முஸ்லிம் பிரதேசங்கள் முடக்கப்படலாம் – எம்.எச்.ஏ. ஹலீம் MP

நோன்புப் பெருநாளுக்கான ஆடைகள் மற்றும் பொருட்கள் கொள்வனவு செய்வதில் முஸ்லிம் மக்கள் ஆர்வம் செலுத்திவரும் நிலையில் முழுமையாக சுகாதார வழி காட்டல்களை பின்பற்றவேண்டும் என முன்னாள் முஸ்லிம் சமய விவகார அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஏ. ஹலீம் வலியுறுத்தியுள்ளார்.

வீரியமிக்க கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் சுகாதார வழிகாட்டல்களை புறந்தள்ளி நடந்தால் முஸ்லிம் பிரதேசங்கள் முடக்கப்படுமாயின் நாம் முன்னர் அனுபவித்த இன்னல்களை மீண்டும் அனுபவிக்க தேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த சில வருடங்களாக நோன்பு காலத்தை நெருக்கடிமிக்க சூழ்திலையில் கடத்த வேண்டிய துர்ப்பாக்கியத்திற்கு ஆளாகியிருக்கிறோம். இம் முறை கொரோனா வைரஸின் தாக்கம் நாட்டின் பல பாகங்களிலும் மிக துரிதமாக பரவிவருகின்றது. ரமழான் மாதத்தின் அரைவாசிப் பகுதி நிறைவ டைந்திருக்கும் நிலையில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை ஆரம்பித் திருப்பது மிகவும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

நோன்பு காலத்தில் நமது அமல்களை மட்டுப்படுத்திக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றோம். குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களில் சுகாதாரத் துறையினரின் அறிவித்தல்களையும் வழிகாட்டல்களையும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திக்கொள்ள விரும்புகிறேன்.

ஏனெனில், சுகாதாரத்துறையின் அறிவித்தலின்படி தற்போது பரவியிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம்மிக்கதும் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கிறது. அத்துடன், துரிதமாக தொற்றிக்கொள்ளும் வீரியத்தை கொண்டுள்ளதாக அறியப்பட்டிருக்கிறது. இந்த வைரஸ் வயதானோரை மாத்திரமின்றி இளவயதினரையும் இலகுவாக தொற்றிக்கொள்ளும் நிலைமை இருப்பதாக இனங்காணப்பட்டிருப்பதோடு காற்றில் ஒன்றரை மணித்தியாலம் இருக்கும் என்றும் சுகாதரத்துறையினர் எச்சரித்திருக்கின்றனர்.

எனவே, நாம் கட்டாயமாக முகக் கவசத்தை அணிந்துகொள்ள வேண்டும். முகக்கவசம் அணியாது கவனயினமாக இருப்போருக்கு இந்த வைரஸ் இலகுவாக தொற்றக் கூடிய சந்தர்ப்பம் இருப்பதையும் நாங்கள் மறந்துவிடக் கூடாது. விசேடமாக முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். நகர்ப்புறங்களில் பொருட்கள் கொள்வனவும் ஆடை தெரிவுகளை மேற்கொள்ளவும் ஆரம்பித்திருக்கின்றனர்.

இச்சந்தர்ப்பங்களில் முழுமையாக சுகாதார ஆலோசனைகளை பின்பற்றவேண்டும் என்று மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். நாங்கள் கவனயினமாக நடந்து கொண்டாலோ அல்லது ஒரு சிவர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டால் முஸ்லிம் பிரதேசங்கள் முடக்கப்படும் வாய்ப்பு ஏற்படலாம். அக்குறணை, அட்டுலுகம. மினுவங்கொடை, கல்முனை, காத்தான்குடி கொழும்பு நகர் மற்றும் களுத்துறை உள்ளிட்ட பகுதிகள் கடந்த காலங்களில் முடக்கப்பட்டபோது அனுபவித்த பலவிதமான கஷ்ட நஷ்டங்களை மீண்டும் சந்திக்க நேரிடலாம் என்பதையும் ஒவ்வொரு முஸ்லிமும் நினைவிற்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமன்றி எமது பள்ளிவாசல்களில் இது தொடர்பாக மக்களை அறிவுறுத்துமாறும் வேண்டிக்கொள்கிறேன் என்றார்.

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

You cannot copy content of this page