“புர்காவுக்கான தடையும் சிங்கள மக்களை திசைதிருப்பும் முயற்சியே”

அரசாங்கம் சீன பாதுகாப்பு அமைச்சருடன் கலந்துரையாடியுள்ள இரகசிய விடயங்களை மறைப்பதற்காக பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகின்றது. அதனடிப்படையிலேயே  புர்கா அணிவதை தடை செய்யும் விடயத்தை அரசாங்கம் மீண்டும் பூதாகரமாக்கி சிங்கள மக்களை  திசை திருப்ப நடவடிக்கை எடுத்திருக்கின்றது என கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், கொவிட் பரவல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் முகத்தை மூடுதல் அல்லது நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு உடம்பை மறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்நிலையில், அனைவரும் முகக் கவசம் அணிய  கட்டயாப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் முகக் கவசம் அணியாத நூற்றுக் கணக்கானோர் கடந்த சில நாட்களாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவ்வாறான நிலையில் முகத்தை மூடும் நிகாப் மற்றும் புர்கா விடயத்தை  பேசுபொருளாக மாற்றுவதற்கே அதனை தடை செய்வதற்கான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அப்பாவி சிங்கள மக்களை திசை திருப்புவதற்கான செயற்பாடாகும்.  கடந்த காலங்களிலும் ஒவ்வொரு பிரச்சினைகள் வரும்போது முஸ்லிம்களுடைய விவகாரங்களை பூதாகரமாக்கிக் கொண்டிருக்கிறது. மத்ரஸா விடயத்தை கையில் எடுத்தனர், மாட்டிறைச்சி விவகாரத்தை பூதாகரமாக்கினர். இதற்கப்பால் அசாத் சாலி, ரிஷாட் பதியுதீன், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், அஹ்னாப் என்று பலரையும் கைது செய்து சிங்கள மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது சீன பாதுகாப்பு அமைச்சர் நாட்டுக்கு வந்திருந்தார். அவருடன் அரசாங்கம் பல்வேறு இரகசிய கலந்துரையாடல்களை மேற்கொண்டிருக்கவேண்டும். அந்த விடயங்கள் வெளியில் வருவதை தடுக்கும் நோக்கிலே முகத்தை மறைப்பதற்கு தடை விதிக்கும் செய்தியை வெளியிட்டிருக்கின்றது.  

எனவே அரசங்கத்தின் இந்த முட்டாள்தனமான ஜனநாயக விரேத செயற்பாடுகளுக்கு அரசாங்கம் விரைவில்  தண்டனையை பெற்றுக்கொள்வார்கள் என்றார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page