ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பசில் ராஜபக்ஷவின் கை பாவையாக செயற்படுகின்றார். ராஜபக்ஷர்கள் நாட்டின் சாபக்கேடு என்று நாட்டு மக்கள் வெறுக்கும் அளவிற்கு பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் குறுகிய காலத்தில் பலவீனமடைந்துள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
கிராமத்துடன் உரையாடல் என்ற நாடகத்தை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும். நாடு பாரிய நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகரத்தின் ஆதிக்கம் சீனாவின் வசம் செல்லவுள்ளதை அறிந்து இந்தியா கச்சத்தீவை கைப்பற்ற முயற்சிக்கிறது. நாட்டு தலைவர் என்ற ரீதியில் இவ்வாறான நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் விஜயதாஸ ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
அபயராம விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெயரளவு ஜனாதிபதியாகவும் , பஸில் ராஜபக்ஷவின் கைபாவையாகவும் செயற்படுகிறார்.
அரச நிர்வாகம் தொடர்பில் அனைத்து தீர்மானங்களையும் அமெரிக்க குடியுரிமையினை கொண்ட பஸில் ராஜபக்ஷ எடுப்பதானது 69 இலட்சம் மக்களின் மக்களாணையினை கேலிக்கூத்தாக்கியுள்ளது.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை ஜனாதிபதியே சமர்ப்பித்துள்ளார். நாட்டை பாதுகாத்து தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி, கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவின் காலணித்துவ ஆட்சிக்கு கொண்டு வர முயற்சிப்பது முற்றிலும் தவறான செயற்பாடாகும்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 30 வருட கால சிவில் யுத்தத்தை வெற்றி கொண்டதன் பின்னர் நாட்டு மக்கள் இரண்டாவது முறையாகவும் ஆட்சியதிகாரத்தை வழங்கினார்கள். 2017 ஆம் ஆண்டு நடத்த வேண்டிய ஜனாதிபதி தேர்தல் 2015 ஆம் ஆண்டு முற்கூட்டியே நடத்தப்பட்டது.
இக்காலப்பகுதியில் நாடு பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டது. இதற்கு பஸில் ராஜபக்ஷவே காரணம். முறையற்ற அரச நிர்வாகததினால் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தார்.
பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாட்டு மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கத்தை ஸ்தாபித்துள்ளார்கள்.
மக்களின் எதிர்பார்ப்பு இன்று பொய்யாக்கப்பட்டுள்ளது. ராஜபக்ஷர்கள் நாட்டின் சாபக்கேடு என்று வெறுக்கும் அளவிற்கு ஜனாதிபதியின் குறுகிய கால ஆட்சி பலவீனமடைந்துள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷவை 4 வருட காலத்திற்குள் வீட்டுக்கு அனுப்பியதை போன்று பஸில் ராஜபக்ஷ ஜனாதிபதியை அவரது பதவி காலம் முடிவடைவதற்கு முன்னர் வீட்டுக்கு அனுப்பிவைப்பார்.
கிராமத்துடனான உரையாடல் என்ற போலி நாடகத்தை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும். கிராமப்புறம் தொடர்பில் ஆராய 8400 அரச அதிகாரிகள் பொருத்தமான துறைகளில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.
அந்த அதிகாரிகள் தங்களின் பொறுப்புக்களை முறையாக செயற்படுத்த ஜனாதிபதி அரச நிர்வாக கட்டமைப்பினை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதனை விடுத்து கிராமம் கிராமமாக செல்வது வெறும் காட்சிப் பொருளாகவே காணப்படும்.
ஜனாதிபதி மற்றும் பஸில் ராஜபக்ஷ ஆகியோரின் குடும்பத்தினர் அமெரிக்க குடியுரிமையில் பாதுகாப்பாக உள்ளார்கள்.
இவர்களின் பிள்ளைகள் இலங்கைக்கு சுற்றுலாபயணிகளாகவே வருகை தருகிறார்கள். இலங்கையில் வாழ்பவர்களுக்கு நாடு என்றதொன்று இருக்குமா என்பது கேள்விக்குறியாகவுள்ளது.
சீனாவின் காலணித்துவ ஆட்சிக்குள் கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்ட மூலம் உருவாக்கப்பட்டுள்ளமை நாட்டை பாரிய நெருக்கடிக்குள் கொண்டு செல்லும்.
சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய பலமிக்க நாடுகளின் பொருளாதார முன்னேற்றம், அதிகார போராட்டத்தில் இலங்கை பலியாக வேண்டிய நிலை தோற்றம் பெறும். கொழும்பு துறைமுக நகரத்தின் ஆதிக்கம் சீனாவின் வசம் செல்லவுள்ளதை அறிந்து இந்தியா கச்சத்தீவை கைப்பற்ற முயற்சிக்கிறது.
நாட்டின் பல அடிப்படை பிரச்சினைகள் காணப்படுகின்றன. விசத்தன்மையான உணவினை நாட்டு மக்கள் தெரிந்து உட்கொள்கிறார்கள். இவ்வாறான பாரதூரமான பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார்.
(இராஜதுரை ஹஷான்) -வீரகேசரி பத்திரிகை-