ரிஷாத்தை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்த உத்தரவைப் பெற நடவடிக்கை

கைது செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுப்புகாவலில் வைத்து விசாரணைக்குட்படுத்துவதற்கான உத்தரவை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு உதவியமை மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் நேற்று சனிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தனர்.

சந்தேக நபர்கள் இருவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் 72 மணிநேர தடுப்புகாவல் உத்தரவின் கீழ் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அவர்களை தொடர்ந்தும் 90 நாட்கள் தடுப்புகாவலில் வைத்து விசாரணைக்குட்படுத்துவதற்காக விசாரணை அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர். அதற்கமைய உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றார். 

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price
VIAவீரகேசரி
SOURCE(செ.தேன்மொழி)