மீண்டும் எச்சந்தர்ப்பத்திலும் கொரோனா கொத்தணி உருவாகலாம் – எச்சரிக்கை

நாட்டில் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும் , எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீண்டுமொரு கொத்தணி உருவாகக் கூடிய அபாயம் காணப்படுகிறது.

எனவே போக்குவரத்தின் போதும் , பொருட் கொள்வனவின் போதும் , சுற்றுலா செல்லும் போதும் மக்கள் அடிப்படை சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

தமிழ் – சிங்கள புத்தாண்டு அண்மித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

எனினும் நாளாந்தம் சுமார் 100 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீண்டும் வைரஸ் பரவல் தீவிரமடையக் கூடிய அபாயம் காணப்படுகிறது.

எனவே போக்குவரத்தின் போதும் , பொருட் கொள்வனவின் போதும் , சுற்றுலா செல்லும் போதும் மக்கள் அடிப்படை சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை நிச்சயம் பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியைப் பேண முடியாததும் , மக்கள் அதிகளவில் ஒன்று கூடும் இடங்கள் என்பவற்றில் பொது மக்கள் ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

இதன் போது மேல் மாகாணத்தில் தனியார் வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவிக்கையில் ,

மேல் மாகாணத்தில் 12 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் வழமையான மாணவர் தொகையில் 50 வீதமானோர் மாத்திரமே வகுப்புக்களுக்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

அத்தோடு வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு முன்னர் பிரதேச பொது சுகாதார பரிசோதகர்களிடம் அனுமதி பெற்றப்பட வேண்டும். மேலும் புத்தாண்டின் பின்னர் பல்கலைக்கழங்களையும் ஆரம்பிப்பதற்கான சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்கும் எதிர்பார்த்துள்ளோம் என்றார். -வீரகேசரி பத்திரிகை-

Previous articleஇன்றைய தங்க விலை (07-04-2021) புதன்கிழமை
Next articleஇலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை – சட்டமா அதிபர் அனுமதி (முழு விபரம்)