நாட்டில் மீண்டும் 3 ஆவது அலை ஏற்படக் கூடுமென எச்சரிக்கை: 5 மரணங்கள் பதிவு

நாட்டில் அண்மையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை அவதானிக்கக் கூடியதாக இருந்த போதிலும் , கடந்த ஒரு வார காலமாக அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதேவேளை , பல பிரதேசங்களிலும் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். 

புத்தாண்டு காலத்தில் மக்கள் பொறுப்பற்று செயற்பட்டமையின் விளைவாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு மற்றும் கொழும்பிற்கு வெளி பிரதேசங்களிலும் வங்கி ஊழியர்கள் சிலருக்கும் , பிலியந்தலயில் சில பிரதேசங்களிலும் கணிசமானளவு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

இவ்வாறான நிலையில் இம்முறையும் மே தினக் கூட்டங்களை நடத்தாதிருக்க தீர்மானித்துள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இவ்வாறு கொவிட் அச்சுறுத்தல் மீண்டும் ஏற்பட்டுள்ளமையை அரசாங்கமும் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் , அது குறித்து வீண் அச்சமடையத் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சர் ரமேஷ் பத்திரண இந்த அறிவிப்பை விடுத்திருந்தார். எவ்வாறிருப்பினும் தற்போதுள்ள நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படாவிட்டால் மூன்றாம் அலை ஏற்படக் கூடும் என்றும் , மீண்டும் போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று சுகாதார தரப்பு எச்சரித்துள்ளது.

இந்நிலையில் நேற்றையதினம் கொரோனாவால் 5 பேர் இறுதியாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 625 ஆக அதிகரித்துள்ளது.

மூன்றாம் அலை எச்சரிக்கை

நாட்டின் தற்போதைய கொவிட் நிலைமை தொடர்பில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹனவிடம் வினவிய போது ,

புத்தாண்டு காலத்தில் மக்கள் அடிப்படை சுகாதார விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் அபாய நிலை ஏற்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய கடந்த சில தினங்களாக நாட்டின் பல பிரதேசங்களிலும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர். பொது மக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் எதிர்வரும் வாரங்களில் நாடு அபாய நிலைக்கு தள்ளப்படக் கூடும்.

இம்மாதத்தின் இறுதி வாரத்திலும் , மே மாதத்தின் முதல் வாரத்திலும் புத்தாண்டின் போது பொறுப்பின்றி செயற்பட்டமையின் பயனை அனுபவிக்க நேரிடும். தற்போதுள்ள நிலைமையை கட்டுப்படுத்தாவிடின் சில வாரங்களில் மூன்றாம் அலை ஏற்படக் கூடும். எனவே தற்போது இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்களிடமிருந்து வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக மக்களிடம் முழுமையான ஒத்துழைப்பை கோருகின்றோம் என்று குறிப்பிட்டார்.

தொற்று நோயியல் பிரிவின் எச்சரிக்கை

இது குறித்து சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீரவிடம் வினவிய போது ,  

அண்மைக் காலமாக தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் கடந்த ஒரு வாரமாக மீண்டும் தொற்றுக்குள்ளாளோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது மிகுந்த அவதானம் செலுத்தப்பட வேண்டிய விடயமாகும். இவ்வாறு தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதோடு , நாம் அறியாமல் கிளை கொத்தணிகள் ஏற்படக் கூடிய வாய்ப்பும் உள்ளது.

அவ்வாறு ஏற்படும் பட்சத்தில் மீண்டும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்தல் , பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்படல் என்பவற்றுக்கு முகங்கொடுக்க நேரிடும். இவ்வாறான நிலைமை ஏற்படாமல் தவிர்ப்பதற்கு மக்களின் ஒத்துழைத்து அத்தியாவசியமானதாகும் என்றார்.

வங்கி உத்தியோகத்தர்களுக்கு தொற்றுறுதி

இந்நிலையில் கொழும்பு கோட்டை மற்றும் நாரம்மல, கட்டுபொத ஆகிய பகுதிகளில் உள்ள வங்கி உத்தியோகத்தர்கள் 43 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த வாரம் முதல் வங்கி உத்தியோகத்தர்களை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட 225 பி.சி.ஆர். பரிசோதனைகளில் இவ்வாறு 43 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் பிரதம மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்தார். 

கடந்த வியாழனன்று 10 பேருக்கும் , வெள்ளியன்று 15 பேருக்கும் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை 18 பேருக்கும் இவ்வாறு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிலியந்தலையில் 30 பேருக்கு தொற்று

பிலியந்தல சுகாதார மருத்துவ பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட 130 பி.சி.ஆர். பரிசோதனைகளில் 31 பேருக்கு வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. போகுந்தர, கொரகாபிட்டி, ரத்மல்தெனிய மற்றும் அரேவ்வெல ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். குறித்த தொற்றாளர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று 345 பேருக்கு தொற்று

நேற்று செவ்வாய்கிழமை 345 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டது. அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 97 450 ஆக அதிகரித்துள்ளது. 

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 93 547 பேர் குணமடைந்துள்ளதோடு , 3198 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே வேளை மரணங்களின் எண்ணிக்கையும் 625 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -வீரகேசரி பத்திரிகை-

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page