12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து பரிசீலிக்கவும் Dr. தீபால் பெரேரா

நாடளாவிய ரீதியில் ஆயிரத்திற்கும் அதிகமான சிறுவர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலின் முதலாம் மற்றும் இரண்டாம் அலைகளின் போது வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையான சிறுவர்களே தொற்றுக்குள்ளாகினர். எனினும் தற்போது வைரஸ் தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது பிள்ளைகளை இந்தத் தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டுமெனக் கருதும் பெற்றோர்கள், அவர்களை வீடுகளிலேயே வைத்திருப்பது மாத்திரம் போதுமானதல்ல.

மாறாக அவர்கள் வெளியிலிருந்து வீடுகளுக்கு கொவிட் – 19 வைரஸைக் காவிச் செல்லாது இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரையில் 5 சிறுவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். 

சிறுவர்களுக்குத் தடுப்பூசி ஏற்றுவதை விடவும் அவர்களுக்குத் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பது சிறந்ததாகும் என்றும் மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸிலுள்ள அபுதாபி போன்ற நகரங்களில் சிறுவர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

சைனோபார்ம் தடுப்பூசியை 16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்க முடியும் என்பதுடன் ஃபைஸர் தடுப்பூசியை 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கமுடியும் என்று கூறியிருக்கும் தீபால் பெரேரா, இதனால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டிருப்பதாக அவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகளில் கூறப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -வீரகேசரி பத்திரிகை-

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter