பௌத்தர்களிடையே ஆதிக்கத்தை மேம்படுத்தும் பொதுபலசேனா

பௌத்தர்களிடையே ஆதிக்கத்தை மேம்படுத்தும் பொதுபலசேனா, அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிக்கை

பொதுபல சேனா அமைப்பு இலங்கையில் பெரும்பான்மை இனமாக பௌத்தர்களின் ஆதிக்கத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க அறிக்கையொன்று குற்றம் சுமத்தியுள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக் களம்,சர்வதேச சமய சுதந்திரம் தொடர் பாக வெளியிட்டுள்ள 2020 ஆம் ஆண்டுக்கான அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சிவில் சமூக குழுக்களின் கருத்துப்படி சமூக ஊடகங்கள் சமய ரீதியான சிறுபான்மை இனத்தின்மீது வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டு பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பத்திரிகை செய்திகள் மற்றும் சிவில் சமூகத்தின் கருத்துப்படி பொதுபல சேனா போன்ற தேசிய அமைப்புகள் பெரும்பான்மை இனமான பௌத்த மக்களின் ஆதிக்கத்தை மேம்படுத்தும் வகையில் சிறுபான்மை இன மக்களை ஏற்றுக் கொள்ள மறுத்து வருகின்றன. குறிப்பாக சமூக ஊடகங்களில் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்களுக்கு எதிராக வெறுப்புணர்ச்சியைத் தூண்டி விடுபவர்களுக்கு எதிராக அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதில்லை என சிவில் சமூக அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன எனவும் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

2020 மார்ச், ஜூன் மாதங்களுக்கிடையில் ஒன்லைனில் (Online) வெளியான இனங்களுக்கிடையில் வெறுப்புணர்ச்சியைத் தூண்டும் வகையிலான பேச்சுக்களில் (சிங்களம், தமிழ், ஆங்கிலம் மொழிகளில்)58 வீதமானவை பல்வேறு வகையில் முஸ்லிம்களை அல்லது இஸ்லாத்தைத் தாக்குவதாகவே அமைந்துள்ளன. அத்தோடு 30 வீதமானவை கிறிஸ்தவர்களையும் 5 வீதமானவை தமிழர்கள் அல்லது இந்து மதத்தைத் தாக்குவதாக அமைந்துள்ளன.

2020 ஜனவரியில் முஸ்லிம் டாக்டரான சியாப்தீன் ஷாபி மீதான குற்றச்சாட்டொன்று தொடர்பில் விசாரணையொன்று நடாத்தப்பட்டது. டாக்டர் ஷாபி பல வருடங்களாக சிங்கள பெண்களுக்கு பலவந்தமாக கருத்தடை (மலடாக்கும்) அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு வந்தாக வைத்தியத்துறையைச் சேர்ந்த 76 பணியாளர்கள் விசாரணையின்போது சாட்சியமளித்தனர்.

Read:  கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவிப்பு

கருத்தடை சத்திரசிகிச்சை குற்றச்சாட்டு தொடர்பில் ஆராயுமாறு வைத்திய நிபுணருக்கு உத்தரவிடப்பட்டுள்ளபோதும் 2019 முதல் அது நிலுவையிலேயே உள்ளது. இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை. அத்தோடு டாக்டர் ஷாபி சந்தேகத்துக்கிடமான வகையில் சட்டவிரோதமாக சொத்துகள் திரட்டியதாக கைது செய்யப்பட்டு 2019 இல் விடுதலை செய்யப்பட்டார். சமூக ஊடகங்கள் அவர் சிங்கள பெண்களுக்கு கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தியதையடுத்து அவர் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் அவர்மீது எந்தவொரு குற்றத்துக்கும் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படவில்லை. என்றாலும் பொலிஸாரின் வேண்டுகோளுக்கிணங்க மஜிஸ்திரேட் நீதிவான் வழக்கினை 2021 மார்ச் மாதம் வரை தொடர்ந்தார்.

கொவிட் 19 தொற்று நோய் பரவல் தொடர்பிலும் முஸ்லிம்களுக்கு எதிராக சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் பிரசாரம் செய்யப்படுவதாக முஸ்லிம் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தகவல்களின்படி 2020 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முஸ்லிம்கள் வேண்டுமென்றே கொவிட் 19 தொற்று நோயைப் பரப்புவதாக சமூக ஊடகங்களில் பொய் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.

அதனால் முஸ்லிம்களின் வர்த்தகத்தை பகிஷ்கரிக்கும்படியும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை அதிகாரிகள் மறுக்கவுமில்லை. கொவிட் 19 வைரஸ் தொற்று காலத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக தொடர்ந்து விஷமிகளால் வெறுப்புணர்வு தூண்டப்படுவதாக பதில் பொலிஸ்மா அதிபரிடம் புகார் செய்யப்பட்டது.

ஏப்ரல் 12 ஆம் திகதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் உட்பட பல முஸ்லிம் அமைப்புகள் மற்றும் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் என்பன பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்திருந்தன. கடிதத்தில் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கும்படியும் கோரிக்கை விடுத்திருந்தன. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கையின்படி 2020 நவம்பர் 10 ஆம் திகதி அரசாங்கம் கொவிட் 19 தொற்று நோயால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியிருந்த நிலையில், பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், வஹாப்வாதிகள் சமூகத்துக்குள் ஊடுருவுவதாக ஊடகங்களில் பிரசாரம் செய்தார்.

Read:  உலமா சபையின் தலைமைப் பதவியைத் தொடர்வாரா ரிஸ்வி முப்தி?

இனம் மற்றும் சமய ரீதியிலான சிறுபான்மை மக்கள் கௌரவப்படுத்தப்பட வேண்டும். அவர்களை சமாதானப்படுத்தி ஒருமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் அலைனா பிடெப் லிட்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் மற்றும் தூதுவராலய அதிகாரிகள், ஜனாதிபதி, பிரதமர், மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SOURCEவிடிவெள்ளி 21-5-21