கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்: தம்பர அமில தேரர்

ஏப்ரல் குண்டுத்தாக்குதல் அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்றால் அந்த தேவை யாருக்கு இருந்தது என்பதை  கர்த்தினால் மெல்கம் ரஞ்சித்  வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும். இதனை மறைத்துக்கொண்டு இருப்பதனால் உண்மை வெளிப்படப்போவதில்லை என தம்பர அமில தேரர் தெரிவித்தார்.

சமூக நீதிக்கான தேசிய இயக்கம் நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஏப்ரல் குண்டுத்தாக்குதல் மதத்தை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அல்ல. மாறாக சிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என  கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்திருக்கின்றார். அரசியல் அதிகாரத்தை பலப்படுத்திக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்றால் யாருக்கு அந்த தேவை இருந்தது? ஏப்ரல் தாக்குதலால் யார் அரசியல் லாபம் பெற்றுக்கொண்டார்கள் என்பது யாருக்கும் தெரிந்த விடயம்.

அதனால்  கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் இதுதொடர்பாக மறைக்காமல் வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் இதன் உண்மை தன்மை ஒருபோது வெளிப்படப்போவதில்லை. அரசாங்கமும் இந்த தாக்குதலை ஒரு இனத்தின் மீது சுமத்தி, தற்போது இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என ஒருவரை பெயரிட்டிருக்கின்றது. ஆனால் அந்த நபர் கடந்த அரசாங்க காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டவர்.

 இவ்வளவு காலம் கடந்த பின்னர் தற்போது அந்த நபரை பிரதான சூத்திரதாரி என பெயரிட்டிருப்பதை யாரும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. அத்துடன் கடந்த அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேன மற்றம் ரணில் விக்ரமசிங்க இருவரும் தங்களை அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள இவ்வாறு முயற்சித்தார்களா என யாரும் நினைக்கமாட்டார்கள். ஏனெனில் அந்த அரசாங்கத்தில் இவர்களுக்கிடையில் எவ்வாறான நிலைமை இருந்தது என்பது யாரும் அறிந்த விடயம். அப்படியானால் இந்த தாக்குதல் மூலம் அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள யார் முற்பட்டிருப்பார்கள் என்பதை  கர்த்தினால் மெல்கம் ரஞ்சித்  வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும் என்றார்

(எம்.ஆர்.எம்.வசீம்) -வீரகேசரி பத்திரிகை-

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page