“புர்கா தடை” என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள் – பாதுகாப்பு செயலாளர்

நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்திலும் முழுமையாக முகத்தை மூடும் முகக்கவசங்களுக்கு தடை விதித்துள்ளோம். மாறாக ஒரு மதத்தை இலக்கு வைத்து எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை. எனவே ‘புர்கா தடை’ என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாதுகாப்பு செயலாளர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

முகக்கவசம் தடைசெய்யப்பட்டமை புர்கா தடை எனக் கூறுகின்றனர். ஆனால் அவ்வாறு கூறுவது தவறானதாகும், நாம் ஒரு மதத்தை இலக்குவைத்து முன்னெடுக்கும் நடவடிக்கை அல்ல

இது. முகக்கவசம் தடை என்பதற்கு “புர்கா தடை” என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். முழுமையாக முகத்தை மறைக்கும் முகமூடிகளை நாம் தடை செய்துள்ளோம். அது குறித்த சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கான சட்ட வரைபுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால் எக்காரணம் கொண்டும் எவரையும் நெருக்கடிக்குள் தள்ளவோ, புறக்கணிக்கவோ இந்த தீர்மானம் எடுக்கவில்லை. மாறாக பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்படுகின்றது.

மனித உரிமைகளை அதிகளவில் பின்பற்றும் சுவிட்சர்லாந்தில் கூட முகக்கவசம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே நாம் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கின்றோம். ஆனால் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த தடைகள் குறித்த முரண்பாடுகள் ஏற்படும் பட்சத்தில் அப்போதைய நிலையில் இது குறித்து கவனம் செலுத்துவதற்கும் தயாராக உள்ளோம் என்றார். (ஆர்.யசி)

SOURCEவிடிவெள்ளி பத்திரிகை 30-4-21