கொரோனா தொற்று அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் பாதிக் கப்பட்ட பகுதிகள் உரிய நேரத்தில் மூடக்கப்படாமையால இன்று ஆபத்து எல்லைமீறிவிட்டது. அதனால் நாட்டை முடக்கவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிச் செயலாளர் வைத்தியர் நவீன டி சொய்சா தெரிவித்துள்ளார். அத்தோடு, அரசாங்கம் உரிய நேரத்தில் உரிய முடிவுகளை எடுக்க வேண்டும். மக்களும் அரசாங்கம் எடுக்கும் முடிவுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அப்போதே . இந்தத் தொற்றிலிருந்து மீள முடியும். இல்லையேல், இந்தக் கொரோனா அலையை அதிசயங்களால் அல்லது வேறு வழிகளால்கூட தடுக்கமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க அலுவகத்தில் நேற்று (03) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பிருந்தே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறும், கூட்டங்கள், விழாக்கள் நடத்துவதை நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்துவருகின்றோம். ஆனால், ஒரு வாரத்துக்கு பின்னரே சில முடிவுகளை அரசாங்கம் எடுத்தது. அரசாங்கம் உரிய நேரத்தில் முடிவுகளை எடுக்காமையினாலேயே இன்று மக்களும் நாடும் பாரிய ஆபத்துக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், உரிய தகவல்கள் வெளியிடப் படாதிருப்பது பாரிய ஆபத்தாகியுள்ளது. தற்போது, இளைய தலைமுறையினரா பாதிக்கப்படுகின்றனர், அவர்களுக்கு ஒட்சிசன் பிரச்சினைகள் ஏற்படுகின்றதா, எந்த வயது டையோர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படுகின்றனர்? போன்ற மக்களின் பிரச்சினைகளுக்கு தொற்று நோயியல் பிரிவினர் உரிய தகவல்களை வழங்குவதாக தெரியவில்லை. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமாக இருந்தால் மக்களுக்கு அரசாங்கம் உரிய தகவல்களை வழங்கவேண்டும். இல்லையேல் பாரிய ஆபத்தை எதிர்நோக்க நேரிடும்.
நாட்டில் ஒரு இலட்ச பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்க முடிந்தாலும் சிறந்ததே. எனினும், தற்போது 25 ஆயிரத்திற்கும் அதிகமான பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டாலும் அவற்றின் முடிவுகள் உரிய நேரத்தில் கிடைக்காமையினால் பரிசோதனைகள் முன்னெடுத்ததில் எவ்வித பிரயோசனமும் இல்லை. கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் உறுதிசெய்யப்பட்டால் அவருடன் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பதற்கு தேவையான தகவல்கள் கைவசமிருக்க வேண்டும். இவ்வாறு தகவல்கள் இல்லாது எவ்வித செயற்பாடுகளையும் உரிய நேரத்தில் முன்னெடுக்க முடியாது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், இந்த வாரம் மிக அவதானமிக்கது என்று கூறினோம். இந்த நேரத்தில் முடக்கவேண்டிய பகுதிகளை முடக்கி, உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கடந்த இரு வாரங்களுக்கு முன்னரே கூறினோம். ஆனால், உரிய நேரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்கு பின்னர் ஒரு வாரம் கழித்து முடக்கப்பட வேண்டிய பகுதிகளை முடக்கியதால் எவ்வித பயனுமில்லை.
நாட்டை முடக்காது கொரோளா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு முயற்சித்தோம். எனிலும், உரிய முடிவுகளை எடுக்கத் தவறியதனால் நாட்டை முடக்கவேண்டிய நிலைமைக்கு தள்ளப் பட்டுள்ளோம். தற்போது, பல பிரதேசங்கள் முடக்கப்படுகின்றன. இந்த நிலையில், மாவட்ட ரீதியில் மாத்திரமே தகவல்கள் இருப்பதாக அமைச்சரே கூறுகின்றார். இது மிக ஆபத்தானது. அதற்கு கீழ் மட்டத்தில் தகவல்கள் இல்லை. என்றால், கிராம சேவகர் பிரிவு மட்டத்தில் எவ்வாறு முடிவெடுக்க முடியும்.
ஒரு சில கொரோனா தொற்றுக்குள்ளானோர். அடையாளம் காணப்படும்போது அந்த கிராம சேவகர் பிரிவில் முடிவுகளை எடுக்குமாறு கூறினோம். ஆனால், வாகளமும் இரு சாரதிகளும் (இரு அமைச்சர்கள்) இருந்தும் தொற்று நோயியல் பிரிவினர் உரிய எரிபொருளை (தகவல்கள்) தருவதற்கு மறுக்கின்றனர். எரிபொருள் இல்லாத வாகளத்தை செலுத்தமுடியாது.
இந்த குறைபாடுகள் தீர்க்கப்படாவிட்டால் இந்த கொரோளா அலையை கட்டுப்படுத்தினாலும் மீண்டும் ஆபத்தை சந்திக்க நேரிடும். இந்த அலையை எங்களால் கட்டுப்படுத்த முடியும்.. ஆனால், அதற்கு தேவையான உரிய தகவல்களை வழங்கவேண்டும். பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும், அரசாங்கம் உரிய நேரத்தில் உரிய முடிவுகளை எடுக்கவேண்டும். அதேபோன்று, மக்களும் அரசாங்கம் எடுக்கும் முடிவுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அப்போதே. இந்த தொற்றிலிருந்து மீள முடியும். இல்லையேல், இந்த கொரோளரீ அலையை அதிசயங்களால் அல்லது வேறு வழிகளால் தடுக்க முடியாது – என்றார். (யோ.தர்மராஜ் – Tamilan 4-5-21)