Monday , November 20 2017

தராவீஹ் தொழுகையும் தவறான புரிதலும்

முன்னுரை

அன்பின் வாசக சகோதர, சகோதரிகளுக்கு!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்துஹு
அல்- குர்ஆன் மற்றும் அல்- ஹதீஸில் தெளிவாகக் கூறப்படாத கருத்து வேறுபாட்டிற்குட்பட்ட விடயங்கள் மார்க்கத்தில் அதிகமாக இருக்கின்றன.

உதாரணமாக:
வுழுவின்போது உறுப்புக்களை அல்-குர்ஆனில் கூறப்பட்டுள்ள ஒழுங்கின்படிதான் கழுவ வேண்டுமா? அல்லது எப்படியும் கழுவலாமா?
தொழுகையில் றுகூவிலிருந்து எழுந்து நிற்கும் போது கைகள் இரண்டையும் மீண்டும் நெஞ்சின் மீது வைப்பதா? அல்லது தொங்க விடுவதா?

அத்தஹிய்யாத்தின் போதும், இரண்டு ஸஜதாக்களுக்கு இடையிலும் ஆட்காட்டி விரலை அசைக்க வேண்டுமா? அல்லது அசைப்பது அவசியமில்லையா?

பெண்கள் முகத்தை மூடுவது கட்டாயமா? கட்டாயம் இல்லையா? என்பன போன்ற அல்-குர்ஆனிலும், அல்-ஹதீஸிலும் தெளிவாகவும், தீர்க்கமாகவும் கூறப்படாத அல்லது பல்வேறு விதமாக அறிவிக்கப்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளுக்குட்பட்ட ஏராளமான விடயங்கள் இருக்கின்றன.

இப்படியான கருத்து வேறுபாடுகள் இஸ்லாமிய வரலாற்றின் நெடுகிலும் அறிஞர்களுக்கிடையில் நிலவி வந்திருக்கின்றன. என்றாலும் அந்த கருத்து வேறுபாடுகள் அவர்களுக்கு மத்தியில் எவ்விதத்திலும் பிளவையோ, பிரிவினையையோ தோற்றுவிக்க வில்லை. மாறாக அது அவர்களுக்கு மத்தியில் புரிந்துணர்வினையும், மரியாதையையும், சகோதரத்துவத்தினையும், சமூக ஐக்கியத் தினையும் வளரச் செய்து வலுப்படுத்தியது.

அவ்வாறே எமக்கு மத்தியிலும் இவ்வாறான கருத்து வேறுபாடுகள் பிளவையோ, பிரிவினையையோ தோற்றுவித்து விடாது ஒருவரின் கருத்தை ஒருவர் மதித்து நடக்கும் பெருந்தன்மையைத்தான் இஸ்லாம் எமக்குப் போதிக்கின்றது.

இதில் எனது ஆய்வுதான் சரியானது மற்றவர்களின் ஆய்வுகள் அனைத்தும் பிழையானது என்று வாதிடும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. அப்படி யாரும் எனது ஆய்வுதான் சரியானது மற்றவர்களின் ஆய்வுகள் அனைத்தும் பிழையானது என்று வாதாடினால் அது ஷைத்தானுடைய போக்காகும். ஷைத்தான்தான் தனது கருத்துத்தான் சரியானது என்று அல்லாஹ்வுடனேயே வாதாடியவன்.
இந்த அடிப்படையில்தான் ரமழான் கால இரவு வணக்கமாகிய தராவீஹ் தொழுகையையும் நாம் அனுக வேண்டியுள்ளது. ரமழான் கால இரவு வணக்கமாகிய தராவீஹ் தொழுகை விடயத்தில் நமக்கு மத்தியில் மட்டுமின்றி நம் முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்கள் காலத்திலிருந்தே பலதரப்பட்ட கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதனை எம்மால் அவதானிக்க முடிகின்றது.

அத்துடன் இந்த ஆய்விற்கு தராவீஹ் தொழுகையும் தவறான புரிதலும் எனும் மகுடம் சூட்டப்பட்டுள்ளது இதற்கான காரணம் இன்று அதிகமானவர்கள் தராவீஹ் என்று ஒரு தொழுகை இல்லைளூ கியாமுல்-லைல், வித்று மற்றும் தராவிஹ் ஆகிய அணைத்துமே ஒரே தொழுகையைத்தான் குறிக்கின்றன என்றுப் பிரச்சாரம் செய்து வருவதனைக் காணக் கூடியதாகவுள்ளது. எனவே அவர்களின் இந்தத் தவறான புரிதலை அகற்றி தராவீஹ் என்றொரு விஷேடத் தொழுகை இருக்கின்றது என்பதனைத் தெளிவு படுத்துவதற்கேயாகும்.
எனவே வாசகர்கள் நடுநிலையோடு நிதானமாக சத்தியத்தினை தெரிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் இதனைப் படிக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.

நாகரீகமான முறையில் முன்வைக்கப்படுகின்ற வாசகர்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் அனைத்தும் நயமே ஏற்றுக் கொள்ளப்படும்.

இப்படிக்கு
முனாப் நுபார்தீன்- ஜே.பி
இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்.

ரமழான் கால இரவு வணக்கம் (தராவீஹ்) ஒரு ஆய்வு.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் ரமழானில் (ஈமான்) விசுவாசத்துடனும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகின்றாரோ அவருடைய முன் செய்த பாவங்கள் மண்ணிக்கப்பட்டு விடும். (நூல்:-புஹாரி, முஸ்லிம்)
இன்னும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ரமழான் மாதம் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்கள்மீது கடமையாக்கியுள்ளான். அம்மாதத்தில் நின்று வணங்குவதை நான் உங்களுக்கு எனது வழிமுறையாக (ஸுன்னத்தாக)ஆக்கியுள்ளேன். (நுல்:-அஹ்மத், நஸஈ)
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள் நபி (ஸல்) அவர்கள் நள்ளிரவில் பள்ளிவாயலுக்குச் சென்று தொழுதார்கள் அப்போது சில மனிதர்களும் நபி (ஸல்) அவர்களுடன் இணைந்து தொழுதார்கள். மறு நாள் காலையில் மக்கள் இத்தொழுகைப் பற்றி தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள் ஆதலால் மறுநாள் இரவு நபி (ஸல்) அவர்கள் தொழுத போது அதிகமான மக்கள் அத்தொழுகையில் இணைந்து கொண்டார்கள் இவ்வாறே மூன்றாம் இரவும் நடைபெற்றது.

நான்காம் இரவான போது பள்ளிவாயலில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது என்றாலும் நபி (ஸல்) அவர்கள் பஜ்ர் தொழுகைக்காக மஸ்ஜிதிற்கு செல்லும்வரை இரவில் வெளிவரவில்லை பஜ்ர் தொழுகையை நிறைவேற்றியபோது நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி நீங்கள் இரவு கூடியதை நான் அறியாமலில்லை என்றாலும் உங்கள் மீது இத்தொழுகை விதியாக்கப்பட்டு நீங்கள் அதனை நிறைவேற்ற முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக நான் வெளிவரவில்லை என்று கூறினார்கள். இது ரமழானில் நடை பெற்றது. (நூல்:-புஹாரி, முஸ்லிம்,
மேலே இடம் பெற்றிருக்கின்ற தொழுகைகளையே நம் முஸ்லிம் சமூகத்தினர்கள் தராவிஹ் என்று அழைக்கின்றார்கள்.
தராவீஹ் தொழுகை என்பது புனித ரமழான் மாதத்தில் மட்டும் நிறைவேற்றப்படுகின்ற ரமழானுடைய விஷேடத் தொழுகையாகும். இந்தத் தொழுகையை கூட்டுத் தொழுகையாகத் தொழுவது என்பது மிகச் சிறந்ததொரு செயலாகும். இதனை நபி (ஸல்) அவர்கள் ஒருசில தினங்கள் மட்டும் மஸ்ஜிதுன் நபவியில் (ஜமாஅத்) கூட்டாக நிறைவேற்றியுள்ளார்கள். தமது (உம்மத்) சமூகத்தினர்கள் மீது அது கடமையாக்கப்பட்டு உம்மத்தினர்கள் அதனை நிறைவேற்றுவதில் குறைசெய்து விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாக தொடர்ந்து ஜமாஅத்தாக தொழுவதைத் தவிர்த்துக் கொண்டார்கள்.
நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின் எந்தவொன்றும் கடமையாக்கப்பட முடியாது எனும் நிலை ஏற்பட்ட போது இஸ்லாத்தின் இரண்டாவது ஜனாதிபதி உமர் (ரழி) அவர்கள் மீண்டும் அதனை மஸ்ஜிதில் ஜமாஅத்தாக நிறைவேற்றுவதனை உயிர்ப்பித்தார்கள்.
அப்துர்ரஹ்மான் பின் அப்துல் காரி அவர்கள் கூறுகின்றார்கள்: நான் ஒரு நாள் ரமழான் இரவில் உமர் (ரழி) அவர்களுடன் மஸ்ஜிதிற்குச் சென்றேன் அப்போது மக்கள் தனித்தனியாக தொழுது கொண்டிருந்தார்கள் சிலர் குழுக் குழுவாக ஒருவர் தொழுகை நடாத்த சிலர் அவரைப் பின் தொடர்ந்து தொழுது கொண்டிருந்தார்கள் இதனை அவதானித்த உமர் (ரழி) அவர்கள் இவர்கள் அணைவரையும் ஒரே காரியின் கீழ் ஒன்றிணைத்தால் நன்றாக இருக்குமே என்று கூறினார்கள் பிறகு உபை இப்னு கஃப் (ரழி) அவர்களின் தலைமையின் கீழ் ஒன்றிணைத்தார்கள். (நூல்:- புஹாரி)

தராவீஹ் எனும் பெயர்
தராவீஹ் எனும் இப்பெயர் தற்செயலாக எவ்வித ஆதாரமுமின்றி உருவான ஒன்றல்லளூ அவ்வாறு யாரும் கூறினால் அவருக்கு இதன் சரியான வரலாறு தெரியாது என்பதுதான் பொருள் ரமழான் கால இரவு வணக்கம் பற்றி பதிவாகியுள்ள அத்தனை கிரந்தங்களிலும் அதன் ஆசிரியர்கள் இத்தொழுகையினை தராவீஹ் என்றே குறிப்பிட்டுள்ளார்கள். தராவீஹ் என்றால் ஓய்வு, ராகத், நிம்மதி என்பது பொருளாகும் இப்பெயர் இத்தொழுகைக்குரிய சிறப்பு மற்றும் காரணப் பெயராகும்.

நபி (ஸல்) அவர்கள் மற்றும் நம்முன்னோர்களான சஹாபாக்கள், சலபுஸ்ஸாலிஹீன்கள் ஆகியோர் இத்தொழுகையினை இரண்டிரண்டு ரக்கஅத்களாகவும் ஒவ்வொரு இரண்டு ஸலாம்களுக்குப் பின் ஓய்வு எடுத்துத் தொழுததனாலும் இத்தொழுகை தராவீஹ் என்று அழைக்கப் படுகின்றது.

நபி (ஸல்) அவர்களுடைய இரவு வணக்கம் பற்றி கூறும் போது அண்ணை ஆயிஷா சித்தீக்கா (ரழி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளிக்கின்றார்கள்:
நபி (ஸல்) இரவில் நான்கு ரக்கஅத்க்கள் தொழுவார்கள் பின்னர் நான் அனுதாபப்படும் அளவுக்கு நீண்ட நேரம் ஓய்வு எடுப்பார்கள் . (நூல்: சுனன் பைஹக்கி)

சில வேளைகளில் நபி (ஸல்) அவர்கள் தொழ விரும்பினால் தனது முஅஸ்ஸின் பிலால் (ரழி) அவர்களிடம் அரிஹ்னா யா பிலால் அதாவது பிலாலே! தொழுகை மூலம் எமக்கு ஓய்வு கொடுப்பீராக என்று கூறுவார்கள். நூல்: ஹாசியத்துத் தஹாவி

மேற்படி இரு அறிவிப்புக்களிலும் முதல் அறிவிப்பில் இடம் பெற்றுள்ள ஓய்வு எடுப்பார்கள் என்பதனை குறிக்க யதரவ்வஹ் எனும் சொல்லும் இரண்டாவது அறிவிப்பில் இடம் பெற்றுள்ள அரிஹ்னா எனும் சொல்லும் ரமழானுடைய இரவுத் தொழுகைக்கு தராவிஹ் என்றுப் பெயர் வரக் காரணங்களாகும்.

அனைத்துத் தொழுகைகளும் காரணப் பெயர் கொண்டே அழைக்கப்படுகின்றன.

உதாரணமாக:-
கிரகணம் ஏற்படும் போது தொழும் தொழுகை கிரகணத் தொழுகை.
பெருநாளைக்காகத் தொழும் தொழுகை பெருநாள் தொழுகை.
ஜனாஸாவிற்காகத் தொழும் தொழுகை ஜனாஸாத் தொழுகை
அதிகாலையில் தொழும் தொழுகை (பஜ்ர்) அதிகாலைத் தொழுகை
மதிய நேரத்தில் தொழும் தொழுகை (ழுஹர்) மதிய நேரத் தொழுகை. அஸர் பிற்பகல், மஃரிப் சூரிய அஸ்தமனம், இஷா முன்னிரவு, லுஹா முற்பகல், தஹ்யத்துல் மஸ்ஜித் பள்ளிக் காணிக்கை, வித்று ஒற்றை என்று அனைத்தும் அதன் நேரத்துடன் அல்லது காரணத்துடன் சம்மந்தப்பட்டே அழைக்கப்படுகின்றன.
அவ்வாறே தராவீஹ் என்பதும் ரமழான் கால இரவுத் தொழுகைக்குரிய காரண மற்றும் சிறப்புப் பெயராகும். இதனை கியாமு ரமழான் என்றும் குறிப்பிடலாம்.

ரமழானுடைய விஷேட சுன்னத்தாகும்.
இது ரமழானுக்கு மட்டும் உரித்தான பிரத்தியேகமான விஷேடத் தொழுகையாகும். இத்தொழுகை ஏனைய காலங்களில் தொழப்படுவதுமில்லை அவ்வாறு தொழுமாறு நாம் ஏவப்படவுமில்லை.
யார் ரமழானில் ஈமானுடனும் நன்மையை ஆதரவு வைத்தும் இரவில் நின்று வணங்குகின்றாரோ அவருடைய முன் செய்த பாவங்கள்; மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதனைச் சரியாகப் புரிந்து கொள்ளாத சிலர் அல்லது புரிந்து கொண்டும் தனது கருத்துக்கு முறனாக உள்ளதே என்று என்னும் சிலரும் இத்தொழுகையை வித்ருடனும் கியாமுல்லைல் எனப்படும் இராவணக்கத்துடனும் இனைக்க முயற்சிக்கின்றனர். அவர்களின் கூற்று கியாமுல்லைல் வித்று மற்றும் தராவிஹ் ஆகிய அணைத்துமே ஒரே தொழுகையைத்தான் குறிக்கின்றன என்றும் தராவிஹ் என்று ஒரு தொழுகைக் கிடையாது என்றும் கூறுகின்றனர். இக்கூற்று முற்றிலும் பிழையானது என்பதற்கு பின்வரும் அறிவிப்பு சிறந்ததொரு சான்றாகும்.

ஸயித் இப்னு ஹிஷாம் ஹகீம் இப்னு அப்லஹ் ஆகிய இரு நபித்தோழர்களும் அன்னை ஆயிஷா சித்தீக்கா (ரழி) அவர்களிடம் சென்று நபி (ஸல்) அவர்களுடைய இரவுத் தொழுகை (கியாமுல்லைல்) பற்றி வினவினார்கள் அதற்கு அன்னை ஆயிஷா சித்தீக்கா (ரழி) அவர்கள் நீங்கள் யா அய்யுகல் முஸ்ஸம்மில் எனும் அத்தியாயத்தை ஓதுவதில்லையா என்று கேட்டு விட்டு பின்வருமாறு நபி (ஸல்) அவர்களின் (கியாமுல்லைல்) இரவுத் தொழுகைபற்றி விளக்குகின்றார்கள்.

சூரத்துல் முஸ்ஸம்மில் அத்தியாயத்தின் முற்பகுதி இறக்கப்பட்ட போது அல்லாஹ் இரவுத் தெழுகையை கடமையாக்கியிருந்தான் நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் ஒரு வருடகாலம் இத்தொழுகையை நிறைவேற்றி வந்தார்கள் ஒரு வருடத்திற்குப் பிறகு சூரத்துல் முஸ்ஸம்மில் அத்தியாயத்தின் இறுதிப்பகுதி அருளப்பட்டது அதன்பிறகு இத்தொழுகை கடமை எனும் நிலையில் இருந்து நபில் எனும் நிலைக்கு மாற்றப்பட்டது என்று விளக்கமளித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து மேற்படி நபித் தோழர்கள் இருவரும் நபி (ஸல்) அவர்களின் (வித்ர்) ஒற்றைத் தொழுகைப் பற்றி விளக்கம் கேட்டார்கள் அதற்கு அன்னை ஆயிஷா சித்தீக்கா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் (வித்ர்) ஒற்றைத் தொழுகை பற்றி ஒரு நீண்ட விளக்கத்தைக் கொடுத்துள்ளார்கள். அதில் நபி (ஸல்) அவர்களின் வித்றுத் தொழுகை 11 ரக்கஅத்துக்களாக இருந்தது என்றும், பிறகு நபி (ஸல்) அவர்கள் வயது முதிர்ந்த போது ஒன்பது ரக்கஅத்துக்கள் தொழுதார்கள் என்றும் அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் ஒரு தொழுகையைத் தொழுதால் அதனைத் தொடராகச் செய்வதை விரும்புபவர்களாக இருந்தார்கள் என்றும் ஆயிஷா (ரழி) அவர்கள் தெளிவு படுத்தினார்கள். (நூல்:- முஸ்லிம்)

மேற்படி அறிவிப்பில் நபி (ஸல்) அவர்களுடைய இரவுத் தொழுகையைப் பற்றி வினவிய நபித்தோழர்கள் அதனைத் தொடர்ந்து வித்று தொழுகை பற்றியும் தனியாக வினவுகின்றார்கள்.

ஒரே அறிவிப்பில் இரவுத் தொழுகை பற்றி தனியாகவும் வித்று தொழுகை பற்றி தனியாகவும் வினவப்பட்டிருப்பதிலிருந்தும் அவ்விரு வினாக்களுக்கும் இருவிதமாக பதில்கள் அளிக்கப்பட்டிருப்பதிலிருந்தும் அவ்விரண்டு தொழுகைகளும் வௌ்வேறான இரு வகைத் தொழுகைகளை குறிக்கின்றன என்பதனை நாம் நன்கு புரிந்து கொள்ள முடிகின்றது.

அவ்வாறே ரமழானின் இரவுத் தொழுகையும் மேற்கூறப்பட்ட இரு தொழுகைகளிலிருந்தும் வேறுபட்ட ரமழானுடன் தொடர்புடைய பிரத்தியேகமான ஒரு தொழுகை என்பதனையும் நாம் நன்கு புரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் ரமழானில் ஈமானுடனும் நன்மையை ஆதரவு வைத்தவனாகவும் நின்று வணங்குகின்றானோ
அவனது முன் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும். (நூல்:- முஸ்லிம்)

இங்கு ரமழானில் நின்று வணங்குபவர்களுக்கே முன் செய்த பாவங்கள் மன்னிக்கப் படுவதாக நபி (ஸல்) அவர்கள் நற்செய்தி கூறினார்கள். ஏனைய காலங்களில் நின்று வணங்குபவர்களுக்கு அல்ல எனவே இதிலிருந்தும் இது ரமழானிற்கு மாத்திரமுள்ள விஷேடத் தொழுகை என்பதனை எம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடிகின்றது.

அவ்வாறே அம்மாதத்தில் நின்று வணங்குவதை நான் எனது வழிமுறையாக ஆக்கியுள்ளேன் என நபி (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்தும் அது ரமழானின் விஷேட (சுன்னத்து) நபிவழி என்பது தெளிவாகின்றது.

அடுத்து நபி (ஸல்) அவர்கள் இத்தொழுகையனை மஸ்ஜிதில் ஜமாஅத்தாக நிறைவேற்றியதிலிருந்தும். இது ரமழானிற்கு மாத்திரம் உள்ள விஷேட தொழுகை என்பதனை விளங்க முடிகின்றது.

இப்படியான பல காரணங்களால் இத்தொழுகை கியாமுல்லைல் எனும் இரவுத் தொழுகையிலிருந்தும், வித்று எனும் ஒற்றைத் தொழுகையிலிருந்தும் வேறுபட்ட கியாமு ரமழான் அல்லது ஸலாத்துத் தராவீஹ் எனும் ரமழானிற்கு மாத்திரம் உள்ள விஷேடத் தொழுகையாகும் என்பது தெளிவாகின்றது.

தராவிஹ் தொழுகையின் ரக்கஅத்துக்கள்

தராவிஹ் தொழுகையின் ரக்க-அத்துக்கள் பற்றி முன்னோர்கள் பின்னோர்கள் அகிய அனைவர்களிடமும் 1400 ஆண்டு காலமாகப் பல கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.

சிலர் 8 என்றும் இன்னும் சிலர் 20 மற்றும் சிலர் 36 என்றும் 41 என்றும் கருதுகின்றனர்.

இமாம் திர்மிதி அவர்கள் தங்களது ஜாமிஉத் திர்மிதி எனும் ஹதீஸ் தொகுப்பில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்:
ரமழான்கால இரவு வணக்கத்தில் அறிஞர்கள் பல கருத்து வேறுபாடுகள் கொண்டுள்ளார்கள். மதீனாவாசிகள் வித்றுடன் 41 ரகஅத்துக்கள் என்று கருதுகின்றனர். அவ்வாறே ஸுப்யானுஸ் ஸவ்ரி, இமாம் ஷாபியி, இப்னு முபாரக் உட்பட இன்னும் அதிகமான அறிஞர்கள் உமர் மற்றும் அலி (ரழி) உட்பட இன்னும் சில நபித்தோழர்களின் அறிவிப்பின் பிரகாரம் 20 ரகஅத்துக்கள் என்று கருதுகின்றனர். அவ்வாறே இமாம் ஷாபியி அவர்கள் தங்களது ஊராகிய மக்காவில் மக்கள் 20 ரக்கஅத்துக்கள் தொழக் கண்டதாகக் குறிப்பிடுகின்றார்கள். இமாம் அஹ்மத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் இது விடயத்தில் பலதரப்பட்ட அறிவிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. (நூல்- திர்மிதி)
என்றாலும் இத்தொழுகைக்கு ரக்கஅத்துக்கள் இத்தனைதான் என்று ஒர் குறிப்பிட்ட எண்ணிக்கை கிடையாது என்பதுவே மிகச் சரியான கருத்தாகும்.

நபி (ஸல்) அவர்கள் அத்தொழுகைக்கு ஒரு குறிப்பிட்ட அளவினை நிர்னயிக்காது யார் ரமழானில் நின்று வணங்குகின்றாரோ என்றுதான் கூறியுள்ளார்கள் அத்துடன் இரவுத் தொழுகை பற்றி கேட்கப்பட்ட அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் நபி (ஸல்) அவர்கள் இரண்டிரண்டு ரக்கஅத்துக்களாகத் தொழ வேண்டு என்றும் சுபஹ் வந்து விட்டதோ என்று கருதினால் தான் தொழுத தொழுகையை ஒற்றையாக்கி முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் விளக்கம் கொடுத்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்கஅத்களாகத் தொழப்படும், உங்களில் ஒருவர் சுபஹ் உடைய நேரம் வந்து விடுவதைப் பயந்தால் அவர் ஒரு ரகஅத்துத் தொழுது தான் தொழுத தொழுகையை ஒற்றையாக்கிக் கொள்ளட்டும். (நூல்:-புஹாரி, முஸ்லிம்)

மேற்படி அறிவிப்பில் சுபஹ் வந்துவிட்டதோ என்று அஞ்சினால் ஒருவன் தான் தொழுதத் தொழுகையை ஒற்றையாக்கி முடித்துக் கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்களே தவிர இத்தனை ரக்கஅத் தொழுது முடித்தால் ஒற்றையாக்கி முடித்துக் கொள்ளுங்கள் என்று கூறவில்லை இதிலிருந்தே தராவீஹ் தொழுகையின் ரக்கஅத்துகக்களுக்கு ஒரு குறிப்பிட்ட எல்லை கிடையாது என்பதனை நாம் புரிந்து கொள்ள முடியும் அவ்வாறு ஒரு குறிப்பிடப்பட்ட அளவுடையதாக இருந்திருந்தால் அது பற்றி விளங்கப் படுத்துவதற்கு மிகவும் பொருத்தமான சந்தர்ப்பம்; இதுவேயாகும்.

என்றாலும் நபி (ஸல்) அவர்கள் அப்படி எந்தவொரு எல்லையையும் நிர்ணயித்துக் குறிப்பிடாது சுபஹ் வந்து விட்டதோ என்று பயந்தால் என்றுதான் கூறினார்கள் இதுவே இரவுத் தொழுகை எத்தனை ரக்கஅத்களும் தொழலாம் என்பதற்கு போதிய சான்றாகும்.
சுபஹ் வந்து விட்டதோ என்று பயப்படுகின்ற அளவுக்கு ஒரு மனிதன் தொழுகின்றான் என்றால் அவன் எத்தனை ரக்கஅத்துக்கள் தொழ முடியும் என்பதனை சற்றுக் கவனிப்போம்.

உதாரணமாக இஷா தொழுகை இரவு 08.30க்கு முடிகின்றது என்றும் சுபஹ் 4.30 க்கு உதயமாகின்றது என்றும் வைத்துக் கொள்வோம் 08.30 திலிருந்து 04.30 வரை சுமார் 8 மணித்தியாலங்கள் இருக்கின்றன இதில் மூன்றில் ஒரு பகுதி 02. மணித்தியாலங்களும் 40, நிமிடங்களும் ஆகும் அரைவாசிப் பகுதி 04.00, மணித்தியாலங்களாகும் மூன்றில் இரண்டு பகுதி 5. மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் ஆகும் இதில் ஆகக் குறைந்தது மூன்றில் ஒரு பகுதி கடைசி இரவை எடுத்துக் கொண்டாலும் 02. மணித்தியாலங்களும் 40, நிமிடங்களும் ஆகும் இதில் ஒருவர் இரண்டு ஜுஸுவுக்கள் ஓதித் தொழுதாலும் கூட சுமார் 20 ரக்கஅத்துக்களுக்கு மேல் தொழ முடியும்.
அவ்வாறே இரவில் அரைவாசி பகுதியை தொழுகின்ற ஒருவர் 4 ஜுஸுவுக்கள் ஓதித் தொழுதாலும் 20 ரக்கஅத்துக்களுக்கு மேல் தொழ முடியும். அவ்வாறே மூன்றில் இரண்டு பகுதி தொழுவதும்.

தொழுகையில் நிலைகள் நீளமாகின்ற போது ரக்கஅத்துக்களின் என்னிக்கை குறைவதற்கும் நிலைகள் சிறிதாகின்ற போது ரக்கஅத்துக்களின் எண்ணிக்கைகள் கூடுவதற்கும் வாய்புக்கள் இருக்கின்றன. ஆகவேதான் நபி (ஸல்) அவர்கள் ரக்கஅத்துக்களின் என்னிக்கைகளை நிர்னயிக்காது சுபஹ் வந்து விட்டதோ என்று பயந்தால் அல்லது தொழுகையை முடித்துக் கொள்ள விரும்பினால் அவர் தான் தொழுதத் தொழுயையை ஒற்றையாக்கி முடித்துக் கொள்ளட்டும் என்று கூறியுள்ளார்கள்.

தொழுகையில் மிகச் சிறந்த நிலைகள்
1. நீண்ட நிலை :
தொழுகைகளில் சிறந்த தொழுகை எது என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது நீண்ட நிலைகளைக் கொண்ட தொழுகை என்று பதிலளித்தார்கள் (நூல்: முஸ்லிம்)
2. சுஜுதுடைய நிலை :
உங்களில் ஒருவர் சுஜுதில் இருக்கும்போது துஆவை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள் ஏனெனில் ஒருவன் சுஜுதில் இருக்கும் போது அவன் அல்லாஹ்விற்கு மிகவும் நெருக்கமாக இருக்கின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
ஆகவே நாம் நீண்ட நிலைகளைக் கொண்ட தொழுகைகளாக எமது இரவு வணக்கங்களை ஆக்கிக் கொள்ள வேண்டும். அல்லது சுஜுதுகளை அதிகப்படுத்திக் கொள்ளல் வேண்டும். சுஜுதுகளை அதிகப் படுத்துவதென்றால் ரக்கஅத்துக்களின் என்னிக்கைகளை அதிகப் படுத்துதல் வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் றபீயா (ரழி) அவர்களிடம் றபியாவே என்னிடம் கேட்ப்பாயாக என்று கூறினார்கள் அதற்கு றபீயா (ரழி) அவர்கள் நான் சுவர்க்கத்தில் உங்களுடன் இருப்பதைக் கேட்கிறேன் என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் அதுவல்லாத வேறு ஏதாகிலும் என்று கூறினார்கள் அதற்கு றபீயா (ரழி) அவர்கள் அதுதான் எனக்கு வேண்டும் என்று கூறினார்கள் அதற்கு நபி (ஸல்) அவர்கள் அப்படியாயின் நீ சுஜுதுகளை அதிகப்படுத்திக் கொள்வாயாக என்று கூறினார்கள். (முஸ்லிம்)

இங்கே நபி (ஸல்) அவர்கள் றபியா (ரழி) அவர்களுக்கு சுஜுதுகளை அதிகப்படுத்திக் கொள்ளுமாறு கூறுகின்றார்கள் ஒருவர் சுஜுதுகளை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டுமாயின் அவர் நிச்சயமாக ரக்கஅத்துக்களை அதிகப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். ஏனெனில் ஒரு ரக்கஅத்தில் இரண்டு சுஜுதுகளுக்கு மேல் சுஜுதுகள் இல்லை என்பதை நாம் அறிவோம். அவ்வாறே கடமையான தொழுகைகளிலும் ரக்கஅத்துக்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ள பெருநாள் போன்ற சுன்னத்தான தொழுகைகளிலும் ரக்கஅத்துக்களை அதிகப்படுத்த முடியாது என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம்.

ஆனால் இரவு வணக்;கம் (கியாமுல்லைல்) ரமழானுடைய இரவு வணக்கம் (தராவிஹ் அல்லது கியாமு ரமழான்) போன்ற ரக்கஅத்துக்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படாத தொழுகைகளில்தான் நாம் ரக்கஅத்துக்களைக் அதிகப் படுத்துவதன் மூலம் சுஜுதுகளை அதிகப் படுத்தலாம்.

என்றாலும் சிலர் ஆயிஷா (ரழி) அவர்கள் வர்ணிக்கின்ற நபி (ஸல்) அவர்களின் தொழுகை பற்றிய பின்வரும் அறிவிப்பை வைத்து தராவிஹ் தொழுகை 11 ரக்கஅத்துக்கள்தான் என்றும் அதனைவிட அதிகமாக தொழுவது கூடாது என்றும் வாதிடுகின்றனர்.
நபி (ஸல்) அவர்கள் ரமழானிலும் ரமழான் அல்லாத காலங்களிலும் (இரவுத் தொழுகை) 11 ரக்கஅத்துக்களை விட அதிகமாகத் தொழுதது கிடையாது. நான்கு ரக்கஅத்துக்கள் தொழுவார்கள் அதன் நீளத்தையோ அழகையோ பற்றி கேட்காதீர்கள், பிறகு நான்கு ரக்கஅத்துக்கள் தொழுவார்கள் அதன் நீளத்தையோ அழகையோ பற்றி கேட்காதீர்கள் பிறகு மூன்று ரக்கஅத்துக்கள் தொழுவார்கள் அப்போது நான் இறைத் தூதர் அவர்களே வித்று தொழுவதற்கு முன்னர் நீங்கள் தூங்குவீர்களா? என வினவீனேன். அதற்கு அயிஷாவே எனது கண்கள் இரண்டும் உறங்கும் என்றாலும் எனது உள்ளம் உறங்குவதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி,)

முஸ்லிமில் ஓர் அறிவிப்பில் அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் இரவு வணக்கம் மற்றும் வித்று தொழுகை பற்றி விவரிக்கின்ற போது இவ்விரு தொழுகைகளும் வவ்வேறான இரண்டு தொழுகை என்பதனையும் அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் ஒரு தொழுகையைத் தொழுதால் அதனை தொடராகத் தொழுவதை விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள் என்றும் அறிவிக்கின்றார்கள். நூல்:- முஸ்லிம்

நாம் முன்னர் கூறியது போன்று தராவிஹ் தொழுகை என்பது ரமழானுக்கு மாத்திரம் உள்ள விஷேடத் தொழுகையாகும். ஆயிஷா (ரழி) அறிவிக்கும் செய்தி நபி (ஸல்) அவர்களின் ரமழானிலும் ரமழான் அல்லாத ஏனைய காலங்களிலும் உள்ள வழமையான தொமுகை பற்றியதாகும். இதனை நாம் மேற்படி அறிவிப்பில் உள்ள தொடராகத் தொழுவதை விரும்புபவர்களாக என்ற வாசகத்தில் இருந்து விளங்கிக் கொள்ளலாம். அவ்வாறு வழமையாக 11 ரக்கஅத்கள் தொழுது வரக் கூடியவர்கள் விடயத்தில் அதுவே சிறந்தாகும். நாம் அவ்வாறில்லை நாம் ரமழானில் மாத்திரமே விஷேடமாக இரவில் தொழக்கூடிவர்களாக உள்ளோம். ஆதலால் எமது தொழுகைக்கு இது பொருந்தாது.

என்றாலும் வழமையாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையினை இரவு வணக்கமாக ஆக்கிக் கொண்டவர்கள் அதனையே ரமழானிலும் நிறைவேற்றலாம் விரும்பினால் அதனை விட அதிகமாகவும் தொழலாம் இதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் கிடையாது. மாறாக அது வரவேற்க்கத்தக்க செயலாகும்.

ஆயிஷா (ரழி) அவர்களின் மேற்படி அறிவிப்பு நபி (ஸல்) அவர்கள் 11 ரக்கஅத்துக்கள்தான் தொழுதார்கள் என்பதற்கு ஆதாரமாக அமையாது மாறாக நபி (ஸல்) அவர்கள் 11 ரக்கஅத்துக்களுக்கு அதிகமாக தொழுததில்லை என்பதற்குத்தான் அதனை நாம் ஆதாரமாகக் கொள்ள வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் சில இரவுகளில் இஷாவிலிருந்து சுபஹ் வரை வெறும் இரண்டு ரக்கஅத்கள் மட்டுமே தொழுதுள்ளார்கள். என்று சில அறிவிப்புக்கள் இடம் பெற்றுள்ளன.

அவ்வாறே ஆயிஷா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகையினையும் வித்று தொழுகையினையும் பற்றி விளக்குகின்ற அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் 11 ரக்கஅத்கள் தொழுதார்கள் என்றும் வயது முதிர்ந்த போது 9 ரக்கஅத்துக்கள் தொழுதார்கள் என்றும் இன்னும் 7 ரக்கஅத்துக்கள் தொழுதார்கள் என்றும் கூறுகின்றார்கள்.

எனவே 11 ரக்கஅத்கள்தான் இரவுத் தொழுகை என்பது பிழையான வாதமாகும் என்றாலும் நபி (ஸல்) அவர்கள் 11 ரக்கஅத்துக்களை விட கூடுதலாக தொழுகின்ற அளவுக்கு அவர்களுக்கு நேரம் போதாது என்பதே யதார்த்தம். அந்த அளவு நீண்ட நிலைகளைக் கொண்டத் தொழுகைகளாக நபி (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள்.

என்றாலும் சிலபோது நிலைகளின் நீளம் குறைகின்ற போது 13 ரக்கஅத்துக்களும் நிலைகளின் நீளம் கூடுகின்றபோது 4 அல்லது 2 ரக்கஅத்துக்களும் தொழுதுள்ளார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

அடுத்த விடயம் ஆயிஷா (ரழி) அவர்கள் தங்களது வீட்டில் நபி (ஸல்) இருக்கும் போது தொழுததனைப் பற்றி மட்டுமே அறிவார்கள் அதே நேரம் நபி (ஸல்) அவர்கள் சிலபோது இரண்டு அல்லது நான்கு ரக்கஅத்துக்களே தொழுததாகவும் இன்னும் சில வேளைகளில் 13 ரக்கஅத்துக்கள் தொழுததாகவும் பல அறிவிப்புக்கள் இடம் பெற்றுள்ளன.

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் ஒரு நாள் மைமூனா (ரழி) அன்ஹா அவர்களின் வீட்டில் தங்கி இருந்த போது நபி (ஸல்) அவர்கள் 13 ரகஅத்துக்கள் தொழுததாக அறிவிக்கின்றார்கள்.

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் ஒரு இரவு அண்ணை மைமூனா (ரழி) அவர்களின் வீட்டில் நபி (ஸல்) அவர்களுடன் தங்கி.யிருந்தேன் அப்போது இரவில் அரைவாசி அல்லது அரைவாசியிற்கு சற்று முன்னர் வரை நபி (ஸல்) அவர்கள் தூங்கினார்கள் பிறகு தூக்கத்திலிருந்து விழித்து முகத்திலிருந்து தூக்கத்தைக் கலைத்தவர்களாக ஆல இம்ரான் அத்தியாயத்தின் 10 வசனங்களை ஓதினார்கள். பிறகு தண்ணீரை எடுத்து நல்ல முறையில் வுழு செய்தார்கள் பிறகு தொழுகைக்கு எழுந்து நின்றார்கள் நானும் அவர்களுடன் இனைந்து தொழுதேன்
அவர்கள்
இரண்டு ரக்கஅத்துக்கள் தொழுதார்கள்
பிறகு இரண்டு ரக்கஅத்துக்கள் தொழுதார்கள்
பிறகு இரண்டு ரக்கஅத்துக்கள் தொழுதார்கள்
பிறகு இரண்டு ரக்கஅத்துக்கள் தொழுதார்கள்
பிறகு இரண்டு ரக்கஅத்துக்கள் தொழுதார்கள்
பிறகு இரண்டு ரக்கஅத்துக்கள் தொழுதார்கள்
பிறகு வித்று தொழுதார்கள். (நூல்: புஹாரி)

அவ்வாறே ழுஹாத் தொழகை பற்றி ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்ற போது நபி (ஸல்) அவர்கள் ழுஹாத் தொழுகை தொழுததே கிடையாது என்று கூறுகின்றார்கள். (புகாரி)

அதே நேரம் நபி (ஸல்) அவர்களின் பிரிதோர் மனைவியாகிய உம்மு ஹானி (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் ழுஹா 8 ரக்கஅத்க்கள் தொழுததாக அறிவிக்கின்றார்கள். (புகாரி)

அவ்வாறே இரவுத் தொழுகை பற்றிய அறிவிப்பும் ஆயிஷா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் 11 ரக்கஅத்துக்களுக்கு மேல் தொழுததே இல்லை என்று கூறும் அதே நேரம் நபி (ஸல்) அவர்கள் தனது மற்றுமோர் மனைவியாகிய அண்ணை மைமூனா (ரழி) அவர்களின் வீட்டில் தங்கி இருந்த போது 13 ரக்கஅத்துக்கள் தொழுதார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

ஆயிஷா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் தங்களது வீட்டில் இருக்கும் போது செய்த வணக்கங்கள் பற்றித்தான் நன்கு அறிவார்கள் அதே நேரம் நபி (ஸல்) அவர்கள் தினமும் ஆயிஷா (ரழி) அவர்களின் வீட்டில் மட்டுமே தங்குபவர்களாக இருக்கவில்லை ஏனைய மனைவிமார்களின் வீடுகளிலும் தங்கக்கூடியவர்களாக இருந்தார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்..
தராவிஹ் விஷயத்தில் ஆயிஷா (ரழி) அவர்களின் ஹதீஸை ரமழான் அல்லாத காலங்களில் யாரெல்லாம் இரவில் 11 ரக்கஅத்கள் வழமையாகத் தொழுது வரக்கூடியவர்களாக இருக்கின்றார்களோ அவர்கள் ரமழானிலும் 11 ரக்கஅத்துக்கள் தொழுவதே சிறந்தது என்றிருந்த போதும் அதனைவிட அதிகமாகத் தொழுவதில் தவறு கிடையாது.

என்றாலும் ரமழான் அல்லாத காலத்தில் ஒருவர் வழமையாக எத்தனை ரகஅத்துக்கள் தொழுது வருகின்றாரோ அதனையே ரமழானிலும் அவர் தொழுவது சிறந்ததாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் ஒரு தொழுகையைத் தொழுதால் அதனைத் தொடராகத் தொழுவதை விரும்பக் கூடியவர்களாக இருந்துள்ளார்கள்.

என்றாலும் ரமழானில் மட்டும் யார் இரவுத் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அவர்கள்; விடயத்தில் மேற்படி அறிவிப்பு பொருந்தாது என்பதே சரியானதாகும்.

ஏனெனில் ரமழான் அல்லாத காலங்களில் தொழாமல் இருந்து விட்டு ஒருவர் ரமழானில் மட்டும் விஷேடமாகத் தொழுகின்றார் என்றால் அது ரமழானுக்குரிய விஷேடத் தொழுகை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

எனவே தராவிஹ் தொழுகை இத்தனை ரக்கஅத்துதான் என்பதற்கு எந்தவொரு வலுவான ஆதாரமும் இல்லாததனால் அது ஒருவருக்கு எத்தனை ரகஅத்துக்கள் தொழ முடியுமோ அத்தனை தொழலாம்.

என்றாலும் இரவு முழுவதும் தொழுத நன்மையினை அடைந்து கொள்ளும் வகையில் ஜமாஅத்துடன் இமாம் தொழுது முடியும் வரை தொழுவது சிறந்ததாகும்.

அபூதர் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள் நாம் நபி (ஸல்) அவர்களுடன் ரமழான் மாதம் நோன்பு நோற்றோம் நபி (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தில் ஏழு நாட்கள் மீதம் ஆகும் வரை எமக்கு இரவில் எந்தவொரு தொழுகையையும் நடாத்தவில்லை ஏழு நாட்களே மீதமான போது இரவில் மூன்றில் ஒரு பகுதி எமக்கு தொழுகை நடாத்தினார்கள் பிறகு ஆறு நாட்கள் மீதமான போது எமக்கு இரவில் தொழுகை நடாத்தவில்லை மாதத்தில் ஐந்து நாட்கள் மீதமான போது இரவில் அரைவாசிப்பகுதி எமக்கு தொழுகை நடாத்தினார்கள் அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் அவர்களே இவ்விரவின் எஞ்சிய பகுதியையும் எமக்கு தொழுவித்தால் என்று கூறினேன் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதன் இமாமைத் தொடர்ந்து இமாம் தொழுகையை முடிக்கும் வரை தொழுதால் அவர் இரவு முழுவதும் தொழுதவராக கனிக்கப்படுவார் என்று கூறினார்கள். பிறகு நான்கு நாட்கள் மீதமான போது எமக்கு இரவில் எந்தவொரு தொழுகையையும் நடாத்தவில்லை பிறகு மூன்று நாட்கள் மீதமான போது நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியர்கள் தமது குடும்பத்தினர்கள் மற்றும் அனைத்து மக்களையும் ஒன்றினைத்து நாம் ஸஹர் செய்வதை இழந்து விடுவோமோ என்று அஞ்சும் அளவிற்கு முழு இரவும் எமக்கு தொழுகை நடாத்தினார்கள். (நூல்:- அபூதாவுத், இப்னுமாஜா, அஹ்மத்)

மேற்படி அறிவிப்பில் ஒரு மனிதன் இமாமைத் தொடர்ந்து இமாம் தொழுகையை முடிக்கும் வரை தொழுதால் அவர் இரவு முழுவதும் தொழுதவராக கனிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மையை அடைந்து கொள்ளும் வகையில் நாம் இமாம் ஜமாஅத்தாக ஜமாஅத் முடியும் வரை தொழுவதே சிறந்ததாகும்.

சாராம்சம்
தராவீஹ் தொழுகை என்பது ரமழானுக்கு மாத்திரம் உரித்தான விஷேடத் தொழுகையாகும்.
இது சுன்னத் முஅக்கதா எனும் வலுவான நபி வழியாகும்.
இதனை வீட்டில் தொழுவதே மிகவும் சிறந்ததாகும்.
அறவே தொழாமல் இருப்பதை விட பள்ளியில் தொழுவது சிறந்ததாகும்.
தராவீஹ் தொழுகை எத்தனை ரக்கஅத்துக்களும் தொழலாம். அதன் எண்ணிக்கைக்கு ஒரு வரையறை கிடையாது.
ஜமாஅத்துடன் தொழுபவர்கள் ஜமாஅத் முடியும் வரை தொழுவதே மிகவும் சிறந்ததாகும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்

இப்படிக்கு
முனாப் நுபார்தீன்- ஜே.பி
இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்