நாட்டின் பெயர் சிங்கள பெயராகவும், சிங்களம் அரச கரும மொழியாகவும் அறிவிக்க வேண்டும்

உத்தேச புதிய அரசிலமைப்பில்  நாட்டின் பெயர்  தனி சிங்கள இனத்தை பிரநிதித்துவப்படுத்தவதாக காணப்பட வேண்டும். சிங்கள மொழி மாத்திரம் அரசகரும மொழியாக அறிவிக்கப்படுவதுடன், தமிழ், ஆங்கிலம் மொழிகள் இரண்டாம் மொழியாக  காணப்பட வேண்டும் என்று சிரேஷ்ட பௌத்த மத தலைவர்கள் யோசனைகளை முன்வைத்துள்ளார்கள்.

அதிகார பகிர்வு எவ்வழியிலும் இடம் பெறகூடாது. ஒற்றையாட்சியின் அம்சங்களை பாதுகாக்க விசேட பொறிமுறை செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் பௌத்த மத சிரேஷ்ட தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உத்தேச  புதிய அரசியலமைப்பு தொடர்பிலான நிபுணர் குழுவினரிடம் முன்வைத்துள்ள பரிந்துரைகளிலேயே இவ்விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உள்ள உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பிலான நிபணர் குழுவிடம் நேற்று சனிக்கிழமை தமது யோசனைகளை முன்வைத்ததன் பின்னர் பௌத்த மத சிரேஷ்ட தலைவர்கள் ஊடகங்களுக்கு கூறியதாவது :

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பெங்கமுவே நாலக தேரர்

புதிய அரசியலமைப்பில் இலங்கை குடியரசு நாடாக வலுப்படுத்தப்படவேண்டும்.  அதிகார பகிர்வு எவ்விதத்திலும் இடம்பெற கூடாது.  

மத்திய அரசாங்கத்தை அடிப்படையாகக் கொண்டு மாகாணசபை நிர்வாகம் முன்னெடுக்கப்பட வேண்டும். தேசிய பாதுகாப்பிற்கு  முன்னுரிமை வழங்கும் போது இனம், மத  மற்றும் மொழிகளுக்கு முன்னுரிமை வழங்க கூடாது.

 உள்ளுராட்சி மன்ற தேர்தல், பொதுத்தேர்தல், மற்றும் ஜனாதிபதி தேர்தல் ஆகிய தேர்தல்கள் நாட்டின் பிரதான தேர்தல்களாக காணப்பட வேண்டும். பல்வேறு வழிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மாகாணசபை தேர்தல்குறித்து புதிய அரசியலமைப்பில் சிறந்த தீர்மானம் எடுப்பது அவசியமாகும்.

 5 வருட கால பதவியில் இருக்கும் ஜனாதிபதிக்கு நாடு சொந்தமல்ல. ஜனாதிபதி தற்காலிக பொறுப்புதாரி மாத்திரமே தேசிய வளங்களை ஜனாதிபதி, அமைச்சரவை உறுப்பினர் ஆகிய குறுகிய தரப்பினரது தீர்மானத்தை கொண்டு மாத்திரம் கையாள கூடாது. 

தேசிய வளங்கள் விவகாரத்தில் நாட்டு மக்களின் அபிப்ராயத்தை  கோருவது கட்டாயமானதாகும். இதற்கான வழிமுறைகள் புதிய அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட  வேண்டும்.

ஸ்ரீ ரோஹண பீடம் – மோரே கஸ்ஸப்ப தேரர்

நாட்டின் பெயர் சிங்கள இனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக காணப்பட வேண்டும். சிங்கள மொழி மாத்திரம் அரச கரும மொழியாக காணப்பட வேண்டும். தமிழ், ஆங்கிலம்  ஆகிய மொழிகள் இரண்டாம் மொழியாக  செயற்பட வேண்டும். புத்த மதத்தை பாதுகாக்கவும், வளர்ச்சி பெற செய்யவும் புதிய கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.

எல்லே குணவங்ச தேரர்

அரச அதிகாரத்துடன் சுற்றுசூழல் அழிக்கப்படுவதை காண கூடியதாக உள்ளது. இயற்கை வளங்களை பாதுகாக்க புதிய அரசியலமைப்பில்   விசேட திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். மக்களின்  உரிமைகளை பாதூக்கவும், நாட்டின் இறையான்மையினையினை பாதுகாக்கவும் விசேட பொறிமுறை வகுக்க வேண்டும். 

-வீரகேசரி பத்திரிகை-(இராஜதுரை ஹஷான்)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page