“அவள் கதை” – விவாகரத்து இன்றி இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பெண்

“நாங்கள்‌ விவாகப்‌ பதிவின்றி நிக்காஹ்‌ மாத்திரம்‌ செய்து கொண்டு 9 வருடங்கள்‌ வாழ்ந்தோம்‌. எங்களுக்கு மூன்று பெண்‌ பிள்ளைகள்‌. திருமணம்‌ செய்து 9 வருடங்களின்‌ பின்பு என்னை விட்டும்‌ பிரிந்து சென்ற எனது கணவர்‌ இப்போது மேலும்‌ இரண்டு பெண்களை நிக்காஹ்‌ செய்து கொண்‌டுள்ளார்‌. திருமணப்‌ பதிவு செய்து கொள்ளவில்லை.

தற்போது இரண்டாவது மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு அவளின்‌ இரண்டு பிள்ளைகள்‌ மற்றும்‌ மூன்றாவது மனைவியுடன்‌ எனது மகளின்‌ வீட்டில்‌ வசிக்கிறார்‌. எனது மூன்றாவது பிள்ளைக்கு தற்போது வயது 12. எனது கணவரிடமிருந்து பிள்ளை தாபரிப்பு பெற்றுத்தாருங்கள்‌’ என அவள்‌ காதி நீதிமன்றத்தில்‌ விண்ணப்பித்திருக்கிறாள்‌. இது அவளது கதை.

அவள்‌ நாகூர்‌ உம்மா. கண்டி மாவட்டத்தைச்‌ சேர்ந்‌தவள்‌, எட்டாம்‌ தரம்‌ வரையில்‌ படித்திருக்கிறாள்‌. அவளைத்‌ தொடர்ந்தும்‌ படிக்க வைப்பதற்கு பெற்றோருக்கு வசதியிருக்‌கவில்லை. அதனால்‌ அவள்‌ படிப்பை நிறுத்திக்‌ கொண்டாள்‌. பாடசாலை விட்டு விலகியதும்‌ அவள்‌ தையல்‌ வகுப்புகளில்‌ பயிற்சி பெற்றதன்‌ பின்பு தையல்‌ வேலைகளில்‌ ஈடுபட்டாள்‌.

இச்சத்தர்ப்பத்தில்‌ அயல்‌ கிராமத்தைச்‌ சேர்ந்த சல்மான்‌ என்ற வாலிபருக்கும்‌ அவளுக்கும்‌ தொடர்பு ஏற்பட்டது. அது காதலாக மாறியது இரு தரப்பு பெற்றோரும்‌ அவர்களது தொடர்‌பினை எதிர்த்தார்கள்‌. சல்மான்‌ நிரந்தர தொழில்‌ எதுவும்‌ செய்யாமையால்‌ நாகூர்‌ உம்மாவின்‌ பெற்றோர்‌ இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்‌. தொடர்பினை கைவிடும்‌ படி நாகூர்‌ உம்மாவை எச்சரித்தார்கள்‌. பெற்றோரின்‌ எதிர்ப்புக்கு மத்தியில்‌ அவர்கள்‌ இருவரும்‌ ஓடிப்போய்‌ மெளலவி ஒருவரிடம்‌ இரண்டு சாட்சிகளின்‌ முன்னிலையில்‌ நிக்காஹ்‌ செய்து கொண்டார்கள்‌

சல்மான்‌ தொழிற்சாலையொன்றில்‌ தற்காலிகமாக தொழிலாளியாக வேலைசெய்து கொண்டிருந்தார்‌. திருமணம்‌ செய்து 9 வருடங்களில்‌ அவர்கள்‌ 3 பெண்‌ குழந்தைகளுக்கு பெற்றோர்‌ ஆனார்கள்‌. 9 வருட காலமும்‌ நாகூர்‌ உம்மா சல்மானுடன்‌ பல பிரச்சினைகளுக்கு மத்தியிலே நாட்களைக்‌ கடத்தினாள்‌. சல்மானுக்கு பல பெண்களுடன்‌ தொடர்பு இருந்தது. இந்தத்‌ தொடர்பினை எதிர்த்த போதெல்லாம்‌ சல்மான்‌ மனைவியை தாக்கினார்‌.

9 வருட திருமண வாழ்க்கையின்‌ பின்பு சல்மான்‌ ஊரிலிருந்தும்‌ பெண்‌ ஒருவருடன்‌ ஓடிப்போய்‌ அவளை நிக்காஹ்‌ செய்து கொண்டு அந்தப்‌ பெண்ணுடனே வாழ்ந்தார்‌. தனது முதலாவது மனைவியுடனும்‌ பிள்ளைகளுடனும்‌ எந்தத்‌ தொடர்‌பையும்‌ வைத்துக்‌ கொள்ளவில்லை. அவர்களைத்‌ தாபரிக்கவும்‌ இல்லை. இந்நிலையில்‌ தனது மூன்று பிள்ளைகளையும்‌ வளர்ப்பதற்காக நாகூர்‌ உம்மா பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்குப்‌ பயணமானாள்‌.

சவூதியில்‌ தொடர்ந்தும்‌ அவள்‌ இருக்க விரும்பவில்லை. மூன்று வருடங்களில்‌ நாடு திரும்பினாள்‌. அவளது பெற்றோர்‌ அவள்‌ தனிமையில்‌ இருப்பதை விரும்பவில்லை. அவளுக்கு வேறொரு திருமணம்‌ செய்து வைத்தனர்‌. அவள்‌ விவாகரத்து பெற்றவள்‌ என்று தெரிவித்தே திருமணம்‌ செய்து வைக்கப்‌பட்டது. இரண்டாவது கணவருடனும்‌ முன்னைய கணவரான சல்மானின்‌ 3 பிள்ளைகளுடனும்‌ அவள்‌ வாழ்க்கையை ஆரம்‌பித்தாள்‌.

அவளதும்‌ சல்மாளினதும்‌ முதல்‌ பெண்‌ பிள்ளைக்கு 17 வயது பூர்த்தியானதும்‌ அவளுக்கு திருமணம்‌ செய்து வைத்தாள்‌. அந்தத்‌ திருமணத்துக்கு சல்மான்‌ எந்த உதவியும்‌ செய்யவில்லை. அப்போது சல்மான்‌ இரண்டாவதாக நிக்காஹ்‌ செய்து கொண்ட பெண்ணுக்கு இரண்டு பிள்ளைகள்‌ இருந்‌தார்கள்‌. மனைவியையும்‌ இரண்டு பிள்ளைகளையும்‌ தாபரிப்‌பதற்கு தொழில்‌ எதுவும்‌ இல்லாத நிலையில்‌ சல்மான்‌ தனது இரண்டாவது மனைவியை பணிப்பெண்ணாக சவூதிஅரேபியாவுக்கு அனுப்பி வைத்தார்‌. அவள்‌ சவூதியிலிருந்து அனுப்பிவைத்த பணத்திலே சல்மான்‌ இரண்டாவது மனைவியின்‌ பிள்‌களைகளை வளர்த்தார்‌.

இரண்டாவது மனைவியை பணிப்பெண்ணாக சஷூதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்த சல்மான்‌ 6 மாதங்களில்‌ மேலுமொரு பெண்ணை நிக்காஹ்‌ செய்து மூன்றாவது மனைவியாக்கிக்‌ கொண்டார்‌. மூன்றாவது மனைவியையும்‌ இரண்‌டாவது மனைவியின்‌ பிள்ளைகள்‌ இருவரையும்‌ அழைத்துக்‌ கொண்டு தனது முதலாவது மனைவி நாகூர்‌ உம்மாவினது மூத்த பெண்‌ பிள்ளையின்‌ வீட்டுக்கு அழைத்துச்‌ சென்று அடைக்கலம்‌ கோரினார்‌. தனது தந்த தாயாரான நாகூர்‌ உம்‌மாவைப்‌ பிரிந்து வேறு திருமணம்‌ செய்து கொண்டிருந்தாலும்‌ அவரது முதல்‌ மனைவியின்‌ மகள்‌ அவரை கைவிட்டுவிடவில்லை. அடைக்கலம்‌ கொடுத்தாள்‌.

அவள்‌ தனது தந்தையின்‌ மூன்றாவது மனைவியையும்‌ இரண்‌டாவது மனைவியின்‌ 2 பிள்ளைகளையும்‌ ஏற்றுக்‌ கொண்டாள்‌. நாகூர்‌ உம்மா தனது மூன்று பெண்‌ பிள்ளைகளில்‌ இருவரை திருமணம்‌ செய்து கொடுத்து விட்டாள்‌. தற்போது மூன்றாவது மகளே அவளுடன்‌ இருக்கிறாள்‌. இதுவரை காலம்‌ அவர்களை தாபரித்து வந்த நாகூர்‌ உம்மாவின்‌ இரண்டாவது கணவர்‌ நோய்வாய்ப்பட்டு நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வருகிறார்‌. இந்நிலையில்‌ நாகூர்‌ உம்மாவினால்‌ தனது மகளை தாபரிக்க முடியவில்லை.

இதுவரை காலம்‌ பல வருடங்களாக விவாகரத்து பெற்றுக்‌ கொள்ளாது சல்மானும்‌, நாகூர்‌ உம்மாவும்‌ வெவ்வேறு திருமணம்‌ செய்து கொணடு தனித்தனி வாழ்க்கை வாழ்கிறார்கள்‌. சல்மானை நிக்காஹ்‌ செய்து கொண்டதற்கான எவ்வித ஆதாரமும்‌ நாகூர்‌ உம்மாவிடம்‌ இல்லை. நான்‌ உன்னை விவாகப்‌ பதிவு செய்து கொள்ளவில்லை. அதனால்‌ பிள்ளைகளும்‌ நீயும்‌ எனக்கு சட்டரீதியாக சொந்தமில்லை. அதனால்‌ என்னால்‌ செலவுக்குப்‌ பணம்‌ தர முடியாது என இதுவரை சல்மான்‌ மறுத்து வருகிறார்‌. ஆனால்‌ மூன்றாவது பிள்ளையின்‌ பிறப்புச்‌ சாட்சிப்‌ பத்திரத்தில்‌ தந்தையின்‌ பெயர்‌ சல்மான்‌ என்றே பதிவு செய்யப்‌பட்டுள்ளது. அதனை அத்தாட்சியாகக்கொண்டு பிள்ளைக்கு தாபரிப்பு கோரியுள்ளாள்‌.

தனக்கும்‌ பிள்ளைகளுக்கும்‌ துரோகம்‌ செய்து, தாபரிப்புச்‌ செய்யாத சல்மானுக்கும்‌, இரண்டாவது மனைவியின்‌ பிள்ளைகளுக்கும்‌ அடைக்கலம்‌ கொடுக்க வேண்டாமென அவள்‌ தனது மூத்த பெண்‌ பிள்ளையிடம்‌ வேண்டுகோள்‌ விடுத்திருக்கிறாள்‌.

விவாகப்‌ பதிவு செய்து கொள்ளாது நிக்காஹ்‌ மாத்திரம்‌ செய்து கொண்ட நாகூர்‌ உம்மா சல்மானை விவாகரத்து செய்து கொள்ளாது வேறொருவரை திருமணம்‌ செய்து கொண்டுள்ளமை சட்டத்தை மீறிய செயல்‌ என நாகூர்‌ உம்மாவை நீதிமன்றம்‌ எச்சரித்திருக்கிறது. முதலாவது கணவரை விவாகரத்து செய்து கொள்ள விண்ணப்பிக்கும்படி கோரியிருக்கிறது (16-4-21)

You cannot copy content of this page