ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரியை மறைப்பதற்காக நௌபர் மௌலவி மீது சகல பழியையும் சுமத்தி அறிக்கையை மூடிவிட முயற்சிக்கின்றனர்,
ஆனால் தாக்குதலின் திரைமறைவில் இயங்கியவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும், சஹ்ரானின் பின்னணியில் இஸ்ரேலிய புலனாய்வுத்துறை இருந்துள்ளதா, சாராவா இந்தியாவிற்கு இரகசியமாக தகவல்களை கொடுத்தார் என்ற விடயங்களையும் கண்டறிய வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹகீம் சபையில் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகின்ற நிலையில் இதனை இயக்கியது, பின்னணியில் இருந்து செயற்பட்டது நௌபர் மௌலவி என கூறி அவர் மீது சகல குற்றச்சாட்டையும் சுமத்தி அறிக்கையை மூடிவிட முயற்சிக்கின்றனர்.
இந்த நபரும் ஒருவராக இருக்க முடியும், சஹ்ரான் பிரதான நடிகராக இருக்க முடியும், ஏனைய ஒரு சிலர் துணை நடிகர்களாக இருக்க முடியும், சாராவும் ஒரு நடிகையாக இருக்க முடியும்.
ஆனால் இந்த படத்தின் இயக்குனர் யார் ? அதுவே முக்கியமானதாகும். இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களில் உயிருடன் இருக்கும் ஒரே நபர் சஹ்ரானின் மனைவியே, அதன் காரணமாகவே அவரை விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அவரை விசாரித்ததில் அபு ஹிந்த் என்ற நபர் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமல்ல இந்த விசாரணை அறிக்கையில் மிக முக்கியமான விடயமொன்று உள்ளது, சஹ்ரானின் பின்னணியில் இஸ்ரேலிய புலனாய்வுத்துறை இருந்துள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
- தவறாக பயன்படுத்தப்படும் “நிக்காஹ்” எனும் சலுகைஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரியை மறைப்பதற்காக நௌபர் மௌலவி மீது சகல பழியையும் சுமத்தி அறிக்கையை மூடிவிட முயற்சிக்கின்றனர், ஆனால் தாக்குதலின் திரைமறைவில் இயங்கியவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும், சஹ்ரானின் பின்னணியில் இஸ்ரேலிய புலனாய்வுத்துறை இருந்துள்ளதா, சாராவா …
அதற்கான பல்வேறு சாட்சியங்கள் விசாரணை அறிக்கையிலும் உள்ளது. மத்திய கிழக்கில் ஐ.எஸ் அமைப்பின் செயற்பாடுகளின் பின்னணியில் இவர்கள் உள்ளனர் என்பது புதிய தகவல் அல்ல.
அதுமட்டுமல்ல சஹ்ரான் தனது குடும்பத்துடன் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்த நேரத்தில் சாராவும் அவர்களுடன் இருந்தார் என சஹ்ரானின் மனைவியின் சாட்சியில் உள்ளது. மறுபக்கம் இந்தியாவின் பக்கமிருந்து புலனாய்வு தகவல் கிடைத்தவேலையில் இந்த தகவல் தொலைபேசி பதிவா என கேட்டபோது, இல்லை இது நேரடி தகவல், அல்லது அந்த குழுவில் இருந்த தமது ஒற்றரின் தகவல் என தெரிவித்துள்ளனர்.
அதேபோல் காத்தான்குடி தாக்குதலில் சாரா இருந்ததாக சஹ்ரானின் மனைவியின் வாக்குமூலத்தில் உள்ளது, சாரா இந்தியாவிற்கு தப்பித்ததாக சாட்சியங்கள் பதியப்பட்டுள்ளது.
எனவே இந்த விடயங்களை தொடர்புபடுத்தி பார்க்க வேண்டும். எவ்வாறு இருப்பினும் அப்பாவி நபர்கள் சிலரும் இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் ஆக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவையும் சிக்க வைத்துள்ளனர். இதற்கு காரணம் என்னவென்றால் 51 நாள் அரசியல் நெருக்கடி காலத்தில் அப்போதைய பலவந்த அரசாங்கத்திற்கு எதிராக வழக்கில் ஆஜராகிய காரணத்தினால் இவை இடம்பெற்று வருகின்றது. அதுமட்டுமல்லாது பல்வேறு முற்போக்கு சிந்தனையாளர்கள் கூட இன்று அடிப்படைவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர்.
அஹமட் லெப்பே மொஹம்மட் நியாஸ் என்ற தற்கொலைதாரி இராணுவ புலனாய்வுத்துறையில் இருந்துள்ளார். கைது செய்யப்பட்ட மில்ஹான் ஒரு இராணுவ புலனாய்வு அதிகாரி, ஆமி மொய்தீன் என்பவர் குற்றப்புலனாய்வுக்கு தகவல் கொடுத்தவர், இவர்கள் அனைவரும் இறுதியில் பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தியுள்ளனர்.
அப்படியென்றால் இலங்கையின் புலனாய்வுத்துறையினால் வளர்க்கப்பட்ட நபர்களே இவ்வாறு செய்கின்றனர் என இலங்கையின் புலனாய்வுத்துறையினால் கண்டறிய முடியவில்லையா என்ற கேள்வி எழுகின்றது.
எனவேதான் இந்த தாக்குதலுக்கு பின்னால் இருந்த சூத்திரதாரிகள் யார் என்பதை கண்டறிய வேண்டும். அது முஸ்லிம் சமூகத்திற்கும் மிக முக்கியமான விடயமாகும். அதேபோல் இந்த தாக்குதலுக்கு பின்னால் இஸ்ரேல் இருந்ததா எனவும், அபு ஹிந்த் இருந்தாரா என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
வடக்கில் இடம்பெற்ற போராட்டம் மற்றும் ஜே.வி.பி கிளர்ச்சி ஆகியவற்றை நினைவு கூறுகின்றனர், ஆனால் ஈஸ்டர் தாக்குதலுக்கு முஸ்லிம் ஒருவரேனும் நினைவு கூற முன்வருகின்றனரா, இல்லை.
ஏனெனில் இந்த தாக்குதலுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை. இந்த தாக்குதல் முற்று முழுதாக பயங்கரவாத தாக்குதலாகும், அதில் முஸ்லிம் சமூகத்தை காய்களாக நகர்த்தியுள்ளனர்.
எனவேதான் இந்த தாக்குதல் குறித்து சரியான விசாரணைகளை நடத்தியாக வேண்டும். அறிக்கையில் நல்ல நகர்வுகள் இருந்தாலும் முக்கியமான காரணிகளை கண்டறிய வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் உள்ளது என்றார். -வீரகேசரி பத்திரிகை- (ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)