Thursday , September 21 2017

இனவாதிகளுக்கு தீனி போடும் ஹக்கீம் முஸ்லிம் விரோதப் பேரணிக்கு கூறும் பதில் என்ன?

 

அப்துல்லாஹ் மஹ்ருப் எம்.பி கேள்வி!

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தைத் தடுப்பதிலும் மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனை வீழ்த்துவதிலும் சிங்கள இனவாதிகளும் தமிழ் இனவாதிகளும் இணைந்து திட்டமிட்டுச் செயற்படுவது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளதாகவும் இவர்களின் இனவாத நடவடிக்கைகளுக்கு தீனி போடும் வகையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் செயற்பாடுகளும் கொச்சைப்படுத்தும் பேச்சுக்களுமே உந்துசக்தியாக அமைகின்றது என்பதும் இப்போது தெளிவாக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ருப் எம்.பி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது!

முல்லைத்தீவில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியும் அப்பேரணியில் முஸ்லிம்களின் இருப்புக் குறித்தான ஆவேசப் பேச்சுக்களும் அமைச்சர் றிஷாட்டுக்கு எதிரான காழ்ப்புணர்வுள்ள, மிலேச்சத்தனமான கோஷங்களும் இனவாதிகளின் மனோ நிலையை வெகுவாக படம்பிடித்துக் காட்டுகின்றது.  

இவர்களின் இந்த ஆர்பபாட்ட நாடகத்தை இனவாத ஊடகங்கள் தூக்கிப்பிடித்து தமிழர்களின் இருப்புக்கு முஸ்லிம்கள் எதிரான சக்தியாக காட்ட முயற்சித்தன. முல்லைத்தீவைச் சாராத, வெளி இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட இனவாதிகளை வைத்து விக்கி, ரவிகரன், சார்ழ்ஸ் போன்றவர்களின் பின்னணியில் நடத்தப்பட்ட இந்த நாடகத்தை, மக்களின் பேரணியாக ஊடகங்கள் சித்தரித்தன. மீள்குடியேற்றத்தின் காரணகர்த்தாவாக அமைச்சர் றிஷாட் பதியுதீனை வெளி உலகிற்குக் காட்டி அவரைத் தமிழ் மக்களின் எதிரியாக காட்ட முனைவந்தன். இதன் மூலம் இனவாதிகளும் இனவாத ஊடகங்களும் தமது இலக்கை அடைந்துகொள்ள முடியுமென முயற்சித்தன.

வடக்கிலே முஸ்லிம்களையும் அமைச்சர் றிஷாதையும் காடழிக்கும் சமூகமாக கடந்த பல ஆண்டுகளாக காட்டி அபாண்டங்களை பரப்பி வரும் வரும் பொது பலசேன சிங்கள ராவய போன்ற இனவாத இயக்கங்களும், ‘வில்பத்தை பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் வெளிநாட்டு முகவர்களின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இனவாத அமைப்பும் தமது முகநூல்களில் முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கெதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து முண்டியடித்துக்கொண்டு பதிவுகளை மேற்கொண்டுள்ளன. இரண்டு இனவாத சக்திகளும் இணைந்து இனவாத ஊடகங்களின் உதவியுடன் வலுவான பின்புலத்தில் இயங்குவது இப்போது; தெரிந்துவிட்டது. ஏற்கனவே பொதுபல சேனாவின் நடவடிக்கைகளை ஆதரித்தும் முஸ்லிம்களை மோசமாக விமர்சித்தும் டில்லியை தளமாகக்கொண்டு இயங்கி வரும் ‘ஹிந்து மகா சபா’ இந்திய உள்துறை அமைச்சுக்கும் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிராலயத்துக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத் தக்கது.

முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், வவுனியாவுக்குச் சென்று அங்கு பல கிராமங்களில் அமைச்சர் றிஷாட் பதியுதீனை மோசமாக விமர்சித்ததையும் தமிழ்-முஸ்லிம் நல்லுறவு தொடர்பில் வீராப்புப் பேச்சுக்களையும் வெற்றுக்கோஷங்களையும் பேசி, அங்கு நீலிக் கண்ணீர் வடித்திருந்தார். வட மாகாண முதலமைச்சருக்காக வக்காலத்து வாங்கியிருந்த அவர், முதலமைச்சரை உத்தம புத்திரராக காட்டியிருந்தார்.

முல்லைத்தீவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட பேரணி முதலமைச்சர் விக்னேஸ்வரனினதும், சார்ஸ் நிர்மலநாதன் எம்.பி , மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோரின் தூண்டுதலிலும் பின்புலத்திலும் இடம்பெற்றமையை இந்த ஹக்கீம் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும். காலத்துக்குக் காலம் தேர்தல் நெருங்கினால் வடகிழக்கு முஸ்லிம் பகுதிகளுக்குச் சென்று தன்னையொரு அரசியல் ஜாம்பவானாக காட்டிக்கொள்வதில் ஹக்கீமுக்கு நிகர் ஹக்கீமே. அவரது கொக்கரிப்புப் பேச்சுக்கள் நமது மக்களுக்கு பழகிப்போன ஒன்று. வவுனியாவில் ஹக்கீமுடைய இனவாதிகளை ஆதரிக்கும் ஆசுவாசப் பேச்சுக்களால் தூண்டப்பட்ட முஸ்லிம் விரோதிகளே முல்லைத்தீவில் ஒரு பேரணி நாடகத்தை அரங்கேற்றி இருக்கின்றனர். முல்லைத்தீவு பேரணிக்கு உசுப்பேற்றி விட்டவர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரே அவர் இதற்கான தார்மீகப்பொறுப்பை ஏற்க வேண்டும். 

வடக்கு முஸ்லிம்கள் மீதான இந்த அபாண்டக்குற்றச்சாட்டுக்குள்கு மு.கா தலைவர் பதில் கூறியே ஆக வேண்டும். வைக்கோல் பட்டறை நாயாக எப்போதுமே இயங்கி வரும் இந்த ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தின் காக்கை வன்னியனாக, எப்போதும் இருந்து எட்டப்பர் வேலை செய்வது சமூகத்துக்குக் கிடைத்த சாபக்கேடே.

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் அமைச்சர் றிஷாட் பற்றியும் இனவாதிகளுக்கு போட்டுக்கொடுக்கும் ஹக்கீம் தனது நிகழ்ச்சி நிரலை இனியாவது கைவிடுவாரா?

Originally posted by Madawelanews