தடையை மீளாய்வு செய்யுமாறு கோரி முஸ்லிம் அமைப்புக்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ், இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள முஸ்லிம் அமைப்புக்களில் பல, தம் மீதான தடையை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரி ஜனாதிபதிக்கு தனித் தனியாக கோரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளன. நேற்று மாலைவரை மூன்று அமைப்புக்கள் இவ்வாறு மீள்பரிசீலனை கோரி கடிதங்களை அனுப்பியுள்ளமை உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் சில அமைப்புக்கள் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமையை உறுதி செய்ய முடிந்தது.

தடையை எதிர்த்து உயர் நீதிமன்றில் வழக்குத் தொடுக்க முன்னர் இவ்வாறான ஒரு மீள் பரிசீலனை தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக, மீளாய்வு கோரி கடிதம் அனுப்பியுள்ள அமைப்பொன்றின் முக்கியஸ்தர் விடிவெள்ளியிடம் தெரிவித்தார்.

அதன்படி சி.டி.ஜே எலும் சிலோன் தௌஹீத் ஜமா அத், ஐக்கிய தௌஹீத் ஜமாஅதி (யூ.டி.ஜே.). அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் (ஏ.சி.டி.ஜே.) ஆகிய அமைப்புக்கள் ஜனாதிபதிக்கு மீள் பரிசீலனை கோரி கடிதங்களை அனுப்பியுள்ளன.

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் (எஸ். எல்.டி.ஜே.) ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (ஜே.ஏ.எஸ்.எம்.) போன்ற அமைப்புக்களும் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டுளதாக அறிய முடிகின்றது.

நாட்டின் சமாதானத்தை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு, பொது மக்கள் ஒழுங்கு மற்றும் சட்டவாட்சியின் நலனில் அரசாங்கத்தின் முயற்சிகளை முன்வெடுப்பதற்காக அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய 11 அமைப்புகளை தடை செய்வதாக கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

1979 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 27 ஆம் பிரிவின் கீழ் 2021 -ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஒழுங்கு விதிகளுக்கமைய குறிப்பிட்ட 11 அமைப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page