கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் ஹக்கீம் மௌனமாக சம்பந்தனிடம் ஒளிந்திருக்கின்றார்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் குறைக்கப்பட்டதாக சாணக்கியன் எம்.பி. நாடாளுமன்றத்தில் பச்சை பொய்யை
சொல்லியுள்ளார்.

கல்முனை செயலகத்தின் கீழ் உப செயலகம் ஒன்றே இன்றுவரை இயங்குகிறது. இதனை எந்தவொரு வர்த்தமானி அறிவித்தலும் இன்றி தான்தோன்றித்தனமாக கல்முனை தமிழ் செயலகம் என்றும் கல்முனை வடக்கு செயலகம் என்றும் சிலர் அழைத்து வந்தனர். இதனைத்தான் அரசாங்கம் உலமா கட்சி மற்றும் கல்முனை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோரின் நியாயமான கருத்தை ஏற்று முன்பிருந்ததுபோல் உப செயலகம் வடக்கு என பாவிக்கும்படி அறிவித்துள்ளது.

ஆனால், இதையெல்லாம் மூடிமறைத்து கல்முனை வடக்கு செயலகம் என்ற ஒன்று இயங்கியதாக சாணக்கியன் எம்.பி. பொய் சொல்லியுள்ளார். இவரது இந்தப் பொய்க்கு கல்முனை முஸ்லிம்களில் 95 வீதம் வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பதிலளிக்காமல் சம்பந்தனின் கூடாரத்தினுள் ஒளிந்திருக்கின்றார்.

ஆகவே, முஸ்லிம் எம்.பி.க்கள் ஒற்றுமைப்பட்டு கல்முனை செயலகத்தை இரண்டாக உடைக்காமல் காப்பாற்ற நாடாளுமன்றில் ஒருமித்து பேசவேண்டும்.

அதேபோல் வர்த்தமானி மூலம் ஒப்புதல் இல்லாத செயலகத்தை, இருப்பதாகக் காட்டி கல்முனையில் தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் பகைமையை ஏற்படுத்தவேண்டாம் என சாணக்கியன் எம்.பி. போன்றோரை கேட்டுக்கொள்கிறோம் – என உலமாக் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

உலமா கட்சியின் கல்முனை காரியாலயத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

கல்முனையில் முஸ்லிம் சமூகம் விழித்திருக்க தூங்கியவன் கண்ணில் குத்திய கதையாக பல கதைகளை தமிழ் எம்.பி.க்கள் கூறுகிறார்கள். அதிகாரத்தில் இருந்த முஸ்லிம் காங்கிரஸ் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறது.. சேவகர் பிரிவு உருவாக்கத்திலும் பெரிய சூழ்ச்சிகள் புதைந்துள்ளன.

Read:  உலமா சபையின் தலைமைப் பதவியைத் தொடர்வாரா ரிஸ்வி முப்தி?

பிரிந்துநின்று சண்டை பிடித்தாலும் கல்முனை விடயத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒருமித்து குரல்கொடுக்கிறார்கள். ஆனால், முஸ்லிம் தரப்பில் அப்படி ஒன்றுபட்டு குரல் கொடுக்க யாரும் முன்வருவதாக தெரியவில்லை.

கல்முனை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு இறைவன் கூலி கொடுப்பான். முஸ்லிம்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்ற கட்சிகள் எதிரணியிலேயே இருக்கிறது.

அதிலிருந்து 20இற்கு ஆதரவளித்த எம்.பி.க்கள் அரசுக்கு ஓரளவு ஆதரவு எனும் நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்கள். அவர்களின் தலைவர்கள் அரசை எதிர்ப்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆகவே, முஸ்லிம் சமூகம் அரசின் எதிரியாகவே காட்டப்பட்டுவருகிறது.

தமிழர்களும் இந்த நிலைப்பாட்டில் இருந்தாலும் அவர்களின் பிரச்சினைகளை பேச அரச சார்பு தமிழ் எம்.பி.க்களை அழைத்துச்சென்று அரசாங்கத்துடன் பேசுகிறார்கள். அவர்களுக்குள் சமூகம்சார் புரிந்துணர்வு இருக்கிறது. அதேபோன்று முஸ்லிம் தரப்பிலும் எமது பிரச்சினைகளை பேச 20இற்கு ஆதரவளித்த எம்.பிக்கள் செல்லும்போது அரசின் பங்காளியாக இருக்கும் தேசிய காங்கிரஸ், உலமா கட்சி போன்றவர்களை அழைத்துச் சென்றால் அது சாதகமாக அமையும் எனத் தெரிவித்தார்.

VIAமாளிகைக்காடு நிருபர்
SOURCEதமிழன் பத்திரிகை 6-5-21