Monday , November 20 2017

புஹாரி விதானையின் பெயரில் செம்மண்ணோடையில் பாடசாலை உருவாக்கப்பட வேண்டும்.


-ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஓட்டமாவடியை சேர்ந்த அஸ்ஸஹீட் புஹாரி விதானையின் பெயரில் கல்குடா செம்மண்ணோடை கிராமத்தில் ஆரம்ப பாடாசாலை உருவாக்கப்பட வேண்டும் என கிழக்கு முதலைமைச்சர் அல்-ஹாபிழ் செய்னுலாப்தீன் நசீர் அஹமட்டிடம் சமூக சிந்தனையாளரான சாட்டோ வை.எல்.மன்சூர் பகிரங்க வேண்டுகோள் விடுத்தார்.

செம்மண்ணோடை அல்-ஹம்றா வித்தியாலயத்தில் முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் கட்டி முடிக்கப்பட்ட மாடி கட்டிட திறப்பு விழாவும், கா.பொ.சாதாரத்தில் தோற்றிய மாணவர்கள், மற்றும் ஆசிரியர்களை கெளரவிக்கும் விழாவில் உரையாற்றுகையிலே மேற் கண்டவாறு சாட்டோ மன்சூர் பகிரங்க வேண்டுகோளினை முதலமைச்சரிடம் விடுத்தார்.

பாடசாலையின் முதல்வர் ஜனாப் எம்.எஸ்.சுபைத்தீன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம அதீதியாக கிழக்கின் முதல்வர் அல்-ஹாபிழ் நசீர் அஹமட் கலந்து சிறப்பித்ததுடன் கெளரவ அதீதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக், சிறப்பதிதியாக கல்வி பணிப்பாளர் ஜனாப்.இஸ்ஸடீன், விழாவிற்கான பூரண அனுசரணையாளர் வை.எல்.மன்சூர், முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

தொடர்ந்து மேற்சொன்ன விடயம் சம்பந்தமாக உரையாற்றிய சாட்டோ வை.எல்.மன்சூர்.. 1988ம் ஆண்டு விடுதலை புலிகளினால் கடத்தி செல்லப்பட்டு குடும்பத்தாரிடம் ஜனாஸா கூட கையளிக்கப்படாத நிலையில் படுகொலை செய்யப்பட்ட அஸ்ஸஹீட் புஹாரி விதானையார் 1987ம் ஆண்டு நடை பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் ஓட்டமாவடி பிரதேச சபையினை பிரதி நிதித்துவப்படுத்தி சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் முதல் தடவையாக களமிறங்கிய பொழுது போட்டியின்றி தெரிவான முதலாவது ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளாருமாவார்.

அத்தோடு பிரதேசத்தில் ஆங்கிலத்தில் அதிக புலமை பெற்றிருந்த இவர் நீண்ட காலமாக கிராம சேவை உத்தியோகத்தராக கடைமையாற்றினார். 1987ம் ஆண்டு இலங்கை இந்திய அமைதிகாக்கும் படை வடகிழக்கில் இருந்த கால கட்டத்தில் சிவில் சமூக அமைப்புக்களின் தலைவராக பல அச்சுறுத்தல்களுக்கும், சவால்களுக்கும் மத்தியில் கல்குடா பிரதேசத்தில் ஆளுமைமிக்க தலைமையாக செயற்பட்டார். அத்தோடு முன்னாள் பராளுமன்ற உறுப்பினர் மாக்கான் மாக்காரின் செயலாளராக கடமையாற்றிய இவர் முன்னாள் நீதி மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் தேவநாயகத்தின் தீவிர அரசியல் செயற்பாட்டாளராக இருந்ததோடு அவருடன் நெருங்கிய நட்பினையும் பேணி வந்தார்.

மேலும் அஸ்ஸஹீட் புஹாரி விதானையார் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கல்குட பிரதேச எழுச்சிக்கு பெரும் தலைவர் அஸ்ஸஹீட் அஸ்ரஃபுடன் இணைந்து நின்று பெரும் பங்காற்றியதுடன் தான் ஆதரவளித்து வந்த ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து உடன் விலகி பெரும் தலைவர் மீது வைத்த மரியாதையின் காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் கல்குடா பிரதேசத்தில் காலூன்ற செய்வதற்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் மேற்கொள்வதாக அக்காலகட்டத்தில் பெரும் தலைவர் அஸ்ரபிடம் வாக்குறுதி அளித்து செயற்பட்டமை முக்கிய விடயமாகும். அது மட்டுமல்லாமல் வரலாறு பேசுமளவிற்கு தனது பிள்ளைகளை கல்வி பின்னணி கொண்ட குடும்பமாகவும் உருவாக்கினார்.

சமூகத்தின் நன்மை கருதி நியாயமான முடிவுகளை எடுத்து எதற்கும் அஞ்சாமல் துணிச்சலாக செயற்பட்டு வந்ததோடு புஹாரி விதானையார் விடுதலை புலிகளினால் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்படுவதற்கு நான் மேற் கூறிய விடயங்களும் காரணங்களாக அமைந்திருந்தமை இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டிய முக்கிய விடயமாகும். ஆகவேதான் எந்த கட்டங்களுக்கும் உயிருடன் இருக்கின்ற பொழுது அரசியல்வாதிகள் தங்களது பெயர்களை சூட்ட கூடாது என்று கூறிவருக்கின்ற முஸ்லிம் காங்கிரசின் கிழக்கின் தலைமையாக இருக்கின்ற கிழக்கின் முதல்வர் அஸ்ஸஹீட் புஹாரி விதானையின் பெயரில் வரலாற்று பதிவாக ஆரம்ப பாடசலையினை செம்மண்ணோடை கிராமத்தில் உருவாக்க வேண்டும் என சாட்டோ வை.எல்.மன்சூர் பகிரங்க வேண்டுகோளினை முதலமைச்சரிடம் முன்வைத்தார்.

நிகழ்வில் இடம் பெற்ற சாட்டோ மன்சூரின் பூரண உரையோடு, முதலமைச்சரின் சுருக்க உரையும், நிகழ்வில் இடம் பெற்ற சம்பவங்கள் அடங்கிய சுருக்கமான காணொளியும் எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீடியோ மன்சூரின் உரையும் நிகழ்வின் காணொளியும்:-