இறுக்கமான சட்டம் உடன் அமுலாகிறது!

  • பொலிஸாரின் விடுமுறை இரத்து
  • மாகாண எல்லைகளை மீறினால் கைது
  • சுற்றுலா செல்வோருக்குத் தடை
  • தங்குமிடம் கொடுத்தல் குற்றம்
  • அரச ஊழியர்களுக்கு விசேட அனுமதி

நாட்டில் தற்போதைய கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்திற்கொண்டு சுகாதார பாதுகாப்பு, சட்டத்திட்டங்களை கடுமையாக அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் கொரோனா தொற்றுப்பரவலை கருத்திற்கொண்டு, இன்று (நேற்று) நள்ளிரவு முதல் மே 30ஆம் திகதி வரை அனைத்து மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பயணக்கட்டுப்பாடானது தேவையற்ற விதத்தில் பயணிப்போருக்கு மாத்திரமே செல்லுபடியாகும்.

அதன்படி, அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த வேறு தேவைகளுக்காக விடுமுறை, சுற்றுலா, தனிப்பட்ட தேவைகள், ஹோட்டல்களில் தங்குவதற்காக உறவினர்களை பார்ப்பதற்கு போன்ற விடயங்களுக்காக எந்தவொரு நபருக்கும் மாகாணங்களிலிருந்து வெளியேறுவதற்கும் வேறு மாகாணங்களுக்குள் உள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்படாது.

மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை முன்னெடுப்போருக்கு மாத்திரம் மாகாணங் களுக்கிடையே பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்படும்.

அதன்படி, சுகாதார சேவை, பொலிஸ் மற்றும் முப்படையினரின் சேவை, பாதுகாப்பு, நீர், மின்சாரம், தொழில்நுட்ப சேவைகள், துறைமுகம், விமான நிலைய சேவைகள், ஊடக சேவை, நீதிமன்ற செயற்பாடுகள், வணிக செயற்பாடுகள், அரச மற்றும் தனியார் சேவைகளும் தங்கு தடையின்றி முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்படும்.

இந்நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பொலிஸாரின் சோதனைக்குப் பின்னர், மாகாணங்களுக்கிடையே பயணம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்.

விவசாய உற்பத்திகள், மருந்து உற்பத்திகள் செய்யும் அரச, தனியார் நிறுவனங்களுக்கு பொலிஸாரின் சோதனைக்குப் பின்னர் அனுமதி வழங்கப்படும். அத்தோடு, மாகாணங்களி லிருந்து வெளியேறும்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக பொலிஸாருக்கு அதிருப்தி ஏற்படுமாயின், அது தொடர்பில் தெளிவூட்டுவதற்காக பொலிஸாருக்கு ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

அனைத்து மாகாணங்களின் எல்லையிலும் பொலிஸார், இராணுவம் மற்றும் முப்படையினரும் பாதுகாப்புச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், சோதனை சாவடிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், மாகாணங்களுக்கிடையில் மாற்றுவழிகளை பயன்படுத்தி பயணிக்க முற்படுவோர் தனிமைப் படுத்தல் சட்டத்தை மீறியதாக கருதப்பட்டு அவருக்கு குற்றவியல் சட்ட கோவைக்கமைய சட்ட நடவடிக்கையெடுக்கப்படும்.

குறித்த காலப்பகுதியில் சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கமைய, கலந்துரையாடல்கள், செயலமர்வுகளுக்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், கண்காட்சிகள், திரையரங்குகள், சமய நிகழ்வுகள், கலாசாரம் சார்ந்த நிகழ்வுகள், இரவு களியாட்டங்கள், மதுபான கொண்டாட்டங்கள், அல்லது வேறு கொண்டாட்டங்கள் உள்ளிட்ட அனைத்து ஒன்று கூடல்களுக்கும் முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதனை மீறி செயற்படுவோர் கைது செய்யப்படுவதுடன், அதனை ஏற்பாடு செய்தவர்களும் ஆதரவு வழங்கியவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கையெடுக்கப்படும். மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாட்டின்போது, அனுமதிப்பத்திரம் வழங்கப்படாது. மாறாக, நுழைவாயிலில் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அவ்வாறான, சோதனைக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கவேண்டும்.

அத்தோடு, ஏதேனும் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்படுமாயின் அந்த பகுதிக்குள் இருந்து எந்தவொரு நபருக்கும் உள்நுழையவோ வெளியேறவோ முடியாது. மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள பொலிஸாரின் சேவைகள் முக்கியமாக இருந்தாலும் அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டாம் என நாங்கள் அறிவித்துள்ளோம்.

மேலும், இப்பகுதிகளில் இருப்போர் தங்களது வீடுகளுக்குள்ளேயே தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்ய வேண்டியது கட்டாயமாகும்.

பல்பொருள் அங்காடிகள், சுப்பர் மார்க்கட், விற்பனை நிலையங்கள், கடைகள் உள்ளிட்ட பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் சுகாதார வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கைக்கு ஏற்ப நபர்களை உள்வாங்குவது கட்டாயம். குறிப்பாக, அங்குள்ள இடவசதிகளுக்கு அமைய 25 வீதமானவரையே அனுமதிக்க முடியும்.

இதனை மீறி செயற்படும் நிறுவனங்களை தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைவாக மூடப்படும் அல்லது சீல் வைக்கப்படும். எனினும், பொதுமக்களுக்குத் தேவையான, உணவு பொருட்கள், மருந்தக சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தடையின்றி தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

பொது போக்குவரத்து சேவைகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாத்திரமே பயணிகளை ஏற்றிச்செல்ல முடியும். முச்சக்கர வண்டிகளில் சாரதி மற்றும் மேலும் 2 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும்.

அத்தோடு முகக்கவசங்கள் கட்டாயமாக அணிந்திருத்தல் வேண்டும். இதனை மீறி செயற்படுவோர் கைது செய்யப்படுவார்கள். மேலும், அவர்களின் வாகனம் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும்.

இது தொடர்பில் ட்ரோன் கமரா மற்றும் சிவில் ஆடையுடன் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். எனவே, இன்று (நேற்று) தொடக்கம் எதிர்வரும் 30ஆம் திகதிவரை பயணக்கட்டுப்பாடு காலப்பகுதியில் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறும் அத்தியாவ சிய காரணங்கள் தவிர்ந்து வெளியில் நடமாடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும், வெளிமாவட்டங்களில் ஹோட்டல் களில் அறைகள் எடுத்து தங்குவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு, வெளிமாவட்டங்களிலிருந்து வருகை தருவோரை ஹோட்டல்களில் தங்குவதற்கு அனுமதித்தால் அந்த ஹோட்டல்கள் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆகவே, வெளிமாவட்டங்களிலிருந்து வருகை தரும் யாரையும் ஹோட்டல்களில் தங்குவதற்கு இடமளிக்க வேண்டாம் என ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) நள்ளிரவு முதல் மே 30ஆம் திகதிவரை அனைத்து பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகளும் இரத்துச்செய்யப்பட்டுள்ளன. அவர்கள் தனிமைப்படுத்தப்படாத பகுதிகளில் இருந்தால் அவர்கள் சேவைக்கு வருகை தர வேண்டும். மாறாக, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்தால் அவர்கள் சேவைக்கு வருகை தர வேண்டியதில்லை. யோ.தர்மராஜ்

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page