மாவட்டங்கள் முடக்கப்பட்டால் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க விசேட பொறிமுறை

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு ஏதேனுமொரு மாவட்டம் அல்லது பிரதேசம் முடக்கப்படும் போது அவற்றுக்கான அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதற்கான முன்னாயத்த பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பது அவசியமாகும் என்று பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி குறிப்பிட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி அதன் தலைவர் பசில் ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் கூடியது.

இதன் போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய தயாரிக்கப்பட்ட பொறிமுறை சகல பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பொறிமுறையில் கூறப்பட்டுள்ளதாவது,

பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படும் போது அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் பிரதேச மட்டங்களில் தயாரிக்கப்பட்டு அவை பிரதேச செயலாளருக்கு கையளிக்கப்பட வேண்டும்.

அத்தோடு அவை நிறைவுசெய்யப்பட்டு மே மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னர், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி அறிவிக்கப்பட வேண்டுமென இவ்வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவை விநியோகம்

நீர், மின்சாரம், சமையல் எரிவாயு, எரிபொருள், தனியார் சுகாதார சேவை, தொலைத்தொடர்பு, கழிவு முகாமைத்துவம் மற்றும்  அவசர அனர்த்த நிலைமைகள்

பொருள்கள் விநியோகம்

அரிசி, மரக்கறி உள்ளிட்ட  நுகர்வோருக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் வீடுகளுக்கு விநியோகிப்பதற்காக திட்டமிட்டுள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், விநியோக வலையமைப்பு மற்றும் விநியோகஸ்தர்களுடன் இணைந்து அடிப்படை கலந்துரையாடல்களை விரைவில் முன்னெடுத்தல்.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக குறைந்த நடமாடும் வர்த்தகர்களுக்காக அனுமதியை வழங்குதல். இதன்போது  பிரதேச செயலகப் பிரிவுகளில் நடமாடும் வர்தத்க நடவடிக்கைக்காக நடமாடும் வர்த்தக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டும் என்பதுடன் மாவட்டங்களுக்குள் அல்லது  மாவட்டங்களுக்கு வெளியே உணவுபொருள்களை விநியோகிப்பதற்கு தேவையான அனுமதிப்பத்திரங்களை மாவட்ட செயலாளர்களால் விநியோகிக்கப்பட வேண்டும்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தல் அல்லது முடக்கப்பட்டால் பொருள் மற்றும் சேவை விநியோகத்தில் ஈடுபடும் தனியார் மற்றும் தனியார் நிறுவனங்கள்,விநியோகத்தர்கள், முதல் நிலை, இரண்டாம் நிலை விநியோகத்தர்கள் என அடையாளம் காண்பதற்கு நடமாடும் வர்த்தக அனுமதிப்பத்திரத்தை மக்கள் ஒன்று கூடாத வகையில் விநியோகித்தல் வேண்டும்.

அரச வங்கிகள், சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், பொருளாதார மத்திய நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் எப்போதும் சுகாதார  பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி திறந்துவைக்க நடவடிக்கை எடுத்தல்.

அரச நிறவனங்களில் அத்தியாவசிய தேவைக்கு மாத்திரம் குறைந்த பணியாளர்களை கடமைகளுக்கு அழைப்பது நிறுவன பிரதானியால் தீர்மானிக்கப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன்,  அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவன அமைச்சின் செயலாளரினால் அது தொடர்பான அறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுத்தல்.

கிராமிய மட்டங்களில் பொருள் மற்றும் சேவை விநியோக பொறிமுறையினை கண்காணிப்பதற்காக அதிகாரிகளை நியமித்து அது குறித்து பிரதேச மக்களை தெளிவுப்படுத்தி அதை பின்தொடர்வது அவசியமாகும் என அந்த ஆலோசனை வழிகாட்டலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (இராஜதுரை ஹஷான்)-வீரகேசரி பத்திரிகை-

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page