இந்தியாவின் இன்றைய நெருக்கடிக்கு தவறான கணிப்பே காரணம்: அமெரிக்க தலைமை மருத்துவர் தெரிவிப்பு!

(ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்) இந்தியா கொரோனா வைரஸ் பரவல் முடிந்துவிட்டதாக நினைத்து முன்கூட்டியே பொருளாதாரத்துக்கான கதவை திறந்துவிட்டதுதான் இந்தியாவை இன்று கடுமையான நெருக்கடிக்கு தள்ளியிருக்கிறது என அமெரிக்க ஜனாதிபதியின் தொற்று நோயியல் தலைமை மருத்துவ ஆலோசகர் அன்டோனி பாஸி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனாவின் 2-வது அலையில் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். மருத்துவப் பணியாளர்கள், ஒக்சிஜன், படுக்கைகள், மருந்துகள், தடுப்பூசிகள் என அனைத்தும் பற்றாக்குறையாக இந்தியாவில் இருந்து வருகிறது. இந்தியாவின் நிலையைப் பார்த்து உலக நாடுகளும் உதவிக்கரம் நீட்டியும் வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவின் மருத்துவம், கல்வி, தொழிலாளர் மற்றும் ஓய்வூதிய செனட் குழுவிடம், கொரோனா வைஸ் பரவல் குறித்து அமெரிக்க ஜனாதிபதியின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி பாஸி நேற்று விளக்கமளித்த போது கூறியதாவது:-

”இந்தியாவில் இப்போது கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நெருக்கடிக்குக் காரணம் என்பது இந்தியாவின் தவறான கணிப்புத்தான். கொரோனா வைரஸ் பரவல் முடிந்துவிட்டதாக இந்தியா பொருளாதாரத்துக்காக நாட்டை திறந்துவிட்டார்கள். ஆனால், என்ன நடந்தது, மீண்டும் கொரோனா வைரஸின் 2வது அலையில் சிக்கி மோசமான விளைவுகளைச் சந்தித்து வருகிறார்கள்.

அமெரிக்கா இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால், எந்தக் காரணத்தைக் கொண்டும் சூழலைத் தவறாக எடைபோடக் கூடாது. இரண்டாவதாக, சுகாதாரம், எதிர்காலப் பெருந்தொற்றுக்கான முன்தயாரிப்பு போன்றவற்றை அவசியமாக்க வேண்டும். குறிப்பாக அமெரிக்காவின் மருத்துவக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும். கடந்த காலங்களில் அமெரிக்கா வலுவான மருத்துவக் கட்டமைப்பை வைத்திருந்ததால்தான் நம்மால் பெருந்தொற்றையும் கட்டுப்படுத்த முடிந்தது.

3-வதாக உலகளவில் வரும் பெருந்தொற்றுக்கு உலகளவில் ஒன்று சேர்ந்து உதவ வேண்டும், ஒட்டு மொத்தமாக கவனம் செலுத்தி, பொறுப்பேற்று, ஒரு நாடு மட்டுமல்லாமல் பல நாடுகளும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். குறிப்பாக தடுப்பூசிகளை உலகளவில் பரவலாக்க வேண்டும்.

கொரோனா போன்ற வேறு வைரஸ்கள் தொடர்ந்து உலகளவில் மீண்டும் பரவத் தொடங்கினால் அமெரிக்காவுக்கு மேலும் அச்சறுத்தலாகும். இந்தியாவில் உள்ள உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் வித்தியாசமானதாகவும், ஆபத்து நிறைந்ததாகவும் இருக்கிறது. இதுபோன்ற சில பாடங்களை அமெரிக்கா இந்தியாவிடம் இருந்து எடுக்கலாம்.

கொரோனாவிலிருந்து முழுமையாக ஒரு நாடு தப்பிக்க 70% முதல் 85% வரை தமது நாட்டு மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும். அதிகமான மக்களுக்கு தடுப்பூசி கிடைத்தாலே, கொரோனாவின் பாதிப்பு படிப்படியாகக் குறைந்துவிடும் என அன்டோனி பாஸி தெரிவித்தார்.

Check Also

இஸ்ரேலில் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலனை!

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்காக இஸ்ரேல் அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்துள்ளது. உலகளவில் கொரோனா …

You cannot copy content of this page