அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரின் ஜன்னலில் அமர்ந்து பயணித்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள் நால்வரும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த சனிக்கிழமை அதிகாலை பாதுகாப்பற்ற முறையில் கார் ஒன்று பயணிக்கும் காணொளி சமூகவலைத்தலத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது. 

இதன்போது காரில் செல்லும் பயணிகள் காரின் ஜன்னலில் அமர்ந்து செல்வதும் பதிவாகியிருந்தது. இந்த விடயம் தொடர்பில் அதிவேக நெடுஞ்சாலை பாதுகாப்பு பொலிஸ் பிரவினர் விசேட விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதற்கமைய சம்பந்தப்பட்ட காரை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் நேற்று பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், இதன்போது நீதிவான் அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதன்போது காரின் ஜன்னலில் அமர்ந்து சென்ற இளைஞர்கள் நால்வரையும் பொலிஸார் கைது செய்திருந்தனர். அக்குறனை பகுதியைச் சேர்ந்த 18-20 வயதுக்கு இடைப்பட்டவர்களை அவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள் மோட்டார் வாகன சட்டவிதிகளுக்கு புறம்மாக செயற்பட்டுள்ளதுடன், ஏனையவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் பயணித்துள்தாக அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் அனைவரும் இன்று செவ்வாய் கிழமை பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். இதன் போது நீதிவான் சந்தேக நபர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price

இந்நிலையில் காரின் ஆரம்ப உரிமையாளர் மற்றும் அதை அவரிடமிருந்து ,பெற்றுக்கொண்ட நபர் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன்,அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிவேக நெடுஞ்சாலை பாதுகாப்பு பொலிஸ் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர். -வீரகேசரி பத்திரிகை-