Monday , November 20 2017

“எதிர்க்கட்சியாக இருந்து கொண்டே அடுத்தவர்கள் சாதிக்கும்போது ஆளும் கட்சியிலிருக்கும் நமது பிரதிநிதிகளால் முடியாமல் போவது ஏன்…?

(NFGG ஊடகப் பிரிவு)

“நமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேருமே ஆளும் கட்சியில்தான் இருக்கின்றார்கள். அவர்களில் சிலர் அமைச்சர்களாகவும் இருக்கின்றார்கள். அளுத்கம சம்பவம் நடந்து 33 மாதங்கள் கடந்து விட்ட போதிலும் முறையான நஸ்டஈட்டைப் பெற்றுக் கொடுப்பதற்கு இவர்களால் முடியவில்லை. அதற்காக முயற்சிக்கவுமில்லை. ஆனால் இவர்கள் அங்கம் வகிக்கும் அமைச்சரவை மூலமாக ஏனைய பல பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலவாறான நிவாரணங்கள் வழங்கப்பட்டிள்ளன. அதே வேளை சகோதர தமிழ் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பிரதி நிதிகள் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டேதான் தமக்கான அத்தனையையும் சாதித்துக் கொள்கிறார்கள். அப்படியென்றால் ஆளும்கட்சியில் இருந்தும் கூட ஏன் முஸலிம் பிரதிநிதிகளால் சாதிக்க முடியாமல் போகிறது..? ” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தில் தீர்க்கப்படாமல் தொடரும் முஸ்லிம் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் தனதறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது.

“முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவருமே ஆளும் கட்சியிலேதான் இருக்கிறார்கள். எனினும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைகள் எவற்றுக்குமே இதுவரை தீர்வு கிடைத்ததாக இல்லை. பிரச்சனைகள் வருகின்ற போது அத்தனை பேரும் உணர்ச்சி வசப்பட்டுப் பேசுகிறார்கள். கண்டனம் தெரிவிக்கின்றார்கள், பின்னர் அனுதாபம் தெரிவிக்கின்றார்கள். அத்தோடு எல்லாம் முடிந்து விடுகிறது. பிரச்சனைகளும் மறந்து போய் விடுகின்றன. பின்னர் மீண்டும் ஒரு புதிய பிரச்சனை உருவாகிறது. அப்போது மீண்டும் தமது வழமையான பாணியிலேயே முஸ்லிம் பிரதிநிதிகள் பேசி விட்டு அடங்கி விடுகிறார்கள்.

முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளின் இயலாமைக்கு நல்லதொரு உதாரணம் அளுத்கம சம்பவமாகும்.

இனவாதிகளால் அப்போதைய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் முஸ்லிம் சமூகத்தின் மீது திட்டமிட்டு நடாத்தப்பட்ட இந்தத் தாக்குதல் நடந்து தற்போது 1000 நாட்கள் கடந்து விட்டன. தமக்கு நீதியும், நிவாரணமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் பல அபாயங்களுக்கு மத்தியில் முஸ்லிம் சமூகம் ஆட்சி மாற்றத்திற்கு முழுமையான பங்களிப்பை செய்தது. இந்த ஆட்சி மாற்றத்தின் பலனாக அரசியல் வாதிகள் எல்லோரும் தமது அதிகாரங்களைத் தக்க வைத்துக் கொண்டார்கள். ஆட்சி மாற்றத்திற்கான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஏராளமான கோடிகளை சன்மானமாகப் பெற்றுக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். ஆனால், உயிர்களை இழந்த, உடல் உறுப்புக்களை இழந்த மற்றும் தமது சொத்தக்களை இழந்த இந்த மக்களுக்கு இது வரை நீதி கிடைக்கவும் இல்லை; நிவாரணம் கிடைக்கவும் இல்லை.

ஆனால் கடந்த சில மாதங்களில் அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சில தீர்மானங்களைப் பார்க்கின்ற போது முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளின் சமூகப் பொறுப்பற்ற கையாலாகாத்தனம் அம்பலமாகின்றது. கடந்த ஜனவரி மாதம் முதல் நடந்த அமைச்சரவைக் கூட்டத் தீர்மானப் பதிவுகளைப் பார்க்கின்ற போது ஏனைய சமூகங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எவ்வாறு தங்களது கடமைகளைச் செய்திருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது.

சில வருடங்களுக்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலைச் கலவரத்தில் கொல்லப்பட்ட, காயப்பட்டவர்களுக்கு தலா ஐந்து இலட்சம் ரூபா வரையான நஸ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதித்துள்ளது. அமைச்சர் சுவாமிநாதன் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தின் படியே இது நடந்துளள்து. அது போலவே யானைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் களுகங்கை அபிவிருத்தித் திட்டத்தில் காணிகளை இழந்த மக்களுக்கும் நஸ்டஈடு வழங்குவதற்கு விசேட அமைச்சரவைப் பத்திரத்தின் மூலமாக அனுமதி வழங்கப்பட்டுள்து.அது போலவே, வேருவளை – களுத்துறைப் பகுதியில் படகு விபத்தில் உயிரிழந்த தமது மக்களுக்கான இழப்பீடுகளை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா விசேட அமைச்சரவை அனுமதியோடு பெற்றுக் கொடுத்துள்ளார்.

இப்படி பல்வேறு பாதிப்புக்களை, இழப்புக்களைச் சந்தித்த மக்களுக்கான நஸ்டஈடுகளை அந்த சமூகங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் விசேட அமைச்சரவைப் பத்திர மூலமாக பெற்றுக் கொடுத்துள்ளனர். குறிப்பாக களுத்துறை படகு விபத்து நடந்து சில வாரங்களுக்குள்ளாகவே சகோதர சமூகத்தைச் சோந்த ஒரு அமைச்சர் அந்த மக்களுக்கான தனது கடமையை நிறைவேற்றியிருக்கிறார். ஆனால் அளுத்கமையில் நமது மக்கள் மீதான தாக்குதல் நடந்து 1000 நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் நமது அமைச்சர்களாலும் எதனையும் செய்ய முடியவில்லை; ஆளும் கட்சிப் பிரதிநிதிகளாலும் எதனையும் செய்ய முடியவில்லை.

இதில் இன்னுமொரு துரதிஸ்டம் என்னவென்றால் நமது மக்களும் கூட இதனை மறந்து விட்டார்கள்.

இதற்கான அடிப்படைக் காரணம் ஒன்றுதான். அரசியலின் இலக்கு என்ன..? அரசியல் பிரதிநிதிகளின் கடமைப்பாடு என்ன..? குறிப்பாக ஆளும் கட்சியில் அங்கம் வகிப்பவர்களின் கடமைப்பாடு என்ன..? என்பது பற்றிய தெளிவின்மையே இதற்கான காரணமாகும். தமது கடமைகளை செய்யத் தவறும் அரசியல் வாதிகள் மக்களின் இந்த அறியாமையைப் பயன்படுத்தி தப்பித்துக் கொள்கிறார்கள்.

நமது மக்கள் கவனிக்க வேண்டிய இன்னுமொரு விடயமும் இருக்கிறது. ஆளும் கட்சியில் இருப்பது மாத்திரமே நமது மக்களுக்குப் பாதுகாப்பானது; நமது மக்களது பிரச்சனைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தரும் என்ற ஒரு பிழையான தோற்றப்பாட்டை இந்த அரசியல் வாதிகள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். மக்களுக்கான தீர்வுகளை வென்றெடுப்பதற்காகவன்றி தமக்கான சுகபோகங்களுக்காகவே ஆளும் கட்சியில் இருக்க நமது பிரதிநிதிகள் வரும்புகின்றார்கள் என்பதனை இப்போதாவது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில், சகோதர சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பிரதி நிதிகள் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டேதான் தமக்கான அத்தனையையும் சாதித்துக் கொள்கிறார்கள் என்ற உண்மையினை அவ்வளவு இலேசாக மறந்து விட முடியாது . ஒரு சமூகத்தின் பிரதிநிதிகள் அத்தனை பேரும் ஆளும் கட்சியில் அங்கம் வகிப்பதென்பது நமக்குப் பாதுகாப்பானதல்ல என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.

எனவே, இத்தருணத்திலாவது தமது அடிப்படைக் கடமைகளைச் செய்யத் தவறும் அரசியல் வாதிகள் பற்றி சுட்டிக்காட்டுவதற்கும், தட்டிக் கேட்பதற்கும் முஸ்லிம் சமூகம் முன்வரவேண்டும். இதில் முஸ்லிம் ஊடகங்களுக்கு பிரதான பங்கிருக்கிறது. அதை அவர்கள் செய்ய முன்வர வேண்டும். அதுபோலவே நமது சமூகத்தில் படித்தவர்களும், இளைஞர்களும் இந்த யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு சமூகத்தை விழிப்பூட்டி புதியதொரு அரசியல் பாதையில் வழி நடாத்த ஒன்றினைய வேண்டும்”