தேசிய உளவுச் சேவை பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, மலேஷிய தூதரகத்தில் சேவையாற்றியபோது, அங்கு வைத்து பயங்கரவாதி ஸஹ்ரான் ஹாஷிமை சந்தித்துள்ளதாகவும், அவருக்கு இந்தியா, இந்தோனேஷியா செல்ல உதவிகளை செய்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார செய்தியாளர் சந்திப்பொன்றில் கூறிய விடயங்களுக்கு எதிராக சி.ஐ.டி. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தேசிய உளவுச் சேவை பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவினால் இது குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் விசாரணைகளை சிஐடியின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கீழான சிறப்பு தனிப்படை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவிடம், சிஐடியின் பிரத்தியேக குழு இன்று 3 மனி நேரம் அவரை விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
இன்று (05) காலை 9.00 மணி முதல் நன்பகல் 12.15 மணி வரையில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஏற்கனவே இந்த விவகாரத்தின் முதல் கட்டமாக முறைப்பாட்டாளரான மேஜர் ஜெனரால் சுரேஷ் சலே சிஐடிக்கு செய்த முறைப்பாட்டுக்கு அமைவான தனது வாக்குமூலத்தை வழங்கியிருந்தார். இந்நிலையிலேயே தற்போது நளின் பண்டாரவிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.