மத்ரஸா, இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து இரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அதுரலிய ரத்ன தேரர்

மத்ரஸா பாடசாலை, இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில்  அரசாங்கம் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல்  தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை அரசாங்கம் இரண்டு வார காலத்திற்குள் முழுமையாக செயற்படுத்த வேண்டும். இல்லாவிடின் மாற்று நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க  பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுக் கொள்கைக்கு அமைய செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம் பெற்று இரண்டு வருட காலங்களிள் நிறைவுப் பெற்றுள்ள நிலையில்  உண்மையான சூத்திரதாரியை கண்டறிவதற்கும், இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்கும் முறையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.  

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம் பெற்றதற்கு கடந்த அரசாங்கமும்,  இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை செயற்படுத்தாமைக்கு தற்போதைய அரசாங்கமும் பொறுப்பு கூற வேண்டும்.

பயங்கரவாதி சஹ்ரான் தற்கொலை குண்டுதாரியாகி தன்னை மாய்த்துக் கொண்டதுடன் இஸ்லாமிய அடிப்படைவாதம்  அழிவடையவில்லை. அடிப்படைவாதிகளினால் சாதாரண முஸ்லிம் சமூகத்திலிருந்து பலர் அறிந்தும் , அறியாமலும் மூளைச்சலவை செய்யப்பட்டு அடிப்படைவாத கொள்கைக்கு ஈர்க்கப்பட்டுள்ளார்கள் அடிப்படைவாத கொள்கையினை உடையவர்களினால் எப்போதாவது பாரதூரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

சாதாரண  முஸ்லிம் இளைஞர் யுவதிகளை மூளைச்சலவை செய்து அவர்களை அடிப்படைவாதிகளாக்கும் நடவடிக்கைகளை ஒரு சில அரச சார்பற்ற அமைப்புக்களும், பல்கலைக்கழங்களும் முன்னெடுக்கின்றன. 

பட்டிக்கலோ கெம்பஸ் அடிப்படைவாதத்திற்காக முளைச்சலவை செய்யும் ஒரு பல்கலைக்கழகமாகவே காணப்படுகிறது. கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் இஸ்புல்லாவிற்கு எதிராக  வழக்கு தாக்கல் செய்தேன். இதுவரையில் அவ்வழக்கு விசாரணைக்கு ஏன் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் இஸ்புல்லா , பெடிகலோ கெம்பஸ் தொடர்பிலும் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை சிறந்த யோசனைகளை முன்வைத்துள்ளது. இந்த யோசனைகளை செயற்படுத்துவதில் அரசாங்கம் காலம் தாழ்த்துவது சந்தேகத்திற்குரியது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம் பெற்றதற்கு பின்னர்  கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் இஸ்புல்லா  ஆளுநர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தலதா மாளிகை  வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தேன். 

ஒருவர் பதவி விலக வேண்டும் என்பதற்காக நல்லாட்சி அரசாங்கத்தில்  அமைச்சரவை அமைச்சர் , இராஜாங்க அமைச்சர் , மற்றும் ஆளுநர் பதவி வகித்த முஸ்லிம்  அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றாக பதவி விலகி சிங்கள இனத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக செயற்பட்டார்கள். இதனை  சிங்கள அரசியல்வாதிகள் ஒரு பாடமாக புரிந்துக் கொள்ள வேண்டும். 

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க அனைத்து சிங்கள அரசியல்வாதிகளும் முதலில் கட்சி பேதங்களை துறந்து ஒன்றினைந்து செயற்பட வேண்டும்.

மத்ரஸா பாடசாலை கல்வி திணைக்களம் அறிவுறுத்தியுள்ள பாடத்திட்டத்திற்கு முரண்பட்டதாக காணப்படுகிறது அனைத்து இன மக்களும் கல்வி திணைக்களம் அறிவுறுத்தும் பாடத்திட்டங்களை முழுமையாக பின்பற்ற வேண்டும். மத்ரஸா பாடசாலை குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை துரிதமாக நிறைவேற்றுவது அவசியமாகும்.

மத்ரஸா பாடசாலைகளில் கற்றும் மாணவர்கள் கலை,விளையாட்டு என பலதரப்பட்ட பொது  துறைகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்கள். மத கருத்துக்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது.இலங்கையின் கல்வி மரபிற்கு மத்ரஸா பாடசாலைகள் பொருத்தமற்றது. 

காதி நீதிமன்றம் முழுமையாக தடை செய்யப்பட வேண்டும்  என  பாராளுமன்றில் தனிநபர் பிரேரணையை முன்வைத்தேன் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. 

நல்லாட்சி அரசாங்கத்தை இயக்கிய இஸ்லாமிய அடிப்படைவாதம் தற்போதைய அரசாங்கத்தையும் இயக்குகிறதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

மத்ரஸா பாடசாலை, இஸ்லாமிய அடிப்படைவாதம், மற்றும் காதி நீதிமன்றம் ஆகியவை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை அரசாங்கம் இரண்டு வார காலத்திற்குள் முழுமையாக செயற்செயற்படுத்த வேண்டும் இல்லாவிடின் மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். 

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முமையாக இல்லாதொழிக்கவும், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தவும் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும் என்றார். -வீரகேசரி பத்திரிகை- (இராஜதுரை ஹஷான்)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page