மணித்தியாலத்திற்கு 25 கோடி ரூபா கடன் பெறும் அரசாங்கமே தற்போது காணப்படுகிறது! ஜே.வி.பி

(ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்) அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கையின் காரணமாக 1950ம் ஆண்டின் பின்னர் 2020யில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அரசாங்கத்தின் சகாக்களுக்காக அநாவசிய வரி சலுகைகளை வழங்கியமையே இவ்வாறான பொருளாதார வீழ்ச்சிக்கு பிரதான காரணமாகும் என J.V.Pயின் கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.

J.V.P தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில்:-

1950ம் ஆண்டுக்கு பின்னர் 2020யில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இவ் வருடம் அதனை விடவும் சவால் மிக்க வருடமாகவுள்ளது.

காரணம் அநாவசியமாக வரிகளை விலக்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கையாகும். பெருமளவில் வரி சலுகைகள் வழங்கப்பட்ட போதிலும் , அதன் எவ்வித பயனும் மக்களுக்கு கிடைக்கவில்லை.

2020ம் ஆண்டு அரசாங்கத்தின் செலவுகள் 3 லட்சத்து நான்கு ஆயிரம் கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் மிகவும் சூட்சுமமாகவே 2019 ஐ விட 2020யில் செலவுகள் குறைவு என அரசாங்கம் காண்பித்துள்ளது.

42 ஆயிரத்து 200 கோடியை மறைத்து இந்தத் தொகையை காண்பித்துள்ளது. அதற்கமைய உண்மையில் 2020யில் அரசாங்கத்தின் செலவு 3 லட்சத்து 46 ஆயிரத்து 200 கோடியாகும்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தவறான பொருளாதார முன்னெடுப்புக்கள் இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் நாட்டை கடன்பொறிக்குள் சிக்கவைத்துள்ளது.

2019யில் அரசாங்கம் மீள செலுத்த வேண்டிய கடன்தொகை 14 லட்சத்து 15 ஆயிரத்து 500 கோடிகளாகும். 2020ம் ஆண்டாகும் போது இந்த தொகை 16 லட்சத்து 42 ஆயிரத்து 700 கோடிகளாக அதிகரித்துள்ளது.

Read:  பதுளை காதிநீதிமன்றம் மீதான பெண்ணின் குற்றச்சாட்டு: உண்மைத்தன்மை என்ன?

இதில் 15 லட்சம் கோடி மத்திய அரசாங்கத்தினால் மாத்திரம் செலுத்தப்பட வேண்டிய கடன் தொகையாகும். ஒரு வருட காலத்திற்குள் மீள செலுத்த வேண்டிய கடன்தொகை 2 லட்சத்து 27 ஆயிரத்து 200 கோடியால் உயர்வடைந்துள்ளது.

இன்று மணித்தியாலத்திற்கு 25 கோடி ரூபா கடன் பெறும் அரசாங்கமே தற்போது காணப்படுகிறது. அரசாங்கத்தின் வருமானத்தை விட வருடத்தில் அரசாங்கம் பெறும் கடன் அளவு அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தில் மாத்திரம் 45 ஆயிரத்து 400 கோடி ரூபாய்க்கு நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் வெளிநாட்டு கடன்களைப் பெறவில்லை என்று அரசாங்கம் கூறுகின்ற போதிலும் , கடன் பங்கினை பாரியளவில் அதிகரித்துள்ளது என்றார்.