(ஏ.ஆர்.ஏ.பரீல்) ஜெய்லானியில் தொல்பொருள் பிரதேசமாக பிரகடனப்படுதப்பட்டுள்ள சுரங்கமலையில் நிர்மாணிக்கப்படும் 100 அடி உயரமான தாதுகோபுரத்துக்கு ஜெய்லானி பள்ளிவாசல் பரிபாலன சபையின் ஆலோசகர் ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் நெல்லிகல சர்வதேச பெளத்த மத்திய நிலையத்தின் தலைமை பிக்குவான வதுரகும்புர தம்மாரதன தேரர் தெரிவித்துள்ள கருத்துகள் முற்றுமுழுதாக தவறானவை என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் “விடிவெள்ளிக்கு கருத்து தெரிவிக்கையில்; நெல்லிகல தேரர் ஜெய்லானி பள்ளிவாசல் பிரதேசம் அவர்களுக்குரியதெனவும், பள்ளிவாசலில் இஸ்லாத்துக்கு முரணான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கருத்து வெளியிட்டுள்ளார். ஜெய்லானியில் அடிப்படைவாத வஹாபிசக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார். இக்கருத்துக்கள் அடிப்படையற்றதாகும்.
பள்ளிவாசலும் சுரங்கமலையும் தொல்பொருள் வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள 6 ஏக்கர் நிலப்பரப்பிலேயே அமைந்துள்ளது. எனவே தொல்பொருள் வலயத்தில் எவ்வித நிர்மாணப்பணிகளையும் முன்னெடுக்கமுடியாது. ஆனால் தற்போது சுரங்கமலையில் தாதுகோபுரமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
2013 ஆம் ஆண்டு தற்போதைய ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த காலத்தில் ஜெய்லானி பள்ளிவாசல் தொடர்பில் உலமா சபை தவறான கருத்துகளைத் தெரிவித்துள்ளது. இதன்காரணமாகவே நெல்லிகல தேரர் பள்ளிவாசலில் இஸ்லாத்துக்கு விரோதமான கொள்கைகள் பின்பற்றப்படுவதாகத் தெரிவித்துள்ளார். அவரது கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
‘ஜெய்லானி பள்ளிவாசலையும், ஸியாரத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கு பள்ளிவாசல் பரிபாலனசபை அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என்றார்.