யானையை என்ன செய்வது: திங்கள் அறிவிப்போம் – ரவி கருணாநாயக்க

2020 பொதுத்தேர்தலில் பாரிய பின்னடைவைச் சந்தித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளில் ஏற்படுத்தப்படவிருக்கும் மாற்றங்கள் மற்றும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், அவைகுறித்து எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்றும் கட்சியின் பதில் தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருக்கிறார்.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்தைத் தெரிவுசெய்வதற்காக நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மிகப்பாரிய பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது. 

நாட்டின் அனைத்துத் தொகுதிகளிலும் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியைத் தழுவியிருக்கும் நிலையில், கொழும்பில் தேசிய பட்டியலின் ஊடாக ஒரு ஆசனம் மாத்திரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவரது 42 வருட அரசியல் பயணத்தில் முதற்தடவையாக பாராளுமன்ற ஆசனத்தைத் தக்கவைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார். கடந்த 2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 500,000 வாக்குகளைப் பெற்று அவரால் நிலைநாட்டப்பட்ட சாதனையும் இம்முறை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முறியடிக்கப்பட்டிருக்கிறது. 

அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சியின் பதில் தலைவர் ரவி கருணாநாயக்க கொழும்பிலும், பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் குருணாகலையிலும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இத்தகையதொரு பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று வெள்ளிக்கிழமை மத்திய செயற்குழுகூடி தற்போதைய நிலைவரம் தொடர்பில் ஆராய்ந்திருக்கிறது. இக்கூட்டத்தில் கட்சியின் முக்கிய பதவிகளில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள், கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும், அவை பற்றிய விபரங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கட்சியின் பதில் தலைவர் ரவி கருணாநாயக்க கேசரிக்குத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page