பொது போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பஸ் உள்ளிட்ட வாகன சாரதிகள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக சிவில் உடையில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சித்திரவருட பிறப்பு காலங்களில் இடம்பெறும் வாகன விபத்துகளை தவிர்ப்பதற்காக விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுவாக ஏப்ரல் மாதம் 10 – 20 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியிலேயே நாட்டில் அதிகளவான வாகன விபத்துகள் பதிவாகின்றன. இதனால் இம்முறை வாகன விபத்துகள் இடம்பெறாத சித்திரை புதுவருட பண்டிகையை நாம் கொண்டாட வேண்டும். இந்நிலையில் பொது போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் பஸ் உள்ளிட்ட பொது வாகன சாரதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக சிவில் உடையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது , சாரதிகள் தொலைபேசியில் உரையாடிக் கொண்டோ, அதிகமான வேகத்திலோ , வீதி ஒழுங்கு சட்டவிதிகளுக்கு புறம்பாகவோ வாகனங்களை செலுத்தினால் சிவில் உடையிலிருக்கும் பொலிஸார் அது தொடர்பில் அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்துக்கு தொலைபேசியில் தெரிவிப்பதுடன், உடனே சம்பந்தப்பட்ட சாரதிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும். அதனால் சாரதிகள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
இதேவேளை, இன்று (05) காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்தில் வாகன விபத்தின் காரணமாக ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இடம்பெற்ற வாகன விபத்துகள் காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் , அதற்கு முன்னர் ஏற்பட்ட விபத்து காரணமாக சிகிச்சைப் பெற்றுவந்த ஒருவரும் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
அதற்கமைய மோட்டார் சைக்கிளில் பயணித்த ஐந்து பேரும் , பாதசாரதி மற்றும் பயணி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்கள். அதனால் வாகன விபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். Metro News