சீன ஆக்கிரமிப்பு சிங்களவர்களிடையே விரைவில் கிளர்ச்சியை உருவாக்கும்

நாட்டில் ஏற்பட்டுவரும் சீன ஆக்கிரமிப்பினால் எதிர்காலத்தில் சிங்கள சமூகத்திற்கிடையில் கிளர்ச்சியொன்று உருவாகுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான 4ஆம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழர்களுக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட அதே அசாதாரண செயற்பாடுகளே முஸ்லிம் சமூகத்திற்கும் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக வன்முறைகள் இடம்பெற்ற காரணத்தினால்தான் ஈஸ்டர் தாக்குதல் ஏற்பட்டது.

ஆனால், ஒன்றை ஏற்றுக்கொள்ளவேண்டும், அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கம் இரண்டு வாரங்களில் குற்றவாளிகளை கண்டறிந்து நிலைமைகளை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. தப்பித் தவறியேனும் இன்றைய அரசாங்கமே அப்போதும் ஆட்சியில் இருந்திருந்தால் இதை வைத்தே அரசியல் செய்திருப்பார்கள்.

இன்றும் அதனையே செய்துவருகின்றனர். இந்த நாட்டில் தமிழ் – முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும் வேளையில் சிங்களவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

ஆனால், சிங்கள மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றினை விடுக்கின்றேன். எதிர்காலத்தில் நாட்டில் உருவாகும் நெருக்கடி நிலைமையில் சிங்கள மக்கள் மத்தியில் புரட்சி ஒன்று உருவாகுமானால் அப்போது என்னவாகும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். இப்போது சீனாவின் ஆக்கிரமிப்பு, அவர்களின் வர்த்தக ஆக்கிரமிப்பு காரணமாக எதிர்காலத்தில் நிச்சயமாக நாட்டில் பாதிக்கப்பட்ட சிங்கள சமூகமொன்று உருவாகும். அப்போது மீண்டும் நாட்டில் கிளர்ச்சி ஒன்று உருவாகும். இலங்கைக்குள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக முரண்பாடுகளை ஏற்படுத்தி அரசியல் செய்யும் கலாசாரத்தை கைவிட வேண்டும்.

அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ள சமூகத்திற்கு எதிரான தாக்குதலை நடத்த திட்டம் தீட்டவும் இவர்கள் அஞ்சப்போவதில்லை. இன்று தமிழ் மக்கள் தமது உறவுகளைத் தேடி அலைவதை போலவே இன்னும் பத்து ஆண்டுகளில் கிறிஸ்தவ சமூகமும் ஈஸ்டர் தாக்குதலுக்கான நியாயத்தை தேடி அலைய வேண்டிய நிலைமை உருவாகும் – என்றார்.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter