கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 8 முக்கிய தீர்மானங்கள் அறிவிப்பு

நாட்டில் கொவிட் வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைய ஆரம்பித்துள்ள நிலையில் , நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சு உள்ளிட்ட சுகாதார தரப்புக்கள் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

அதற்கமைய செவ்வாய்கிழமை இடம்பெற்ற கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் கூட்டத்தில் மே தினத்தை நடத்தாமலிருக்க தீர்மானிக்கப்பட்டதோடு , இன்றைய தினமும் சுகாதார அமைச்சர் தலைமையில் விசேட கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு அதில் 8 முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

8 முக்கிய தீர்மானங்கள்

அதற்கமைய தீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் , கொவிட் தொற்றாளர்களுக்கு தேவையான உயர்மட்ட ஒட்சிசன் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று தரவு சேகரிப்பு முறைமை வலுப்படுத்துதற்கும்  மருத்துவர்கள் , தாதிகள் உள்ளிட்ட மருத்துவ துறையினருக்கு தேவையான பாதுகாப்பு ஆடைகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் கொவிட் தொற்றாளர்களுக்கு காணப்படும் நோய் நிலைமை அடிப்படையில் அவர்களை வேறுபடுத்தி பொறுத்தமான வைத்தியசாலைகளில் அனுமதிப்பதற்கும் , எதிர்வரும் தினங்களில் பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக வைத்தியசாலைகளை தயார்ப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

கொவிட் தொற்றாளர்களுடன் வேறு நோய்களுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களுக்கான சேவையை வலுப்படுத்துவதற்கும் , நாளொன்றுக்கு 15 000 பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கும் , தனிமைப்படுத்தல் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் , அவற்றை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் , வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களுக்கு விசேட தனிமைப்படுத்தல் சட்டத்தை தயாரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குருணாகலில் ஒரு பிரதேசம் முடக்கம்

கடந்த சில வாரங்களாக நாட்டில் எந்த பகுதியும் முடக்கப்படாத நிலை காணப்பட்டது. எனினும் கடந்த இரு தினங்களுக்ககு முன்னர் குருணாகல் மாவட்டத்தின் திட்டவெல்கல கிராம உத்தியோக்கத்தர் பிரிவு முடக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில் கடந்த 3 நாட்களாக அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகியதையடுத்து இப்பகுதி முடக்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

71 வயதிற்கு மேற்பட்ட 158 பேர் உயிரிழப்பு

நாட்டில் கொவிட் தொற்று ஏற்பட்டு முதலாம் அலையில் 13 மரணங்கள் மாத்திரமே பதிவாகின. எனினும் கடந்த ஆண்டு ஒக்டோபர் 4 ஆம் திகதியின் பின்னர் ஏற்பட்ட இரண்டாம் அலையில் நேற்று காலை வரை 612 மரணங்கள் பதிவாகியுள்ளன. இவ்வாறு பதிவான 612 மரணங்களில் 71 வயதுக்கு மேற்பட்ட 294 இதுவரையில் உயிரிழந்துள்ளதோடு, அந்த எண்ணிக்கை நூற்றுக்கு 48.03 வீதமாகும்.

இதே போன்று 61 – 70 வயதுக்கு இடைப்பட்ட 158 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதோடு, அந்த எண்ணிக்கை நூற்றுக்கு 25.81 வீதமும் , 51 – 60 வயதுக்கு இடைப்பட்ட 86 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதோடு, அந்த எண்ணிக்கை நூற்றுக்கு 14.05 வீதமும், 41 – 50 வயதுக்கு இடைப்பட்ட 49 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதோடு, அந்த எண்ணிக்கை நூற்றுக்கு 8 வீதமும், 31 – 40 வயதுக்கு இடைப்பட்ட 15 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதோடு, அந்த எண்ணிக்கை நூற்றுக்கு 2.45 வீதமும், 10 – 30 வயதுக்கு இடைப்பட்ட 9 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதோடு, அந்த எண்ணிக்கை நூற்றுக்கு 1.47 வீதமும் , 9 வயதுக்கு உட்பட்ட ஒரு மரணமும் பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.

22 மாவட்டங்களில் தொற்றாளர்கள் : கொழும்பில் மாத்திரம் 94 பேர்

நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை 22 மாவட்டங்களில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் கொழும்பில் மாத்திரம் 94 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கம்பஹாவில் 54 பேரும் , களுத்துறையில் 41 பேரும் , கண்டியில் 22 பேரும் , குருணாகலில் 43 பேரும் , எஞ்சியோர் ஏனைய மாவட்டங்களிலும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இன்று 516 தொற்றாளர்கள்

இன்று புதன்கிழமை இரவு 10 மணி வரை மாத்திரம் 516 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 97 988 ஆக உயர்வடைந்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 93 668 பேர் குணமடைந்துள்ளதோடு , 3540 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

(எம்.மனோசித்ரா) -வீரகேசரி பத்திரிகை-

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters