கர்ப்பிணிகள் கவனம்! மகப்பேறு மருத்துவ சங்கம் எச்சரிக்கை

நாட்டில் தற்போது 3 இலட்சத்து 21 ஆயிரம் கர்ப்பிணிகள் இருக்கின்றனர். கொரோனாவிலிருந்து இவர்களை பாதுகாக்க வேண்டியது தேசிய பொறுப்பாகும். நாட்டில் பரவும் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில், 28 வாரங்களுக்கு முன்னரான கர்ப்பிணிகளுக்கு தொற்று ஏற்படுமாக இருந்தால் குழந்தைகளுக்கும் தாய்க்கும் பாதிப்புகள் ஏற்படுவது குறைவு.

எனினும், 28 வாரங்களுக்குப் பின்னரான கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுமாக இருந்தால், குழந்தைக்கும், தாய்க்கும் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாக இருக்குமென காசல் மகளிர் மருத்துவமனையின் பிரசவ மற்றும் மகப்பேறு விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (06) இடம்பெற்ற பிரசவ மற்றும் மகப்பேறு மருத்துவ சங்கத்தின் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது 3 இலட்சத்து 21 ஆயிரம் கர்ப்பிணிகள் இருக்கின்றனர். இவர்களை பாதுகாக்க வேண்டியதை தேசிய பொறுப்பாக பார்க்க வேண்டியுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் ஆயிரம் கர்ப்பிணித் தாய்மார்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், முதல் இரு அலைகளை விட தற்போதைய கொரோனா தொற்றானது வேறுபட்டதாகவுள்ளது. புதிய திரிபு கொண்ட கொரோனா தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணித் தாய்மார்களை இரு கட்டங்களாகப் பிரிக்கலாம்.

அதன்படி, 28 வாரங்களுக்கு முன்னரான காலப்பகுதி மற்றும் 28 வாரங்களுக்குப் பின்னரான காலப்பகுதி என இரண்டாகப் பிரிக்கலாம். 28 வாரங்களுக்கு முன்னரான கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் 80 வீதம் அறிகுறிகள் தென்படுவதில்லை. பி.சி.ஆர். பரிசோதனைகளின் மூலமே அவர்களுக்கு தொற்றிருப்பதை உறுதி செய்ய முடிகின்றது. ஏனைய, 20 வீதமானோருக்கு தடிமன், வரட்டு இருமல் போன்ற அறிகுறிகள் தென்படுவதோடு, புதிய திரிபின் தாக்கம் அதிகரிக்கும்போது குறித்த கர்ப்பிணிகள் நியூமோனியா தாக்கத்திற்கு முகம் கொடுக்க நேரிடும். நியூமோனியா ஏற்படுமாக இருந்தால் அது சற்று ஆபத்தானது.

28 வாரங்களுக்கு பின்னரான கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுமாக இருந்தால் ஆபத்தானது. அவ்வாறெனின் குழந்தைக்கும், தாய்க்கும் ஏற்படும் பாதிப்புகள் அதிமாக இருக்கும். ஆகவே, 28 வாரங்களைக் கடந்த கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் மிக அவதானமாக செயற்பட வேண்டும். இந்த கர்ப்பிணிகளையும் நாங்கள் ஆபத்து குறைந்தவர்கள், அதிகமானவர்கள் என இரண்டாக பிரிக்கலாம்.

இரண்டு பிரிவுகளிலும் உள்ள கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் வேறுபாடு ஏற்படும். அதன்படி, குறைந்த ஆபத்து காணப்படும் கர்ப்பிணிகளுக்கும் தொற்று ஏற்படுவதோடு, விரைவாக குணமடையவும் முடியும். அதிக ஆபத்துகள் காணப்படுகின்ற, அதாவது அதிக இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்த் தாக்கம் கொண்ட கர்ப்பிணிகள், 35 வயதைத் தாண்டிய கர்ப்பிணிகளுக்கு தொற்று ஏற்படுமாக இருந்தால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகமாக காணப்படும். தாய்க்கும், குழந்தைக்கும் அதிக ஆபத்துகள் ஏற்படலாம்.

குறிப்பாக, தாய்க்கு ஆரம்பத்திலேயே சுவாசப் பிரச்சினை, காய்ச்சல் ஏற்படுவதோடு, நியூமோனியா தாக்கும் ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறான, நோய் தாக்கங்களுக்கு முகம் கொடுத்தால் உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற்று தொற்று குறித்து பரிசோதனை செய்து கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம் – என்றார்.
யோ.தர்மராஜ்

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page