முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட NGO தகவல்களை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை

முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட NGO (தன்னார்வ நலனோம்புகை நிறுவனங்களின்) தகவல்களை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை!

முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தன்னார்வ நலனோம்புகை நிறுவனங்களின் தகவல்களைப் புதுப்பிக்க நடடிக்கை எடுத்துவருகிறோம்.

அதற்காக அவ்வாறான நிறுவனங்களை கம்பனிகள் சட்டம் அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களின் கீழ் பதியுமாறு அறிவித்திருக்கின்றோம் என ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தன்னார்வ நலனோம்புகை நிறுவனங்களின் பதிவுகள் இரத்துச்செய்யப்பட்டிருப்பது தொடர்பாக முஜிபுர் ரஹ்மான் கேட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பல தன்னார்வ நலனோம்புகை நிறுவனங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் வருவதாக தொடர்பாக பாதுகாப்பு பிரிவினால் திணைக்களத்திடம் விசாரித்தபோது, அதுதொடர்பான தகவல்கள் திணைக்களத்திடம் இல்லாமல் இருப்பது கேள்விக்குறியான விடயமாகும்.

இந்த நிறுவனங்களின் கணக்கு விபரங்கள் திணைக்களத்துக்கு வழங்கப்படாமல் இருப்பது தொடர்பாக அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு திணைக்களத்துக்கு எந்தவித சட்ட ஏற்பாடுகளும் இல்லை. அதனால் இஹ்து தொடர்பாக புதிய சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

அதனால் இவ்வாறான நன்கொடை நிறுவனங்களாக பதிவு செய்யப்பட்டிருக்கும் அனைத்து நிறுவனங்களையும் கம்பனிகள் சட்டத்தின் கீழ் அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களாக பதிவு செய்யுமாறு வக்பு சபை கடந்த 2019 ஆண்டு எழுத்து மூலம் அந்த நிறுவனங்களுக்கு அறிவித்திருக்கின்றன. அதற்கான விண்ணப்பங்களும் அனுப்பப்பட்டிருந்தன. இதன்போது சில தொண்டு நிறுவனங்கள் செயற்படுவதில்லை என்பது தெரியவந்தது. அதன் பிரகாரம் அந்த நிறுவனங்களின் பதிவு இரத்துச் செய்யப்பட்டிருக்கின்றது.

அத்துடன் வக்பு சபை சட்டத்துக்கமைய பதிவு செய்யப்பட்டிருந்த ஏனைய நிறுவனங்களுக்கு ஒரு வருடகாலம் வழங்கப்பட்டிருந்தன. அதன் பிரகாரம் 2020 ஆகஸ்ட் மாதத்துக்கு பின்னர் வக்பு சபையில் பதிவு செய்யப்பட்டிருந்த பதிவு இலக்கத்தை பயன்படுத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதன் பிரகாரம் சில நிறுவனங்கள் வக்பு சபை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதுடன் ஏனைய நிறுவனங்கள் கம்பனிகள் சட்டம் அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களாக பதிவு செய்யப்பட்டிருப்பதை அறிய கிடைக்கிறது என்றும் தெரிவித்தார். (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page