துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானதல்ல – நீதி அமைச்சர்

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள  கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் அரசியமைப்பிற்கு முரணான ஏற்பாடுகள் ஏதும் உள்ளடக்கப்படவில்லை. 

அரசியலமைப்பிற்கு உட்பட்ட வகையில் சட்டமூலம் காணப்படுகிறது என சட்டமாதிபர் அறிவுறுத்தியுள்ளார். சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்மானத்தை முழுமையாக செயற்படுத்துவோம்.

அரசியல்மைப்பிற்கு முரணாக ஒருபோதும் அரசாங்கம் செயற்படாது. என நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்ட மூலம் தொடர்பில் தவறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.  வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில்  புதிய திட்டங்கள் இச்சட்ட மூலத்தின் ஊடாக வகுக்கப்பட்டுள்ளன. குறுகிய அரசியல்   நோக்கங்களுக்காக  நாட்டின் அபிவிருத்திக்கு  எதிராக செயற்படுவது தவறான செயற்பாடாகும்.

வியாபாரா  முதலீட்டு நாடுகள் பட்டியலில் இலங்கை 99 ஆவது இடத்தில் உள்ளது.வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதில்  டுபாய், குஜராத், தென்கொரியா, மற்றும் மலேசியாஆகிய நாடுகளுக்கிடையில் கடுமையான போட்டித்தன்மை காணப்படுகிறது. போட்டித்தன்மையான சூழ்நிலையில் ஒரு சில விடயங்களில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை இலங்கை முதலீட்டு துறைக்கும் காணப்படுகிறது.

கொழும்பு துறைமுக நகரம் சீனாவிற்கு முழுமையாக வழங்கும் வகையில் சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடுவது பொய்யானது. துறைமுக நகர வலயத்தில் உள்ள269 ஹெக்கடயார் நிலப்பரப்பில் 91 ஹெக்டயார் நிலப்பரப்பு  பொது வசதிகளுக்காக  ஒதுக்கப்பட்டுள்ளன. 116 ஹெக்டயார் நிலப்பரப்பு  அதாவது 43 சதவீத நிலப்பரப்பு செயற்திட்ட  நிறுவனத்துக்கு 99 வருட காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும்.

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price

43 சதவீத நிலப்பரப்பு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டாலும். இதில் நகர அபிவிருத்தி அதிகார சபை பிரதான பங்குதாரராக  காணப்படும். நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் ஒப்பந்தம் கைமாற்றப்படும். துறைமுக நகரத்தின் அனைத்து செயற்பாடுகளும் தற்போது நடைமுறையில் உள்ள பொது சட்டத்துக்கு அமையவே முன்னெடுக்கப்படும்.

போட்டித்தன்மையான சூழலில் நேரடி முதலீடுகளை  ஊக்குவிக்க வேண்டுமாயின் முதலீட்டாளர்களுக்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க  வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் ஆணைக்குழு ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.  

கொழும்பு துறைமுக நகர  நிலப்பரப்பு கொழும்பு பரிபாலன சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. அதற்கான வர்த்தமானி2019 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணற்ற வகையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

சட்டமூல வரைபு அரசியவலமைப்பிற்குட்பட்டுள்ளது என சட்டமாதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார். இச்சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்மானத்தை முழுமையாக ஏற்போம் என்றார்.-வீரகேசரி பத்திரிகை-