Wednesday , July 26 2017

நொண்டிக் குதிரை!


எஸ்.றிபான் –

இலங்கையில் காணப்படும் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு முன் வைக்கப்பட வேண்டும். அந்த யாப்பில் இனங்களுக்கு இடையே அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். இனம், மதம், மொழி ஆகியவற்றில் வேறுபாடுகள் இருக்கக் கூடாது. இவ்வாறு சிறுபான்மையினர் கோரிக்கைகளை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கு சர்வதேசத்தின் ஆதரவும் இருக்கின்றது. 

இவற்றைச் செய்வதற்கு இலங்கை அரசாங்கமும் ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும் இவைகள் நடைமுறைக்கு வருமா என்பதில் பலத்த சந்தேகங்கள் காணப்படுகின்றன. சில வேளை புதிய அரசியல் யாப்பு முன் வைக்கப்பட்டாலும் அதில் சிறுபான்மையினரின் நலன்கள், உரிமைகள் பாதுகாக்கப்பட்டு சுயநிர்ணய அதிகாரங்கள் வழங்கப்படுமா என்பதற்கான உத்தரவாதங்களைக் கூட உறுதிப்படுத்திக் கொள்ள முடியாத அரசியல் சூழல் காணப்படுகின்றது. நாட்டில் என்னதான் அரசியல் யாப்பு மாற்றம் ஏற்பட்டாலும் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றதொரு சமூகமாக முஸ்லிம்கள்தான் இருக்கப் போகின்றார்கள். 

இதனையே நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்களும், முஸ்லிம் அரசியல் தரப்பினரினதும், தலைவர்களினதும் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. முஸ்லிம் சமூகத்தின் அரசியலை பொறுப்பெடுத்துக் கொண்ட தரப்பினரின் பொறுப்பற்ற ஏமாற்று நடவடிக்கைகளினாலும், ஏனைய முஸ்லிம் தலைவர்களின் ஒற்றுமையின்மையினாலும் இலங்கை அரசியலிலும், ஏனைய துறைகளிலும் முஸ்லிம் சமூகம் முடமாக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து முஸ்லிம் சமூகத்தினை மீட்டுக் கொள்ள வேண்டுமாயின் ஒற்றுமையுடன் கூடியதொரு திட்டமிடலை தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைகள் மேற்கொள்ள வேண்டும்.

சிங்களவர்கள் 

நாட்டில் என்னதான் மாற்றங்கள் ஏற்பட்டாலும் அவை சிங்கள மக்களை பாதிக்காது. ஏனெனில், சிங்களவர்கள் குறிப்பாக பௌத்த சிங்களவர்களின் நலன்களை பேணும் வகையிலும், அந்த நலன்களை உறுதி செய்யும் வகையிலுமே மாற்றங்கள் கொண்டு வரப்படும். தற்போது புதிய அரசியல் யாப்பு பற்றி அதிகம் பேசப்படுகின்றன. அரசியல் யாப்பு விவகாரத்தில் பௌத்த மகாநாயக்கர்கள் திடீரென்று அதித கவனத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளார்கள். அரசாங்கமும் பௌத்த மகாநாயக்கர்களின் அனுமதியைப் பெற்று அரசியல் யாப்பு விவகாரத்தை கையாளப் போவதாக தெரிவித்துள்ளது. 

மகாநாயக்கர்களின் மூக்கு நுளைப்பு சிறுபான்மையினருக்கு சுயநிர்ணய உரிமையை வழங்கும் விதத்தில் புதிய அரசியல் யாப்பு அமையுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கும் இரண்டு பிரதான கட்சிகளும், சிங்கள பௌத்த இனவாத அமைப்புக்களும், மகாநாயக்க தேரர்களும் புதிய அரசியல் யாப்பு மூலமாக சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதற்கு அக்கறை காட்டுவதனை விடவும் தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தவே கூடுதல் கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

அரசாங்கத்தினால் முன் வைக்கப்படவுள்ள தேர்தல் முறை, வட்டார எல்லைகள், தொகுதி எல்லைகள் ஆகியன சிறுபான்மையினரின் மக்கள் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையிலேயே அமையவுள்ளன. 

சிறுபான்மையினர் ஆட்சியை தீர்மானிக்கின்றவர்களாக இருக்கக் கூடாதென்பதிலும், ஜே.வி.பி போன்ற சிங்கள சிறு கட்சிகள் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக அமையக் கூடாதென்பதிலும் ஐ.தே.கவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உறுதியாக உள்ளன.  

இதனால் புதிய அரசியல் யாப்பு தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும் என்று சொல்ல முடியாது. இதே வேளை, மகாநாயக்க தேரர்கள் நாட்டிற்கு புதிய அரசியல் யாப்பு தேவையில்லை. தேவை என்றால் தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்கள்.

இதே வேளை, பௌத்த இனவாத அமைப்புக்கள் நாட்டிற்கு புதிய அரசியல் யாப்பு அவசியமில்லை. ஆனால், சரிஆ சட்டம், இஸ்லாமிய வங்கி முறைமை, காதி நீதிமன்றம், தேசிய வழமைச் சட்டம் ஆகியவற்றை இல்லாமல் செய்ய வேண்டுமென்று அரசாங்கத்தை கேட்டுள்ளன.

மேலும், பெரும்பான்மைச் சிங்களவர்களை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கும் எல்லா அரசியல் கட்சிகளும், மகாநாயக்க தேரர்களும், பௌத்த இனவாத அமைப்புக்களும் பௌத்த மதத்திற்குரிய முன்னுரிமையை மழுங்கடிக்கச் செய்யும் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளன. 

அரசாங்கமும் பௌத்த மதத்திற்குரிய முன்னுரிமை ஒரு போதும் இல்லாமல் செய்யப்படமாட்டாதென்று தெரிவித்துள்ளது.

எனவே, சிங்கள கட்சிகளிடையும், அந்த மக்களின் தலைவர்கள், அமைப்புக்களிடையேயும் சிங்கள மக்களின் குறிப்பாக பௌத்தர்களுக்கு காணப்படும் சலுகைகள், உரிமைகள், சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்தும் ஒற்றுமையுடன் இருப்பதனையும், சிறுபான்மையினர் தற்போது பெற்றுக் கொண்டிருக்கும் உரிமைகளை இல்லாமல் செய்வதற்கான சூழ்ச்சிகளை செய்வதிலும் ஒற்றுமையை காணக் கூடியதாக உள்ளன.

தமிழர் தரப்பினர்

அரசாங்கம் தமிழர்களை திருப்திபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று சர்வதேச அழுத்தங்கள் காணப்படுகின்றன. இதற்கு தமிழர் தரப்பினரின் திட்டமிட்ட நடவடிக்கைகளே காரணமாகும். தமிழர் தரப்பினர் எனும் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பே அது குறித்து நிற்கும். அந்த வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் புதிய அரசியல் யாப்பு, தேர்தல் முறை மாற்றம், ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்தல், தமிழர்களின் காணி விடுவிப்பு, அபிவிருத்தி, சுயநிர்ணய அதிகாரம், தமிழ் அரசியல் கைதிகள், காணாமல் போனவர்கள் ஆகியவற்றில் கூடுதல் கவனத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சிகளிடையே முரண்பாடுகள் காணப்படுகின்ற போதிலும் மேற்படி விடயங்களில் இக்கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய அரசியல் யாப்பிற்கு மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்புக்களை காட்டியுள்ளார்கள். இதனால், இவர்களை சந்திப்பதற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. அந்தளவிற்கு தமிழ் மக்களுக்கு உரிமைகளபை; பெற்றுக் கொடுக்க வேண்டுமென்பதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுதியாக உள்ளது. இதற்காக யாருடனும் பேசுவதற்கு தயங்கம் காட்டாததொரு நிலைப்பாட்டையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பின்பற்றிக் கொண்டிருக்கின்றது.

அரசாங்கம் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கும் தேர்தல் முறை மாற்றம் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்காது. குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தற்போது பெற்றுள்ள மக்கள் பிரதிநிதிகளை விடவும் கூடுதலான பிரதிநிதிகளை புதிய தேர்தல் முறையில் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். மேலும், தமிழர்கள் சுயநிர்ணய உரிமையை தவிர மற்ற அனைத்து உரிமைகளையும், சலுகைளையும் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகவே காணப்படுகின்றன.

இதே வேளை, புதிய அரசியல் யாப்பில் தமிழர்களின் உரிமைகளும், சுயநிர்ணயமும் உறுதி செய்யப்பட்ட அரசியல் யாப்பை சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரசிங்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் யாப்பு மூலமாக சிறுபான்மையினருக்கு குறிப்பாக தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கினால் பெரும்பான்மையின மக்கள் தமது எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என்ற அச்சம் அரசாங்கத்திற்கு உள்ளது. மறுபுறத்தில் புதிய அரசியல் யாப்பை முன் வைக்காது போனால் சர்வதேசத்தின் கண்டனத்திற்கும், அழுத்தங்களுக்கும் முகங் கொடுக்க நேரிடும். இதனால், சர்வதேசத்திடமிருந்து தப்புவதற்காக புதிய அரசியல் யாப்பை சர்வஜனவாக்கெடுப்புக்கு விடுவதற்கு அரசாங்கம் எண்ணியுள்ளது. புதிய அரசியல் யாப்பிற்கு எதிராக பெரும்பான்மையான சிங்களவர்கள் எதிர்த்து வாக்களிப்பார்கள். இதனால், சர்வஜன வாக்கெடுப்பு தோல்வியடையும் என்பது உறுதியாகும். இதனால், புதிய அரசியல் யாப்பை மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்று அரசாங்கம் தெரிவித்து சர்வதேசத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளும்.

இதே வேளை, சர்வஜன வாக்கு அளிப்பு தோல்வியில் முடிந்தாலும் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களினால் சர்வஜன வாக்கெடுப்பு வெற்றி பெறும் என்பதில ஐயமில்லை. இதனால், தமிழ் பேசும் மக்கள் தங்களுக்கு சுயநிர்ணய உரிமை தரப்பட வேண்டுமென்று வாக்களித்துள்ளார்கள். அதனால், தங்களை தனியாக விடுங்கள் என்று தனிநாட்டுக் கோரிக்கையை சர்வதேசத்திடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன் வைப்பார்கள். ஆகவே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பல விமர்சனங்களுக்கு மத்தியில் மிகவும் பொறுப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

 

முஸ்லிம் தரப்பு

முஸ்லிம் தரப்பினரைப் பொறுத்த வரை அரசியல் யாப்பு மாற்றம், தேர்தல் முறை மாற்றம், முஸ்லிம்களின் ஏனைய பிரச்சினைகளுக்குரிய தீர்வுகள் குறித்து அக்கறை காட்டாத நிலையைப் பார்க்கின்றோம். அறிக்கைகளை விடுவதில்தான் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள். தங்களின் அறிக்கைகள் மூலமாக முஸ்லிம்களை திருப்திப்படுத்தலாம் (ஏமாற்றலாம்) என்று கணித்துள்ளார்கள். கடந்த காலங்களில் முஸ்லிம்கள் அறிக்கைகளுக்கும், வாக்குறுதிகளுக்கும்தான் வாக்களித்து ஏமாந்து போனார்கள். தொடர்ந்தும் இவ்வாறு ஏமாற்றுவதற்கே முஸ்லிம் தரப்பினர் திட்டமிட்டுள்ளார்கள்.

புதிய அரசியல் யாப்பு என்றாலும், தேர்தல் மாற்றமாயினும், ஏனைய விடயங்களை எடுத்துக் கொண்டாலும் முஸ்லிம்கள்தான் பாதிப்படைவார்கள். தேர்தல் முறை மாற்றம் முஸ்லிம்களின் மக்கள் பிரதிநிதித்துவத்தை குறைத்து விடும். இன்று பாராளுமன்றத்தில் 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். மாகாண சபைகளிலும், உள்ளுராட்சி மன்றங்களிலும் முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை இனவிகிதாசாரத்திற்கு ஏற்றவாறு இல்லாது இருந்தார்கள். ஆயினும் கணிசமான எண்ணிக்கையான மக்கள் பிரதிநிதிகள் விகிதாசார தேர்தல் முறையில் தெரிவு செய்யப்படுவார்கள். தேர்தல் முறையில் மாற்றம் ஏற்பட்டால் பாராளுமன்றத்திற்கு சுமார் 10 இற்கு குறைவான முஸ்லிம் உறுப்பினர்களே தெரிவு செய்யப்படுவார்கள். ஏனைய சபைகளிலும் முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைவடைந்துவிடும்.

ஆனால், முஸ்லிம் அரசியல் தலைவர்களும், கட்சிகளும் இதில் எவற்றிலும் அக்கறை காட்டாது இருப்பதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. முஸ்லிம் புத்திஜீவிகளும் இந்த ஆபத்தை பற்றி சிந்திப்பதாகத் தெரியவில்லை. முஸ்லிம்களின் அரசியலைப் பொறுத்த வரை முஸ்லிம் காங்கிரஸிற்கு அதிக பொறுப்புக்கள் உள்ளன. இந்த பொறுப்புக்களை மறந்தே நிலையிலேயே அக்கட்சி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம்கள் மத்தியில் அதிக செல்வாக்கு பெற்ற கட்சி, அதிகமான மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட கட்சி என்றெல்லாம் அடைப்புக்குறிக்குள் பல தகமைகளை முஸ்லிம் காங்கிரஸ் கொண்டுள்ளது.

முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கும், அதிகாரங்களுக்கும், உரிமைகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளின் தெரிவுக்கும் புதிய அரசியல் யாப்பு எவ்வாறு அமைய வேண்டுமென்பது பற்றி எல்லாம் முஸ்லிம் காங்கிரஸோ ஏனைய முஸ்லிம் கட்சிகளோ பேசுவதில்லை. தேர்தல் முறையை பொறுத்த வரை விகிதாசார தேர்தல் முறைதான் தொடர்ந்து இருக்க வேண்டுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீன் அடிக்கடி தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். புதிய தேர்தல் முறை முஸ்லிம்களின் பிரதிநிதிகளை குறைவடையச் செய்திடுமென்பதே அவரது கருத்தாகும். இது உண்மையுமாகும். ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் விகிதாசார தேர்தல் முறைக்குப் பதிலாக கொண்டு வரப்படவுள்ள கலப்பு தேர்தல் முறையில் சிறிய மாற்றங்களை ஏற்படுவத்துவதற்கு சிந்தித்துக் கொண்டிருக்கின்றது. கலப்பு தேர்தல் முறையை எந்த உருவத்தில் முன் வைத்தாலும் முஸ்லிம்களுக்கு பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. அது போலவே ஜனாதிபதி முறையும் முஸ்லிம்களைப் பொறுத்த வரை அவசியமாகும்.

இதே வேளை, புதிய அரசியல் யாப்புக்கும், கலப்புத் தேர்தல் முறைக்கும் முஸ்லிம் கட்சிகளின் சம்மதத்தினைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளும் பேரினவாத கட்சிகளின் தலைவர்களினால் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் வெற்றி பெறும் வகையில் தேர்தல் தொகுதியை அமைத்துக் கொடுப்பதற்கும், அவர்கள் தொடர்ச்சியாக 10 வருடங்கள் தேர்தலில் தோல்வியடையாத வகையில் எல்லைகளை நிர்ணயம் செய்து கொடுக்கவும், அவர்களை தங்களின் கட்சியின் பிரதிநிதியாக தேர்தலில் போட்டியிடச் செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பொரளைத் தொகுதியில் எம்.எச்.முஹமட், ஹரிஸ்பத்துவ தொகுதியில் ஏ.சி.எஸ்.ஹமீட் ஆகியோர்களுக்கு வாய்ப்பு வழங்கியது போன்று தங்களுக்கும் வாய்ப்புக்களும், வசதிகளும் செய்து தரப்படும் என்று தனித்தனியே தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதனை ஒரு கட்சியின் தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார். மற்றக் கட்சியின் தலைவர் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. 

இப்போதைக்கு எனக்கு சாதகமாக இருந்தாலும் எதிர் காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இன்றைய சூழலில் பொரளைத் தொகுதியில் முஸ்லிம் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் வெற்றி பெறுவாரா என்று கேட்டுள்ளார்;. ஆதலால், தொடர்ந்தும் விகிதாசார தேர்தல் முறைதான் இருக்க வேண்டுமென்று தெரிவித்துள்ளார். தேர்தல் முறை மாற்றத்தால் மிக மோசமான பாதிப்பை வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு வெளியே உள்ள முஸ்லிம்கள் கண்டு கொள்வார்கள்.

முஸ்லிம் கூட்டமைப்பு

நாட்டில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் நகர்களிலிருந்து முஸ்லிம் சமூகம் பாதுகாப்பு பெற வேண்டுமாயின் முஸ்லிம் அரசியல் கட்சிகள் யாவும் ஒற்றுமைப்படுதல் வேண்டும். அந்த ஒற்றுமை தேர்தல் முதல் எல்லா விவகாரங்களிலும் தொடர வேண்டுமென்று தெரிவிக்கப்படுகின்றன. இதற்கான பேச்சுக்களும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் கூட்டமைப்பு பற்றிய கருத்து முரண்பாடுகளும் காணப்படுகின்றன. கூட்டமைப்பின் நோக்கங்கள் குறித்து கேள்விகளும் முன் வைக்கப்படுகின்றன. முஸ்லிம் கூட்டமைப்பின் நோக்கம் யாரையும் வீழ்த்துவதற்கானதாக இருக்க முடியாது. முஸ்லிம் சமூகம் வெற்றி பெறுவதற்கானதாக இருக்க வேண்டும். இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டால் மட்டுமே முஸ்லிம் சமூகம் வெற்றி பெறலாம்.

முஸ்லிம் கூட்டமைப்பை பொறுத்த வரையில் அதில் முஸ்லிம் காங்கிரஸும் ஒரு அங்கமாக இணைய வேண்டும். முஸ்லிம் காங்கிரஸும் இதற்கு தயாராக வேண்டும். முஸ்லிம் கட்சிகளினாலும், தலைவர்களினால் நொண்டியாக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின் முஸ்லிம் கட்சிகளின் கூட்டு அவசியமாகும். இதில் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் இல்லாமல் போகுமாயின் அக்கூட்டமைப்பு நொண்டிக் குதிரை போன்றதாகும். இதே வேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் ஏனைய முஸ்லிம் தரப்புக்கள் எல்லாம் ஓர் அணியில் இணைந்து கொள்ளும் போது முஸ்லிம் காங்கிரஸும் நொண்டிக் குதிரையாகி விடும். ஏனெனில், முஸ்லிம் கூட்டமைப்புக்கு முஸ்லிம்களிடையே வரவேற்பு அதிகமாகும். இதனால், முஸ்லிம் காங்கிரஸ் தாம் பெரிய செல்வாக்குப் பெற்ற கட்சி என்று தனித்து நின்றாலும் முஸ்லிம் காங்கிரஸின் வாக்குகளில் கணிசமான தொகை முஸ்லிம் கூட்டமைப்புக்கு அளிக்கப்படும். அதே வேளை, முஸ்லிம் கூட்;டமைப்பின் நோக்கத்தை அடைந்து கொள்வதும் கடின பணியாக அமையும். இக்கஸ்டங்கள் இல்லாமல் போக வேண்டுமாயின் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பில் இணைய வேண்டும். முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் ஹஸன்அலியின் தரப்பு உள்ளதுதானே என்ற வாதம் ருசியற்றதாகவே இருக்கும். இதனை தாண்டியும் முஸ்லிம் கூட்டமைப்பு சக்தி பெற வேண்மாயின் புறக்கணிப்புக்கு உட்படாத வகையில் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். ஒற்றுமையான செயற்பாடுகள் கூட்டமைப்பின் உறுப்பினர்களிடையே காணப்பட வேண்டும். இரகசியங்கள், தனிப்பட்ட செயற்பாடுகள், பொறுப்பற்ற அறிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

 

Originally posted by Madawelanews