சஹ்ரான் உள்ளிட்ட குழு தொடர்பில் முஸ்லிம்கள் பொறுப்புடனே செயற்பட்டார்கள் – அலிசப்ரி

கடந்தகால சம்பவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இனங்களுக்கிடையில் ஒற்றுமை, நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். மாறாக சுயநல அரசியல் நோக்கத்தில் செயற்பட்டு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாதத்தின்பால் தள்ளிவிடக்கூடாது. அத்துடன் இந்த தாக்குதலின் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான நான்காவது நாள் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்த தாக்குதலை தடுக்கக் கூடியதாக இருந்தாலும் பொறுப்பானவர்கள் தவறி விட்டதாக ஆணைக்குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இரத்த தாகம் கொண்ட குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முழு முஸ்லிம் சமுகமும் கண்டித்துள்ளது. இதனுடன் தொடர்புள்ள அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எமது கவலையை தெரிவிக்கிறோம்.

மேலும்  1,100 வருடங்களாக ஏனைய சமுகங்களுடன் ஒற்றுமையாக வாழும் மக்களை அடிப்படைவாதத்தின் பால் தள்ளுவதாக அமையக்கூடாது. பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக பிரிவினையை வளர்ப்பதாக இந்த அறிக்கை இருக்கக்கூடாது.

அதேபோன்று சுயலாப அரசியலுக்காக இந்த பிரச்சினையை பயன்படுத்தி இனங்களுக்கிடையில் நல்லிணகத்தை குழப்பும் வகையில் இந்த அறிக்கையை யாரும் பயன்படுத்தக் கூடாது. இலங்கையில் வாழும் மொத்த முஸ்லிங்களும் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக எந்த சாட்சியும் கிடையாது என அறிக்கை தெரிவிக்கிறது. அவ்வாறு இருந்தும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளங்களின் வாயிலாக பரப்பப்படுகிறன. 

Read:  கோட்டா, மஹிந்த இருவரும் பதவி விலகியதற்கான காரணத்தைக் கூறும் நாமல் ராஜபக்‌ஷ!

மேலும் சாய்ந்தமருதில் இயங்கிய பயங்கரவாதத்துடன் தொடர்புள்ள வீடு அப்பிரதேச மக்கள் வழங்கிய தகவலையடுத்தே பிடிபட்டதையும் அறிக்கை குறிப்பிடுகிறது. எந்தவொரு மதமும் அடிப்படைவாதம் இனவாதத்துக்கு இடமளிப்பதில்லை.

உங்களுக்கு உங்கள் மார்க்கம் எமக்கு எமது மார்க்கம் என்றே குர்ஆன் குறிப்பிடுகிறது.கொடைவழங்குதல், தொழுதல் என்பவற்றை விட மற்றவர்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்ப்பதை உயர்வான விடயமாக நபிகள் நாயகம் தெரிவித்திருக்கிறார்கள். அதேபோன்று குரோதத்தினால் மேலும் குரோதம் வளரும் என்று புத்தபிரான் போதித்திருக்கிறார். 

இவ்வாறான பின்னணியில் வாழும் நாங்கள்  ஒருவருக்கொருவர்  குரோதம், சந்தேகம்,வெறுப்பு என்பவற்றில் இருந்து நீங்கி, ஒவ்வொருவர்களுக்கும் இடையில் நல்லுறவை வளர்கக்கவும் ஒற்றுமையைபேணவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல்  இறந்த காலத்தின் மோசமான நினைவுகளின் சிறைக்கைதிகளாக மாறக் கூடாது. 

இஸ்லாத்தை அண்டியதாக உருவாகும் பயங்கரவாத்தை ஒழிக்கும் பொது முஸ்லிம்களின் ஒத்துழைப்பை பெறவேண்டும்.சஹ்ரான் உள்ளிட்ட குழு தொடர்பில் முஸ்லிம்கள் பொறுப்புடன் செயற்பட்டார்கள். முஸ்லிம்கள் பலர் முறைப்பாடு செய்திருந்தார்கள். அடிப்படைவாதிகள் தொடர்பாக தகவல் வழங்கிய மாவனல்ல பிரதேச இளைஞர் தாக்கப்பட்டார். நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம்களையும் நகைப்புக்குள்ளாக்கி ஒதுக்காமல், பயங்கரவாதத்தை ஒழிக்கும் செயற்பாட்டிற்கு அவர்களை பங்காளர்களாக்கிக் கொள்ள வேண்டும்.

பொதுவாக முஸ்லிம்கள் அடிப்படைவாதத்தை ஆதரிக்கவில்லை.ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையாக வாழவே அவர்கள் விரும்புகின்றனர். இனவாதம் அடிப்படைவாதம் என்பவற்றை பரப்பி மக்களை தூரமாக்காது மக்கள் மத்தியில் நல்லுறவை வளர்க்க அனைவரும் முன்வர வேண்டும்.சந்தேகத்தை ஒதுக்கி கௌரவமான சமூகமாக வாழ்வதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது என்றார்.

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) -வீரகேசரி பத்திரிகை-