புர்கா தடை – எப்போது அமுலுக்கு வரும்?

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை மிக வீரியத்துடன் பரவத் தொடங்கியிருக்கும் நாட்கள் இது. இதனிடையே, இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பிங் இலங்கை வந்து ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருடன் உத்தியோகபூர்வமான சந்திப்புகளில் ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறு நாட்டில் ஒரு பரபரப்பான சூழ்நிலை இருக்கின்றபோது, புர்கா மற்றும் நிகாப் உட்பட முகத்தினை முழுமையாக மூடும் ஆடைகளை அணிவதை தடை செய்வதற்கு அமைச்சரவை கடந்த செவ்வாய்க்கிழமை (27) அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. “நாட்டின் பாதுகாப்பு கருதியே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது” என அமைச்சரவை பேச்சாளரான ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

“இந்த அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய இது தொடர்பான சட்ட மூலம் சட்ட வரைஞர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு சட்ட மா அதிபரின் அனுமதிக்கு அனுப்பப்படும். பின்னர், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சட்ட மூலமாக்கப்படும். அதனையடுத்தே இந்த தடை நாட்டில் அமுல்படுத்தப்படும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

சுமார் 67 இலட்சம் சிங்கள மக்களின் வாக்குகளினால் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசாங்கம் தற்போது சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து வருகின்றது. இவ்வாறு சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு குறையும் சமயத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரத்தினை கையில் எடுப்பதே இந்த அரசாங்கத்தின் வழமையாகும்.

துறைமுக நகர் தொடர்பான சட்ட மூலம், பொருளாதார வீழ்ச்சி, பொருட்களின் விலை அதிகரிப்பு, கொரோனா வைரஸின் மூன்றாவது அலை போன்ற பல காரணங்களினாலேயே அரசாங்கத்தின் செல்வாக்கில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனை திசை திருப்பும் அடிப்படையிலேயே புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை தடை செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தினை அவதானிக்க முடிகின்றது.

இது போன்று தான் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் இந்த அரசாங்கத்தின் செல்வாக்கு சிங்கள மக்கள் மத்தியில் குறைவடைந்து சென்ற சமயத்தில் மாடறுப்பிற்கு தடை விதிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. தற்போது, சுமார் ஏழு மாதங்கள் கழிந்துள்ள நிலையில் குறித்த அமைச்சரவை தீர்மானத்தினை அமுல்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையினையும் அரசாங்கம் எடுத்ததாக தெரியவில்லை.

இந்நிலையில்தான் கடந்த மார்ச் 12ஆம் திகதி புர்கா தடை தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சர் சரத் வீரசேகர கையெழுத்திட்டு அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்தார். அக்காலப் பகுதியில் இலங்கைக்கு எதிரான பிரேரணை யொன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் முன் வைக்கப்பட்டிருந்தமையினாலும், இந்த தடைக்கு பாகிஸ்தான் பகிரங்கமாக அதிருப்தி வெளியிட்டிருந்ததாலும் இந்த விடயம் அப்போது அமைச்சரவையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இவ்வாறான நிலையில் குறித்த அமைச்சரவை பத்திரம் கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென எடுத்துக் கொள்ளப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அமைச்சரவை தீர்மானங்கள் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெறும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர்களினால் அறிவிக்கப்படுவது வழக்கமாகும்.

அதற்கு முன்னர் அமைச்சரவை தீர்மானங்களை அமைச்சரொருவர் ஊடகங்களுக்கு அறிவிப்பது அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பினை மீறும் செயல் என்பர். இவ்வாறான நிலையில் புர்கா மற்றும் நிகாப் உட்பட முகத்தினை முழுமையாக மூடும் ஆடைகளை அணிவதை தடை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியமையினை அமைச்சர் சரத் வீரசேகர தனது பேஸ்புக்கின் ஊடாக முதன் முதலாக அறிவித்தார். அமைச்சரவையின் வழமையினை மீறி அவர் மேற்கொண்ட இந்த செயற்பாடு சிங்கள மக்கள் மத்தியில் “புள்ளிகள்” பெற்றுக்கொள்வதற்காகவேயாகும்.

இதேவேளை, பயங்கரவாதி சஹ்ரான் ஹாசீம் தலைமையிலான குழுவினரால் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல் காரணமாக 269 பேர் உயிரிழந்திருந்ததுடன், சுமார் 400ற்கும் அதிகமானோர் காயம்டைந்திருந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட அவசர கால சட்ட பிரகடனத்தின் ஊடாக புர்கா உள்ளிட்ட முகத்தை மூடும் ஆடைகளுக்கு முதன் முதலாக தடை விதிக்கப்பட்டது.

இந்த தடை 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 22ஆம் திகதி வரை தொடர்ந்தது. எனினும் ஆகஸ்ட் 22ஆம் திகதிக்கு பின்னர் அவசர காலச் சட்டம் நீடிக்கப்படா மையினால் புர்காவிற்கான இந்த தடை செயலிழந்தது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலும் கூட புர்கா தடைக்கான யோசனை முன்வைக்கப்பட்டது.

பாராளுமன்ற தேசியப் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவினால் “இனங்கள் மற்றும் மதங்கள் இடையேயான நட்புறவை கட்டியெழுப்பியவாறு புதிய பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை வேரோடுகளைந்தெறிவதற்கு தேவையான வகையில் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான சட்டதிட்டங்களை தயார் செய்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல்” பற்றிய திட்ட அறிக்கையொன்று கடந்த 2020 பெப்ரவரி 19ஆம் தயாரிக்கப்பட்டது. அப்போதைய பாராளுமன்றத்தின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலக (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) தலைமையிலான இந்த மேற்பார்வை குழுவின் உறுப்பினர்களாக 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் காணப்பட்டனர்.

குறித்த குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் மூன்றாவது பிரிவான ‘ஆளடையாளத்தை உறுதிசெய்ய முடியாத முகமூடிகளை தடை செய்தல்’ எனும் தலைப்பின் கீழ் நிகாப் மற்றும் புர்கா ஆகிய ஆடைகளை தடை செய்ய வேண்டும் என சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. இதற்கு ஆதரவாக இக்குழுவின் உறுப்பினர்களான அப்போதைய அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் (முன்னாள் பாராளுமன்ற உறுப் பினர்) மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் ஆகியோர் கையொழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஈஸ்டர் தற்கொலை தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை புர்காவினை தடை செய்யுமாறு சிபாரிசு செய்துள்ளது. இந்த இரண்டு குழுக்களின் சிபாரிசுகளையும் அடிப்படையாக வைத்தே நிகாப் மற்றும் புர்கா ஆகியவற்றினை தடை செய்வதற்கான அனுமதியினை அமைச்சரவை வழங்கியதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். எவ்வாறாயினும் அரசாங்கத்தின் இந்த தீர்மானம் தொடர்பில் பாகிஸ்தான் மற்றும் அரபு நாடுகள் அதிருப்தியினை வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் எந்தவொரு முஸ்லிம் நாடும் இதுவரை பகிரங்கமாக அறிவிக்காவிடினும் உள்மட்டத்தில் அதிருப்தியில் காணப்படுகின்றன. அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை குறித்த நாடுகளின் இராஜதந்திரிகள் விரைவில் சந்தித்து இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவர் என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் இந்த தீர்மானத்தின் காரணமாக அரபு நாடுகளிலிருந்து இலங்கை வரும் சுற்றுல்லா பிரயாணிகளின் எண்ணிக்கையிலும் பாரிய வீழ்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜெனீவா பிரேரணையின் போது பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டதுடன் பல முஸ்லிம் நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவுமில்லை. இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்ட வேண்டுகோள் மற்றும் இலங்கைக்கு ஆதரவாக ஜெனீவாவில் பாகிஸ்தான் ஆதரவு தேடியமை ஆகியவற்றின் அடிப்படையிலேயே குறித்த நாடுகள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இவ்வாறான நிலையில் புர்கா மற்றும் நிகாபிற்கு தடை விதிக்கும் தீர்மானத்தின் ஊடாக அரபு நாடுகளுடனான இலங்கையின் உறவில் விரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும். இதனை சரிசெய்வதற்காக எவ்வாறான இராஜதந்திர நடவடிக்கையினை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். vidivelli 30/4/21

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page