உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் குறித்து புதிய தகவலை பாராளுமன்றில் வெளிப்படுத்தினார் ஹரீன்

ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் முதலாவதாக கைது செய்யப்பட்ட குற்றப்புலனாய்வு அதிகாரியை விசாரிக்கும்போது, அவரை இராணுவத்தின் புலனாய்வு பிரிவு அழைத்துச்சென்றதாக குற்றப்புலனாய்வு பிரிவு முன்னாள் பிரதானி ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு தெரிவித்த சாட்சியங்கள் ஆணைக்குழுவின் அறிக்கையில் மறைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அரசாங்கம் விசாரணை மேற்கொண்டுவந்த குற்றப்புலனாய்வு அதிகாரிகளை இடம் மாற்றியிருப்பது குற்றவாளிகளை மறைக்கும் திட்டமாகும் என ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஏப்ரல் தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவந்த குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரியான ஷானி அபேசேகர, குறித்த விசாரணையை மேற்கொள்ளும்போது முதலாவதாக கண்டுபிடித்திருப்பது புலனாய்வு அதிகாரி ஒருவரையாகும்.

தொலைபேசி ஐ.பி.முகவரி மூலமே அவர் கண்டுபிடிக்கப்படுகின்றார். இந்த நபரை விசாரணைக்கு அழைத்து விசாரிக்கும்போது இராணுவத்தின் புலனாய்வு பிரிவு, இவரை எமது பிரிவில் விசாரிப்பதாக தெரிவித்து, அழைத்துச்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விடயங்கள் அறிக்கையில் இல்லை.

மேலும், ஏப்ரல் தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவந்த குற்றப்புலனாய்வு அதிகாரிகள் 14 பேர் இடமாற்றப்பட்டுள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று சில தினங்களிலேயே ஷானி அபேசேகர சாதாரண அதிகாரியாக வேறு பிரதேசம் ஒன்றுக்கு இடமாற்றப்பட்டார். அதன் பின்னர் அவரை சிறையில் அடைத்தார்கள்.

அத்துடன் மாத்தளை சஹ்ரான் என்ற நபர் அன்று குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஆனால் பிரதான சூத்திரதாரி என அரசாங்கம் தெரிவுசெய்திருக்கும் நெளபர் மெளலவி மற்றும் மாத்தளை சஹ்ரான் ஆகிய இரண்டுபேரிடம் வாக்கு மூலம் பெறாமல் அரசாங்கம் எதனை மறைக்கப்போகின்றது. ஆணைக்குழுவுக்கு தெரிவிக்கப்பட்ட பல வாக்குமூலங்கள் அறிக்கையில் வரவில்லை.

மேலும், அரசாங்கம் ஏப்ரல் தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள போலி விசாரணைக்குழு அமைத்து, புதிதாக குற்றப்புலனாய்வு அதிகாரிகளை நியமித்திருப்பது இந்த விசாரணையை மறைக்கும் திட்டமாகும்.

அதேபோன்று தாக்குதல் தொடர்பாக முதலாவது தகவல் வழங்குவது ஏப்ரல் 4ஆம் திகதியாகும். அதன் பின்னர் அந்த நபர் இரண்டாவது தகவல் வழங்குவது ஏப்ரல் 20 ஆம் திகதியாகும். அப்படியானால் தகவல் வழங்கிய நபர் எங்கே இருந்தார். அவரை யார் பாதுகாத்து வந்தார்.?

அதனால் குற்றப்புலனாய்வு துறையை நிர்வகிப்பது அரசாங்கத்துக்கு தேவையான ஒரு தனி நபராகும். அந்த நபர்தான் இரண்டு தினங்களுக்கு முன்னர் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு சென்றிருந்தார்.

தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு செல்லாமல் ஜனாதிபதியின் பிரதிநிதி ஒருவரே செல்கின்றார். அப்படியானால் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை தேடிக்கொள்ள தேவை என்றால் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு சென்றவரே இதன் பிரதான சூத்திரதாரியாவார்.

மேலும், சாரா எங்கே இருக்கின்றார். அவரை யார் அழைத்துச்சென்றார் என்பது தொடர்பான அனைத்தையும் வெளிப்படுத்துவோம். முடியுமானால் இவற்றுக்கு அரசாங்கம் பதில் சொல்லவேண்டும். நெளபர் மெளவி மீது குற்றத்தை சுமத்தி கொலையாளிகளை மறைக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றார். -வீரகேசரி பத்திரிகை- ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page