நீதி நிலை நாட்டப்படுவதுடன் அநியாய கைதுகள் நிறுத்தப்பட வேண்டும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து சரியாக இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் அது தொடர்பான கைதுகளும் பரபரப்புகளும் முடிவுக்கு வரவில்லை.

நாளை மறுதினம் கிறிஸ்தவ மக்கள் உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்கின்ற நிலையில், இந்த விடயம் தேசிய அரங்கில் பேசுபொருளாகியுள்ளது.

இரண்டு வருடங்களாகியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படாத நிலையிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் கண்டறியப்படாத நிலையிலும் கிறிஸ்தவ மக்கள் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். அந்த வகையில் பாதிக்கப்பட்ட சமூகம் என்றவகையில் கிறிஸ்தவ மக்களுக்கு மிக விரைவாக நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது தற்போதைய அரசாங்கத்தின் கடப்பாடாகும்.

இது ஒருபுறமிருக்க இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்றவகையில் தொடர்ச்சியாக பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் மீண்டும் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அசாத் சாலியும் கைது செய்யப்பட்டு பயங்கர வாத தடைச்சட்டத்தின் கீழே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மையப்படுத்தியே ஹஜ்ஜுல் அக்பரும் அசாத் சாலியும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் பல முஸ்லிம் பிரமுகர்களும் கைது செய்யப்படுவார்களோ என்ற அச்சமும் முஸ்லிம் வட்டாரங்களில் மேலோங்கியுள்ளது.

அடுத்து வரும் சில நாட்களில் மேலும் பலர் கைது செய்யப்படுவர் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் சில தினங்களுக்கு முன்னர் கூறியிருப்பதும் இந்த இடத்தில் கவனிக்கத்தக்கது.

ஏலவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபடுத்தி சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் 2020 ஏப்ரல் முதலும் , கவிஞரும் ஜாமி ஆ நளீமியா மாணவருமான அஹ்னாப் ஜெஸீம் 2020 மே முதலும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். முகநூல் பதிவொன்றுக்காக ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எழுத்தாளர் ரம்ஸி ராஸிக் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மறுபுறம் தீவிரவாத செயல்கள் மற்றும் அது தொடர்பான சிந்தனைகளுடன் தொடர்புபட்டவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான நிலையங்களை ஸ்தாபிப்பது தொடர்பான வர்த்தமானியும் அண்மையில் வெளியிடப்பட்டது. இதற்கமைய ஓரிரு வாரங்களில் வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு முகாமில் முதற்கட்டமாக ஒரு தொகுதியினருக்கு புனர்வாழ்வளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

இப்பின்னணியில் எதிர்வரும் நாட்களும் இலங்கை முஸ்லிம்களுக்கு மிகவும் நெருக்கடியாக காலகட்டமாகவே அமையப் போகிறது என்பதையே இந்த நிகழ்வுகள் கூறி நிற்கின்றன. அவ்வாறெனில் இந்த சவால்களை எதிர்கொள்ள முஸ்லிம் சமூகம் எந்தளவு தயார்நிலையில் உள்ளது என்ற கேள்வி எழுகிறது.

முஸ்லிம் அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் அரசாங்கத்தின் கைப்பிள்ளைகளாக மாறி, சமூகத்திற்காக குரல் கொடுக்க முடியாத கையறு நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். எதிரணியில் உள்ள ஓரிருவர் மாத்திரமே ஓரளவு அறிக்கைகளையாவது வெளியிடுகின்றனர். மறு புறம் முஸ்லிம் சிவில் அமைப்புகளும் வலுவிழந்துள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிவில் அமைப்புகளின் வீரியம் வெகுவாகவே குறைந்துள்ளது. இஸ்லாமிய அமைப்புகள் பகிரங்கமாக செயற்பட முடியாத அச்ச நிலை தோன்றியுள்ளது.

இந் நிலையில் தொடராக அமுல்படுத்த எத்தனிக்கப்படும் தடைகளைப் பார்த்துக் கொண்டு முஸ்லிம் சமூகம் மௌனம் காக்கப்போகிறதா அல்லது இந்த நாட்டின் அரசியலமைப்பின் மூலமும் சர்வதேச சட்டங்கள் மூலமாகவும் உரித் தாக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க சட்ட ரீதியாகவும் சாத்வீக ரீதியாகவும் போராடப் போகிறதா என்ற கேள்விக்கு உடன் விடை காணப்பட வேண்டும். இவ்வாறான சவால்களை தைரியமாக எதிர்கொள்ளத் தேவையான அரசியல் மற்றும் சிவில் பலத்தை இலங்கை முஸ்லிம் சமூகம் உடனடியாக கட்டியெழுப்ப வேண்டும்.

குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் உரிமைசார் பிரச்சினைகளை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்கின்ற, அதன் மூலம் தீர்வுகளைப் பெறக் கூடிய பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

அதேபோன்று அநியாயமாக கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதற்கும் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள அப்பாவிகளின் கைதுகளை தடுப்பதற்கும் விரைந்து செயற்பட வேண்டும். இதற்கான நிறுவனமயப்பட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முஸ்லிம் சமூகம் முன்வர வேண்டும்.

SOURCEவிடிவெள்ளி 2/4/21
Previous articleமாறு வேடம் தரித்த பொலிஸார்களை பஸ்களில் கடமையில் ஈடுப்படுத்த நடவடிக்கை
Next articleதேசிய உளவுச்சேவை பிரதானி சுரேஷ் சலே மலேஷியாவில் ஸஹ்ரானை சந்தித்தாரா?