Wednesday , July 26 2017

மர்ஹும் அஸ்ரப்பின் யுகம் மீண்டும் உருவாக வேண்டும்..


சஹாப்தீன் –

கிழக்கு மாகாண சபை எதிர்வரும் 2017 செப்டம்பர் மாதத்துடன் கலைக்கப்பட்டுவிடும். இந்நிலையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பற்றி அதிகம் பேசப்படுகின்றன. இத்தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் யாவும் ஒரு கூட்டமைப்பாக போட்டியிட வேண்டுமென்ற கருத்துக்கள் கிழக்கு மாகாண முஸ்லிம்களினால் பல்வேறு இடங்களில் முன் வைக்கப்பட்டுகின்றன. அது பற்றி கலந்துரையாடல்களும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அதற்கான முயற்சிகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய கட்சிகளுடன் பேச்சுக்களும் நடைபெற்றுள்ளன. அக்கட்சிகள் கொள்கையளவில் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதே வேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோடும் கூட்டமைப்பு பற்றி பேசுவதற்குரிய முஸ்தீபுகள் நடைபெறுகின்றன. ஆயினும் முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கொள்ளுமா என்பதில பலத்த சந்தேகங்கள் உள்ளன.

முஸ்லிம் கட்சிகள் ஒரு கூட்டாக செயற்பட வேண்டுமென்ற கோரிக்கை இன்று நேற்று முன் வைக்கப்பட்டதல்ல. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் பிளவுகள் அதிகரித்துக் கொண்டு வந்த காலம் முதல் முன் வைக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம் கட்சிகளை ஒற்றுமைப்படுத்த வேண்டுமென்ற முயற்சி கிழக்கு மாகாண சபைக்கு நடத்தப்பட்ட முதலாவது தேர்தலிலும் எடுக்கப்பட்டது. இக்காலப் பகுதியில் முஸ்லிம்களிடையே முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு பற்றி அதிகம் பேசப்படவில்லை. ஆனால், தற்போது முஸ்லிம்கள் மத்தியில் குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களிடையே முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு பற்றி அதிகம் பேசப்படுகின்றன. மட்டுமன்றி இன்றைய அரசியல் பின்னணியில் முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு என்பது இன்றியமையாத தேவையாக இருக்கின்றது.

முஸ்லிம் கட்சிகளிடையே காணப்படும் முரண்பாடுகள், கழுத்தறுப்புக்கள், சமூகம் பற்றி சிந்தனையற்ற நிலைப்பாடு, ஒழுக்கமற்ற செயற்பாடுகள், பெருந் தேசியவாத கட்சிகளின் திட்டங்களுக்கு தாளம் போடுதல், பதவிக்கான சமூகத்தினை அடமானம் வைக்கும் இழிபோக்கு, பௌத்த இனவாதிகளின் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள், முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் போதிய கவனம் செலுத்தாமை எனப் பல காரணிகளினால் முஸ்லிம்கள் தம்மை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டுமென்று கோரிக் கொண்டிருக்கின்றார்கள். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் ஒரு கூட்டாக போட்டியிட்டால் மாத்திரமே முஸ்லிம்களின் அரசியல் பலமிக்கதாக மாறும். அது மாத்திரமின்றி கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் முடியும்.

முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்புக்குள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கொள்ளாதென்று இருந்து வந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் ரவூப் ஹக்கீமின் கருத்து அமைந்துள்ளது. வவுனிய ஆண்டியா புளியங்குளத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய ரவூப் ஹக்கீம் கூட்டமைப்பு என்ற பேரில் முஸ்லிம் காங்கிரஸோடு மோத முடியாது என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்மைப்பில் இணைந்து கொள்ளாது என்று புரிகின்றது.

மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப்பின் மரணத்தின் பின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸ் பல கூறுகளாக பிளவுபட்டது. முஸ்லிம்களிடையே பல கட்சிகள் தோற்றம் பெற்றன. தலைமைத்துவத்தின் பொறுப்பற்ற போக்கு, விட்டுக் கொடுக்காமை, தலைமைக்கு கட்டுப்படாமை, சுயநலம், பெரும் தேசியவாதிகளின் சூழ்ச்சிகள் போன்ற காரணங்களினால் முஸ்லிம்களின் அரசியல் பலம் சிதைக்கப்பட்டது. முஸ்லிம்களிடையே பல கட்சிகள் இருந்த போதிலும் எக்கட்சியும் சமூகத்தின் தேவையை நிறைவு செய்யும் செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை. எல்லா கட்சிகளும் மாமூலான நடவடிக்கைகளையே மேற்கொண்டன. இதனால்தான் இன்று முஸ்லிம் சமூகம் மிகவும் நெருக்கடியான நிலையை எதிர் கொண்டுள்ளது.

முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு ஏற்படுமானால் அதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கொள்ள வேண்டும். இக்கட்சி இல்லாத கூட்டு பூரணத்துவம் அடையாது. இதே வேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் கூட்டமைப்பை மறுத்தலித்து நிற்கும் நிலையில் ஏனைய கட்சிகள் கூட்டாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர் கொள்ளுமாயின் அது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கில் பாரிய எதிர் தாக்கத்தை ஏற்படுத்தும். மக்கள் கட்சியை காப்பாற்றுவார்கள் என்ற நிலை இப்போதைக்கு கிழக்கு மாகாணத்திலில்லை. கிழக்கு மாகாண முஸ்லிம்கள் முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பையே எதிர் பார்க்கின்றார்கள். கூட்டமைப்பை நிராகரிக்கும் தரப்பினரை பெரும்பான்மையான முஸ்லிம்கள்; நிராகரிப்பார்கள். இதுதான் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் யதார்த்தமாகும்.

முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு என்பது எந்தக் கட்சியையும் அழிப்பதற்காகவோ, அல்லது தனி நபர்களை அழிப்பதற்காகவோ, தனி நபர்கள் பதவிகளைப் பெற வேண்டுமென்பதற்காகவோ, பெரும் தேசியவாதிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு உட்பட்ட வகையிலோ, வெளிநாட்டு சக்திகளின் திட்டங்களுக்கு அமைவாகவோ உருவாக்க முடியாது. முஸ்லிம் சமூகத்திற்காக உருவாக்கப்பட வேண்டும். சிறை வைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் அரசியல் பலத்தை மீண்டெடுப்பதற்கான போராட்டமாகவே இதனை பார்க்க வேண்டும்.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து போட்டியி;ட்டன. இக்கட்சிகளின் தலைவர்களான ரவூப், றிசாட. பதியுதீன் ஆகியோர்கள் தங்கள் கட்சிகளின் சின்னங்களை ஒதுக்கிவிட்டு துஆ கட்சியின் இரட்டை இலைச் சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தினார்கள். ஊவா மாகாண சபையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்வதற்காகவே ஒற்றுமைப்பட்டுள்ளோம் என்று தெரிவித்தார்கள். ஆனால், இவர்கள் ஒற்றுமைப்பட்டது முஸ்லிம் சமூகத்திற்காகவல்ல. அன்றைய ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் கட்டளைக்கு அமைவாக செயற்பட்டார்கள். முஸ்லிம்களின் வாக்குகள் ஐ.தே.கவிற்கு செல்லக் கூடாதென்ற மஹிந்தவின் திட்டத்திற்கு துணை போனார்கள்.

கடந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு பல அநியாயங்கள் நடைபெற்ற பின்னணியிலும் 2014ஆம் ஆண்டு ஊவா மாகாண சபைத் தேர்தலில் மஹிந்தவிற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து போட்டியிடலாமென்றால், முஸ்லிம் சமூகத்திற்காக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஒரு கூட்டாக ஏன் போட்டியிட முடியாது. வீழ்வது யாராக இருந்தாலும் வெல்லுவது முஸ்லிம் சமூகமாக இருக்க வேண்டும். இந்த சிந்தனை இல்லாத வரையில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமையாக யாரையும் ஏற்றுக் கொள்ள முடியாது. 2014ஆம் ஆண்டு ஊவா மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் கூட்டமைப்புக்கு முஸ்லிம் வாக்களிக்காமைக்கான காரணம் மஹிந்தவின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற அநீதிகளை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தட்டிக் கேட்காமையாகும். அத்தோடு இரண்டு கட்சிகளின் கூட்டு மஹிந்தவின் தேவைக்காக என்று மக்கள் உணர்ந்து கொண்டமையுமாகும்.

ஆனால், இன்று நிலைமை வேறு, அதாவது இன்றைய ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு பௌத்த இனவாதிகளினால் அநீயாயங்கள் நடக்கின்றன. அதனை அரசாங்கம் தடுக்கவில்லை. முஸ்லிம் கட்சிகளும் கேட்கவில்லை. முஸ்லிம்கள் நல்லாட்சியில் ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோர்கள் மீதும், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மீதும்; வெறுப்படைந்துள்ளார்கள். யார் ஆட்சி செய்தாலும் அவர்கள் பௌத்த இனவாத அமைப்புக்களின் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் செயற்படுவார்கள் என்ற நிலைப்பாட்டில் முஸ்லிம்கள் உள்ளார்கள். இதனால், முஸ்லிம் கட்சிகள் எந்த தேசிய கட்சிகளுடன் கூட்டு வைத்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர் கொண்டாலும் முஸ்லிம்களின் வாக்களிப்பு வீதம் குறைவடைவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாகும். இதே வேளை, முஸ்லிம் கட்சிகள் யாவும் ஒரு கூட்டமைப்பாக போட்டியிட்டால் அரசாங்கத்திற்கு தமது நிலைப்பாட்டை தெரியப்படுத்துவதற்காக முஸ்லிம்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கும் நிலையும், வாக்களிப்பு வீதம் அதிகரிக்கவும் வாய்ப்புக்கள் உள்ளன.

இதே வேளை, முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணையாது போகுமாயின் அக்கட்சியின் வாக்குகளில் சரிவு ஏற்படுவதனையும் தவிர்க்க முடியாது. ஏனெனில், முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு என்பது மக்களின் தேவையாகும். ஏனைய கட்சிகள் கொள்கையளவில் கூட்டமைப்பை ஏற்றுக் கொண்டுள்ளன.

முஸ்லிம்களின் மக்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக் கொள்வதற்கு தேசிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதே சிறந்த வழியாகும் என்று முஸ்லிம் கூட்டமைப்புக்கு எதிர்வாதம் புரிகின்றவர்கள் கூறுகின்றார்கள். முஸ்லிம்களின் மக்கள் பிரதிநிதித்துவத்தை முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு மூலமாக அதிகரித்துக் கொள்வதற்கு வாய்ப்புக்கள் இருக்கும் போது எதற்காக தேசிய கட்சிகளுடன் கூட்டு வைக்க வேண்டும். மேலும், முஸ்லிம் கட்சிகள் கூட்டாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் போது முஸ்லிம் சமூகத்தின் சுயநிர்ணயம், பிரச்சினைகள் போன்றவற்றை முன் வைத்து தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கட்டு வாக்குகளைப் பெறும் போது அது இலங்கை அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் முஸ்லிம்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதாக அமையும். அத்தோடு, முஸ்லிம்கள் சொந்தக்காலில் நிற்க முடியும். முஸ்லிம்களின் அரசியல் பலம் தேசிய கட்சிகளின் எண்ணங்களில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். மர்ஹும் அஸ்ரப்பின் யுகம் மீண்டும் உருவாகும். இதற்கு மாறாக தேசிய கட்சிகளில் முஸ்லிம் கட்சிகள் போட்டியிட்டால் அது தேசிய கட்சிகளின் வெற்றியாகவே பார்க்க முடியும். தேர்தல் விஞ்ஞாபனத்தில் முஸ்லிம்களின் எண்ணங்களை பதிவு செய்ய முடியாது. பௌத்த சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக பெரும்பான்மையினii திருப்திப்படுத்தும் வகையில் தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்திடும்.

மேலும், முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில்தான் முஸ்லிம்களின் அரசியல் பலத்தை இலகுவாக நிருபிக்கலாம். ஏனைய மாகாணங்களில் இதனைச் செய்யும் வாக்குப் பலம் கிடையாது. வடகிழக்கு மாகாணங்களுக்கு வெளியே உள்ள அரசியல் தலைவர்களின் வெற்றிக்கு சிங்களவர்களின் ஆதரவு அவசியமென்பதற்காக கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல் பலத்தை சிதைக்க முடியாது. கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல் பலமும், ஒற்றுமையும் ஏனைய மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கு துணையாக அமையும். முஸ்லிம்களின் அரசியல் பலம் சிதைக்கப்பட்டதன் பின்னர்தான் முஸ்லிம்களுக்கு எதிரான அநீயாயங்களுக்கு அரசாங்கம் பகிரங்கமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல் ஆட்சியை கைப்பற்ற முடியாதென்ற நிலை ஏற்பட வேண்டும். இதற்கு ஆகக் குறைந்தது கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தமது தனித்துவ அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டும். மர்ஹும் அஸ்ரப்பின் காலத்தில் வடகிழக்கு முஸ்லிம்கள் ஒரு கட்சியின் கீழ் ஒற்றுமைப்பட்டதனால்தான் முஸ்லிம்களுக்கு பேரம் பேசும் சக்தி ஏற்பட்டது. இன்றைய முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள்தான் மர்ஹும் அஸ்ரப்பினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம்களின் பேரம் பேசும் சக்தியை இல்லாமல் செய்தார்கள். ஆதலால், இல்லாமல் செய்தவர்கள் ஒற்றுமைப்பட்டு முஸ்லிம்களின் அரசியல் பலத்தை மீளவும் கட்டியெழுப்புவதுதான் முஸ்லிம் சமூகத்திற்கு செய்யும் மிகப் பெரிய நன்றிக் கடனாகும்.

இதே வேளை, முஸ்லிம் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டால் தங்களின் அரசியல் அழிந்துவிடுமென்று எண்ணுகின்றவர்கள் இதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள். முஸ்லிம் கூட்டமைப்பு தமது தலைமை பதவியை, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை, அமைச்சர் பதவியை இல்லாமல் செய்திடும் என்று அச்சம் கொள்கின்றார்கள். இத்தகைய சிந்தனைகளைக் கொண்டவர்கள் முஸ்லிம்களின் அரசியலில் அதிகம் பேர் உள்ளதால்தான் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளன.

முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டாலும் அதனை முன்னெடுத்துச் செல்வதில் பாரிய சவால்கள் உள்ளன. இதற்கு விட்டுக் கொடுப்பு அவசியமாகும். கூட்டமைப்பு மூலமாக யாரையும் வீழ்த்துவதற்கு சதி செய்யக் கூடாது. கூட்டமைப்பு என்பது தேர்தலை மையப்படுத்தியதாக இருக்காது முஸ்லிம் சமூகத்தை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். நாங்கள் பெரிய கட்சி, நீங்கள் சிறிய கட்சி என்ற வேறுபாட்டு வாதங்கள் மோசமான நிலையை ஏற்படுத்தும். முஸ்லிம் சமூகத்தை அரசியல் கட்சிகள் பல பிரிவுகளாக பிரித்து வைத்துள்ளன. இந்த பிளவுகளை இல்லாமல் செய்வதற்காகத்தான் முஸ்லிம் கட்சிகள் யாவும் ஒரு கூட்டமைப்பாக இணைய வேண்டுமென்று முஸ்லிம்கள் வேண்டுகின்றார்கள்.

Originally posted by Madawelanews