முஸ்லிம்களை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள்.

பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி பௌத்த தேரர்கள் முதல் சாதாரண சிங்கள மக்கள் வரை அனை வருக்குமே மிகப் பெரிய எதிர்ப்பார்ப்புக்களை ஏற்படுத்தியே ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது. தற்போதைய ஆட்சியை ஏற்படுத்துவதற்கு உழைத்த தேரர்களும், சிங்கள மக்களும் தங்களின் எதிர்பார்ப்புக்களை அரசாங்கம் நிறை வேற்றத் தவறிவிட்டதாக குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

‘இலங்கையின் சொத்துக்களை வெளி நாட்டிற்கு விற்கமாட்டோம். அத்தோடு இலங்கையின் சொத்துக்களை மீட்டெடுப்போம். ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு பின்புலமாக இருந்து இயக்கியவர்களையும், மத்திய வங்கியின் பிணைமுறி ஊழலில் சம்பந்தப்பட்டவர்களையும் கைது செய்வோம்’ என்றும் தேர்தல் பிரசாரங்களில் வாக்குறுதி வழங்கினார்கள்.

அரசாங்கம் தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோல்வி கண்டுள்ளதாக எதிர்க்கட்சியினரும், பௌத்த பிக்குகளும் குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றார்கள். இதனிடையே கொரோனா தொற்று உலக அளவில் ஏற்படுத்திய பொருளாதார ரீதியான எதிர்மறைத் தாக்குதல்கள் கூட இலங்கை அரசாங்கத்தின் மீது பலத்த பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் நெருக்கடிகள்

சீனி இறக்குமதிக்கான வரி விவகாரம், இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய பதார்த்தம் இருப்பது, அமைச்சர்கள் சிலரின் பொறுப்பற்ற கருத்துக்கள் என்று பல விடயங்கள் அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

இது போதாதென்று ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சர்வதேச ரீதியான அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவுக்கு வழங்குவதில் பலத்த எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன. குறிப்பாக இன்றைய ஆட்சியை ஏற்படுத்துவதற்கு முன்னின்று செயற்பட்ட முருத்தெட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட தேரர்கள் பலரும், சிங்கள தேசிய இயக்கம் உள்ளிட்ட அமைப்புக்களும் கடும் எதிர்ப்பினை முன் வைத்துக் கொண்டிருக்கின்றன.

“தற்போதைய அரசாங்கம் தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. நாட்டின் சொத்தை மீட்டெடுப்போம் என்று தெரிவித்து ஆட்சியை கைப்பற்றிவிட்டு, சீனாவுக்கு கொழும்பு துறைமுக நகரத்தை ஒப்படைப்பதற்கு நடவடிக்கைகளை எடுப்பதனை நாம் ஏற்றுக் கொள்ளமாட்டோம். இதற்காக வீதியில் இறங்கிப் போராடவும் தயாராக இருக்கின்றோம்” என்று தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சியினரும் எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதே வேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகியுள்ள போதிலும், இத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பது இன்னும் அடையாளப்படுத்தப்படவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய உண்மையை அரசாங்கம் கண்டறிய வேண்டும். தவறும் பட்சத்தில் சர்வதேசத்தின் உதவியை நாடப் போவதாகவும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாகவும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அரசாங்கத்தை எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்தான கருத்துக்கள் மிகவும் சூடாக பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இதே வேளை, அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் விமல் வீரவன்ச, உதயன்கம்மன் பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தைக் கூட பகிஷ்கரித்திருந்தார்கள்.

அரசியல் இலாபம் தேடல்

இவ்வாறு அரசாங்கத்தின் மீது பல திசைகளிலும் நெருக்கடிகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அரசாங்கத்திற்கு எதிராக பௌத்த தேரர்களும், பேராயர் மல்கம் ரஞ்சித் போன்றவர்களும் சுட்டிக்காட்டியுள்ள தற்போதைய நெருடிக்கடியைத் தமது அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்வதற்கு எதிர்க்கட்சியினர் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். கூட்டாட்சி, என்ற சொல்லைக்கூட விரும்பாத அரசாங்கம் தற்போது இலங்கைக்குள் சீன இராச்சியத்தை தோற்றுவிக்க முயற்சிக்கிறது.

தமிழ் ஈழத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டனர். ஆனால் தற்போது சீன ஈழத்திற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். சுமார் 2000 ஆண்டுகள் எம்முடன் வாழ்கின்ற மக்களுக்கு தமிழ் ஈழத்தை தர முடியாதெனக் கூறியவர்கள் சீனாவிற்கு வழங்குகின்றனர்.

அவ்வாறெனில் இவர்களின் தேசப்பற்று எங்கு சென்றது? இதுவும் தனியொரு ஈழமாகும். இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக இலங்கையின் இறையாண்மைக்கும், தனித்துவத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஆளுங் கட்சியினர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த குற்றச்சாட்டை நல்லாட்சி அரசாங்கத்தின் தலையிலும், ஐக்கிய மக்கள் சக்தியின் மீதும் சுமத்திவிட்டு, அரசியல் இலாபம் தேடிக் கொள்வதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருப்பதனையும் அவதானிக்க முடிகின்றது. எதிர்க்கட்சியினர் இத்தாக்குதலை அரசாங்கத்தின் மீது பழிபோட்டு அரசியல் இலாபம் தேடிக் கொள்வதனையும் காண முடிகின்றது.

இவ்வாறு அரசியல் கட்சிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் சிலர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் விடை ஒன்றினை வைத்துக் கொண்டு அதற்குரிய கேள்வியை உருவாக்குவதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று யாரும் தீர்மானிக்க முடியாது.

கைது செய்யப்பட்டவர்களில் பலர் விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். அதற்காக அவர்கள் குற்றவாளிகள் என்றோ அல்லது குற்றமற்றவர்கள் என்றோ யாரும் தீர்மானம் செய்ய முடியாது.

விசாரணைகளின் அடிப்படையில் குற்றவாளிகள் அடையாளப்படுத்தப்படு வார்கள். அதற்குரிய நடவடிக்கைகளை நீதித்துறை மேற்கொள்ளும். அதனால் நீதித்துறையின் மீதும், அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்களையும், குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டவர்களையும் குற்றவாளிகளாக முத்திரை குத்துவதற்கு சிலரினால் எடுக்கப்படும் முயற்சி நீதிக்கு மாற்றமானது.

அத்தோடு, மனிதப் படுகொலை அவலத்தை வைத்துக் கொண்டு அரசியல் இலாபம் தேடிக் கொள்வதனை மக்கள் அனுமதிக்கக் கூடாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டவர்கள் அடையாளங் காணப்பட்ட போதிலும், அத்தாக்குதலை இயக்கிய சூத்திரதாரி யார் என்பது இன்னும் புலனாய்வு பிரிவுக்கு புலப்படவில்லை. சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு புலனாய்வு பிரிவு தொடர்ச்சியாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. நாளாந்தம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பிரதான இயக்குநரை கண்டு பிடிப்பதற்கு இலங்கையர்கள் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

முரண்பட்ட கருத்துக்கள்

இதே வேளை, பேராயர் மல்கம் ரஞ்சித் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்ற கருத்துக்கள் குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கு அவரது கருத்துக்களில் உள்ள முரண்பாடுகளே காரணமாகும்.

இவரது கருத்துக்கள் பற்றி பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தமது முகநூலில் “2019 உயிர்த்த ஞாயிறு படுகொலை தாக்குதல்களில் கொல்லப்பட்ட அப்பாவி கதிதோலிக்க மக்களுக்கு நீதியை பெற்று தருவதாகக்கூறி, ஆட்சி மாற்றம் ஏற்பட பிரதான காரணகர்த்தாவாக இருந்த கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, இப்போது திக்கற்று நிற்கிறார்.

இப்போது, ‘கடந்த அரசும் ஏமாற்றி விட்டது’. ‘இந்த அரசும் ஏமாற்றி விட் டது’ எனக் கூறுகிறார். ஆனால், குண்டு தாக்குதல் தொடர்பில் கடந்த அரசில் பொறுப்புத் தவறியவர்கள், இன்று இந்த அரசில்தான் இருக்கிறார்கள் என்பது கர்தினாலுக்கு மறந்து விட்டது. குண்டுத் தாக்குதல், மத பின்புலம் கொண்டதல்ல, அது ‘அரசியல் பின்புலம்’ கொண்டது முதல் நாள் சொன்னார். அடுத்த நாளே, அதை ‘சர்வதேச அரசியல் பின்புலம்’ என திருத்திச் சொன்னார். நியாயம் கிடைக்காவிட்டால், ‘சர்வதேச விசாரணையை கேட்பேன்” என்றும் ஒருநாள் சொன்னார்.

இதேமாதிரி, இறுதிப் போரில் கொல்லப்பட்ட தமிழர்கள் சார்பில், ஆயர் இராயப்பு ஜோசப் “சர்வதேச விசாரணை” கோரிய போது, அதை இவர் கொழும்பிலிருந்து கண்டித்தார். இன்று உள்நாட்டு விசாரணையால், நீதியை பெற்றுத்தர முடியா விட்டால், சர்வதேச விசாரணையின் மூலமாகவாவது நீதியை பெற்றுத்தர, கூறியப்படி கர்தினால் முன்வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

என் அடிப்படையற்ற கருத்து

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தமையை முன்னிட்டு புதனன்று கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பிரார்த்தனையின் போது “உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளை குற்ற மற்றவர்களாக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளின் பின்னணியில் அரசியல் சக்திகள் காணப்படுகின்றன” என்று பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறன்று தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போது முஸ்லிம் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் நாம் பாதுகாத்தோம். எனினும் எமக்கான நியாயத்துக்கு குரல் கொடுப்பதற்கு முஸ்லிம் மக்கள் முன் வரவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடை பெற்ற போது முஸ்லிம் மக்களுக்கும் இத்தாக்குதலுக்கும் சம்பந்தமில்லை. அப்பாவி முஸ்லிம்களை பாதுகாப்பது நமது பொறுப்பாகும் என்ற கருத்தில் மிகவும் பொறுப்புடன் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிக்கை விடுத்தமையை முஸ்லிம்கள் ஒரு போதும் மறக்கமாட்டார்கள். ஆனால்,”எமக்கான நியாயத்துக்கு குரல் கொடுப்பதற்கு முஸ்லிம் மக்கள் முன் வரவில்லை” என்று கர்தினால் தெரிவித்துள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்றதன் பின்னர் முஸ்லிம்கள் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களைச் செய்தார்கள். இத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து தண்டிக்குமாறும் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்கள்.

சாய்ந்தமருதில் மறைந்திருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுடன் தொடர்புகளை பேணியவர்களை பாதுகாப்பு தரப்பினரிடம் காட்டிக் கொடுத்தார்கள். அவர்களை முஸ்லிம் மையவாடிகளில் அடக்கம் செய்வதற்கும் முஸ்லிம்கள் அனுமதிக்கவில்லை.

இன்றும் முஸ்லிம்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்ட பிரதான சூத்திரதாரியை அடையாளங் காண வேண்டுமென்று அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அது விடயத்தில் பாதுகாப்பு தரப்பினர் எடுத்துக் கொண்டிருக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பூரண ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் இந்த ஒத்துழைப்புக்களை பாதுகாப்பு தரப்பினரும், ஆளுங் கட்சியினரும் பாராட்டியுள்ளனர். பௌத்த தேரர்களும் பாராட்டியுள்ளனர்.

ஆனால், கர்தினாலோ நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு முஸ்லிம்கள் முன் வரவில்லை என்று கூறியுள்ளதன் ஊடாக முஸ்லிம்கள் இத்தாக்குதல் குறித்து அக்கறையில்லாது உள்ளார்கள் என்றதொரு பிழையான செய்தியை பெரும்பான்மை மக்களுக்கு கொடுப்ப தாக இருக்கின்றது.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடைபெற்றதன் பின்னர் முஸ்லிம்களை பாதுகாக்கும் வகையில் நல்லதொரு அறிக்கையை விடுத்த போதிலும், முஸ்லிம்களின் மீது பல இடங்களில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு முஸ்லிம்களின் மீது தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு எதிராக இன்று வரைக்கும் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை. அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்று எந்தவொரு மாற்று மதத் தலைவர்களும் அரசாங்கத்தை கேட்டுக் கொள்ளவில்லை என்பதனையும் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

மேலும், சஹ்ரான் குறித்து முதலில் எச்சரிக்கை விடுத்தவர்கள் முஸ்லிம்கள்தான். காத்தான்குடியில் அவரை கைது செய்யுமாறு அப்பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எச்சரிக்கையுடன் செயற்படல்

இதேவேளை, இலங்கையின் அரசியல் இனவாதம் எனும் அணு உலையின் மீதே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இனவாதக் கருத்துக்களை முன் வைத்தே ஆட்சியை அரசியல் கட்சிகள் கைப்பற்றியுள்ளன.

அதனால், இலங்கையிலுள்ள எந்தவொரு அரசியல் கட்சியையும் இனவாமில்லாத சுத்தமான கட்சி என்று சொல்ல முடியாது. அதனால், தற்போதைய அரசியல் நெருக்கடியில் ஒவ்வொரு கட்சியினரும் அரசியல் இலாபம் தேடிக் கொள்வதற்கு பதுங்கிக் கொண்டிருக்கின்றன. அதனால், சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியுள்ளது. இலங்கையின் இறைமைக்கும், அமைதிக்கும் பங்கம் ஏற்படுத்த முனைபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் குறித்து பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்க வேண்டும்.

பொது பல சேனவின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர்”இஸ்லாமிய அடிப்படைவாதம் நாட்டிலிருந்து முழுமையாக இல்லாதொழிக்கப்படவில்லை. பௌத்த துறவிகளைபோல் வேடமிட்டும் அடிப்படைவாதிகள் தாக்குதல்களை முன்னெடுக்கலாம்” என்று பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் கடந்த புதனன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். ஞானசார தேரரின் கருத்தை புறக்கணிக்க முடியாது. அதனால், முஸ்லிம்களும், ஏனையவர்களும் இது குறித்து எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும்.

இன்றைய நெருடிக்கடியான சூழலை முஸ்லிம் விரோத சக்திகள் பயன்படுத்திக் கொள்ளவும் கூடும். அவர்கள் முஸ்லிம்களை மேலும் நெருக்கடிநிலைக்குள் தள்ளி விட்டு தமது இனவாதக் கொள்கையை அமுல்படுத்தவும் வாய்ப்புக்கள் உள்ளன. கடந்த காலங்களில் முஸ்லிம்களின் மீது போலியான காரணங்களை சுமத்தி இனவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. ஆதலால், எது நடந்தாலும் முஸ்லிம்களுக்கே பாதிப்புக்களை ஏற்படுத்தும் நிலையே இங்கு காணப்படுகின்றது.

கையறு நிலையில் தலைவர்கள்

முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை பொறுத்தவரை முஸ்லிம்களின் பொருத்தமற்ற தெரிவுகள் என்று கூறுவதே பொருத்தமாகும். முஸ்லிம் காங்கிரஸின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும், மக்கள் காங்கிரஸின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரு கூட்டணி போன்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாத கையறு நிலையில் இக்கட்சிகளின் தலைவர்கள் உள்ளார்கள்.

20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்து ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக பெற்றுக் கொடுத்தவர்கள், முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுக்களில் ஈடுபட முடியாதவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் என்னதான் அரசாங்கத்துடன் நெருக்கமாக இருந்தாலும், முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க முடியாத நிலையிலேயே இருக்கின்றார்கள்.

மத்ரஸாக்களை தடை செய்யவும், இஸ்லாமிய புத்தகங்களின் இறக்கு மதிக்கு தடைகளை ஏற்படுத்தவும், முஸ்லிம்கள் தொடர்பில் மேலும் சில தடைகளை ஏற்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும், அவற்றையிட்டு எதிர்க்கருத்துக்களை வெளியிட முடியாத நிலையிலேயே முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்களுக்குப் பூட்டுப் போடப்பட்டுள்ளன.

இருந்தாலும் அவர்கள் அரசாங்கத்தின் மூலம் தங்களுக்குத் தேவையான பல வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டே வருகின்றார்கள். ஆகவே, முஸ்லிம்கள் தமது பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள் போன்றவர்களை இன்னும் நம்பிக் கொண்டிருப்பதனை தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும். இன்றைய அரசியல் நெருக்கடிகளிலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரங்களிலும் அரசியல் கட்சிகள் அதிகம் தமது ஈடுபாட்டைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

அரசியல் கட்சிகள் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண்பதற்கு முனைப்புடன் செயற்படாது போனாலும், சூழலைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடிக் கொள்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு தயங்கமாட்டார்கள் என்பது தான் கடந்த கால அனுபவமாகும். அதனால், முஸ்லிம் சமூகம் தங்களைச் சூழ்ந்துள்ள ஆபத்துக்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page