Saturday , April 29 2017

செய்வன திருந்தச் செய்தால் சாக்கடை கூட பூக்கடையாகும்.



-ஜெம்சித் (ஏ) றகுமான் மருதமுனை-

அரசியல் பேச்சுகளை பேசினால் அல்லது பதிவிட்டால் எம் மத்தியில் அதிகமானோர் செய்யும் பின்னூட்டல் அல்லது கருத்து அரசியல் ஒரு சாக்கடையாகும்.அதைபற்றி பேசி நேரங்களை வீணடிப்பதை விட வேறு வேலைகளை பார்த்து விட்டு சென்று விடியும் என கூறி விடுகின்றனர்.அரசியலை சாக்கடை யாக்குவதும்,பூக்கடையாக்குவதும் யார்?மக்களாகிய நாமே அதை தீர்மானிக்கின்றோம்.தேர்தல் காலங்களில் நாம் அளிக்கும் வாக்குகளே அரசியல் சாக்கடையா?அல்லது பூக்கடையா என தீர்மானிக்கின்றது.

அரசியல் என்பது மக்களின் வாழ்வின் பெரும் பகுதியை ஆழ்கின்றது என்பதை நாம் சிந்திக்க தவறுகின்றோம்.எந்த விடயத்தில் அரசியல் செல்வாக்கு செலுத்தவில்லை என்பதை எம்மால் அனுமானிக்க முடியுமா?நிச்சயமாக அனுமானிக்க முடியாது.காரணம் எம் அன்றாட வாழ்வில் அரசியலானது மறைமுகவாகவோ அல்லது நேரடியாகவோ,தெரிந்தும்,தெரியாமலும் செல்வாக்கு செலுத்திக் கொண்டுதான் இருக்கிறது.

எதில்தான் அரசியல் இல்லை? நாம் உண்ணும் உணவு, உடுத்தும் உடை, இருக்கும் இடம், குடிக்கும் தண்ணீர் எல்லாம் அரசியலால் தீர்மானிக்கப்படுகிறது.இவ்வாறான விடயங்கள் அரசியலை அடிப்படையாக கொண்டியங்குகின்றன என்பதை ஆழ்ந்து சிந்திப்பதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

இன்று எம் சமூகத்தின் மீது அக்கறை கொண்டு பொது நலன்களை சிந்திக்கும் பூக்கடைக்கு ஒப்பான இளைஞர் சமூகத்தை வைத்துக் கொண்டு சுய நலங்களை மட்டும் கொள்கையாக கொண்ட அரசியல் ரீதியாக உழைத்து பழகியவர்களை பிரதிநிதிகளாக தெரிவு செய்து விட்டு அரசியல் சாக்கடை என கூறுவது நியாயமாகி விடுமா?தேர்தல்காலங்களில் வாக்குகள் மூலம் அரசியல் பிரதிநிதிகளை தெரிவு செய்த நாம் தான்  அரசியலை சாக்கடை எனவும் கூறுகின்றோம்.

சமூகத்திற்கு உண்மையாக,இறைவனுக்கு பயந்து செயலாற்றக் கூடிய போராளிகளை அரசியல் பிரதிநிதிகளாக தெரிவு செய்வதை விடுத்து சமூகத்தை கூறு போட்டு விற்று பிழைப்பவர்களை தெரிவு செய்து பாராளுமன்றம்,மாகாணசபை மற்றும் பிரதேச சபைகளுக்கு அனுப்பி விட்டு அரசியலை சாக்கடை என மட்டம் தட்டுகின்றோம்.எம்மிடமிருந்தே அரசியல் உருவாகிறது.எனவே ஏன் எம்மால் சக்கடை அரசியலை புறந்தள்ளி  பூக்கடை அரசியலை தெரிவு செய்ய முடியாமல் இருக்கிறது?

அரசியல் மாற்றம் என்பது தனிப்பட்டவர்களிடம் இருந்து ஆரம்பமாக வேண்டும்.தேர்தல்காலங்களில் ஆராய்ந்து வாக்கிடும் மக்களாக மாற வேண்டும்.உணர்வு ரீதியான அரசியல் காலகட்டங்களை எம் சமூகம் கடந்து விட்டது.எதிர்கால சந்ததியின் சபீட்சத்துக்கு தேவையானது சிந்தனை ரீதியான அரசியலாகும்.அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதை போல எமது சிந்தனை ரீதியான தனிப்பட்ட மனித நகர்வுகள் சாக்கடை அரசியலை பூக்கடையாக மாற்றி விடும்.

எனது சமூகம்,மக்களால் வழங்கப்பட்ட பிரதிநிதித்துவப் பதவி அமானிதமானது என்ற எண்ணத்தை கொள்கையாக கொண்டு எம் மத்தியில் வலம் வரும் இளைஞர்களை இனங்கண்டு அவர்களை தட்டிக் கொடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.எனவே அரசியல் சாக்கடையல்ல பூக்கடைதான்.சாக்கடையா அல்லது பூக்கடையா?என தீர்மானிக்கும் சக்தியும் எம்மிடத்தில்தான் உண்டு என்பதை நினைவில் வைத்துக் கொள்வோம்.