ஸஹ்ரானுடன் தொடர்பை பேணியவர்கள் நாடாளுமன்றில் அமர்ந்திருப்பது எமக்கு அவமானம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல்கள் கிடைத்திருந்தும் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றாத முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறுவது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏன் காலதாமதம் ஏற்படுகிறது என்று ஜனாதிபதியிடம் அரசாங்கத்திடமும் கேள்வியெழுப்புவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

இம்மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் உரியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நாம் வீதிக்கு இறங்கி போராடுவோம். இவ்விடயத்தில் தொடர்ந்தும் எம்மால் அமைதியாக இருக்க முடியாது என்றும் பேராயர் தெரிவித்தார்.

கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோணியார் திருத்தலத்தில் நேற்று ஞாயிறுக்கிழமை உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பேராயர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திப்பதற்காக நாம் இன்று இந்த தேவாலயத்திற்கு வருகை தந்துள்ளோம். இவ்வாறான நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆடை அணிந்து கொண்டு தான் அவர் இவ்வாறு கூறுகின்றாரா? உண்மையில் இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

இந்த தாக்குதல்கள் தொடர்ந்தும் அறிந்திருந்தும் தனது பொறுப்புக்களை மறந்து வெளிநாட்டுக்குச் சென்ற ஜனாதிபதி எவ்வாறு மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியும்? அதேபோன்று எவ்வாறு ஒரு கட்சியின் தலைவராக செயற்பட முடியும்? இது எமக்கு பாரிய பிரச்சினையாகும்.

உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அவரை தவறிழைத்தவராகக் குறிப்பிட்டுள்ளது. எனவே, அவருக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகளை மேலும் கால தாமதப்படுத்த வேண்டிய தேவை கிடையாது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
இதேபோன்று தாக்குதல் தொடர்பில் நன்கு அறிந்திருந்தும் அதற்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி ஒருவர் மலைநாட்டில் உயர் பொலிஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவை மேலும் மேலும் ஆணைக்குழுக்களை அமைத்து ஆராயப்பட வேண்டிய விடயங்கள் அல்ல.

இவை தொடர்பில் அறிக்கையில் மிகத் தெளிவாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறெனில் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். ஏன் இவற்றை செயற்படுவதில் கால தாமதம் ஏற்படுகிறது? எந்த காரணங்களுக்காக இந்த கால தாமதம்? உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல் கிடைத்திருந்தும் அதனை தடுக்க தவறிவர்கள், பொறுப்புக் கூற வேண்டியவர்களின் பெயர்கள் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் மாதக் கணக்கிலும் வருடக் கணக்கிலும் எதற்காக பொறுமையாக இருக்கின்றனர் என்று ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் கேள்வியெழுப்ப விரும்புகின்றேன்.

அத்தோடு இதனுடன் தொடர்புடைய மேலும் சிலர் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறானவர்கள் தொடர்பிலும் பரந்துபட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஸஹ்ரானுடன் சிறந்த முறையில் தொடர்பைப் பேணியவர்கள் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருப்பது எமக்கு அவமானமாகும். எனவே ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நாம் வீதியில் இறங்கி போராடுவோம். தொடர்ந்தும் நாம் அமைதியாக இருக்கப் போவதில்லை.

நாட்டு தலைவர்கள் இதனை நினைவில் கொள்ள வேண்டும். ஆணைக்குழுக்களை அமைத்து தமக்கு தேவையானோரை பாதுகாக்க முடியாது. அவ்வாறெனில் அது சட்டமல்ல. ஆணைக்குழுவொன்றை அமைத்து அவ்வாணைக்குழு சுமார் ஒன்றரை வருடங்கள் விசாரணை முன்னெடுத்து பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அவ்வாறிருக்கையில் அரசாங்கம் ஏன் மேலும் மேலும் இது பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறது? இனியொருபோதும் நாம் ஏமாற்று நடவடிக்கைகளில் சிக்கப் போவதில்லை” என்றார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page