகூடிய வாக்குளைப் பெற்ற ஒரு கட்சியின் தலைவரை தடுத்துவைத்து, என் தொடர்பான எவ்வித சாட்சியங்களையும் நீதிமன்றத்தில் முன் வைக்காது 22 நாட்களாக தடுத்துவைத்திருப்பது எந்தவிதத்தில் ஜனநாயகமாகும்.
ஒரு சிறுபான்மையின சமூகத்தின் தலைவரை – ஜனநாயக கட்சியின் தலைவரை இவ்வாறு கைது செய்து தடுத்துவைத்திருப்பதன் ஊடாக சிறுபான்மையின மக்களுக்கு சொல்லும் செய்தி என்ன? நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தாது, ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தைக் கொண்டு 22 நாட்களாக என்னை தடுத்துவைத்துள்ளனர். ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தைக்கொண்டு என்னை தடுத்துவைத்திருப்பது எந்தவிதத்தில் நியாயம்? நான் ஏதேனும் குற்றம் செய்திருந்தால் அதனை நிரூபித்து நாட்டுக்கு வெளிப்படுத்துங்கள். நீதிமன்றத்தில் முன்வையுங்கள். அப்படியே நான் குற்றம் செய்திருந்தால் எனக்கு மரணதண்டனை தாருங்கள் என இந்தச் சபையில் கோரிக்கை விடுக்கின்றேன். நான் எவ்வித குற்றமும் செய்யவில்லை. ஏப்ரல் தாக்குதலுடன் எனக்கு அணுவளவும் தொடர்பில்லை. அதனை நிரூபிக்க என்னை பலமுறை சிஐடிக்கு அழைத்து விசாரணை செய்துள்ளனர்.
அதேபோன்று நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கூட எனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையுமில்லை எனக் கூறப்பட்டது. மேலும், ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் எவ்வித குற்றச்சாட்டுகளும் முன்வைக்காத நிலையில் இரவோடு இரவாக கைது செய்து 22 நாட்களாக தடுத்து வைத்துள்ளனர்.
ரிஷாட் பதியுதீனின் அந்த கருத்துகளில் ஓர் உண்மை தொக்கி நிற்கின்றது. ஜனநாயக அரசியல் செய்யும் கட்சியின் தலைவர் ஒருவரை கேட்டு கேள்வியின்றி திருடனை அழைத்துச்செல்வதுபோல் கொண்டு சென்று நாட்டாமை கணக்கில் தீர்ப்பை வழங்க முயலும் அரசின் இரும்புக்கரங்கள் தொலைவில் தெரிகின்றதென்பது அந்த உண்மையாகும்.
ரிஷாட் பதியுதீன் மட்டுமல்ல, ஒவ்வொரு அரசின் அடக்குமுறைகளாலும் தமிழ் பேசும் மக்கள் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்தமை வரலாறாக இருக்கிறது. கைதாகி சிறைகளில் வாழ்க்கையின் பாதிக்காலத்தை தொலைத்தவர்களும், அரசியல் கைதிகளாக அந்தரித்துக்கொண்டிருப்பவர்களும், கைதாகி காணாமல்போனவர்களும், பிள்ளைகள் கைதானதால் பெற்றோர் உற்றார் மனநோயாளர்களாகி மடிந்துபோனதும் வரலாறாக இருக்கிறது.
ரிஷாட் பதியுதீன் மீதான விசாரணை நடந்து அவர் குற்றவாளி என்றால் தண்டனை வழங்கப்பட வேண்டும். இல்லையேல் நிரபராதி எனில் அவர் விடுதலை செய்யப்படவேண்டும். அரசியல் காரணங்களுக்காக அவரை தடுத்துவைப்பதன்மூலம் அரசு நீதிதேவதையின் கண்களை கட்டிவிட்டிருக்கின்றது. அதேசமயம் ரிஷாட்டுக்கு அவர் சார்ந்த மக்களிடையே ஆதரவை அதிகரிக்கவும் செய்திருக்கிறது அரசு.