Friday , November 24 2017

ஹஜ், உம்றா அடுத்து “நுவரெலியா”..கொஞ்சம் வாசிங்க..

nuwara_eliya-2

இலங்கைச் சோனகர் வாழ்வில் ஹஜ், உம்றாவிற்கு அடுத்ததாய் முக்கியத்துவம் கொடுக்கப்படும் கனவு ஊர். அடிக்கிற வெயிலுக்கும் இருக்கிற டென்ஷனுக்கும் இதமான இடம்.உல்லாச உலகின் சொர்க்கபுரி…

மார்ச் மாதம் ஆனாலே பலருடைய முகங்களில் ” நுவரெலியா போக வேண்டிய கவலை ” கடன் வாங்கிய நடுஸ்தர குடும்பஸ்தன் போல் ஒட்டிக் கொள்ளும்…இதற்காகவே சில டீன் ஏஜ் இளசுகள் ஏதோ நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டிய கட்டாய நிர்ப்பந்தம் போல பணம் சேர்க்கும்..

எமது பெருநாட்கள் வந்தால் மறு நாளே கடைகளைத் திறக்கும் பிஸ்னஸ் பெருமான்கள் எல்லாம் ஒரு வாரம் கடைகளுக்கு மூடு விழா நடாத்தி பேரானாந்தம் பெற பெரும் ப்ளான் போடுவர்.

சில முதலாளிகள் அந்த வாரம் மற்றும் சோஷலிஸ்டுகளாய் மாறி தங்களுக்கு கீழே பணி புரியும் ஊழியர்களையும் தங்கள் பயணத்தில் சேர்த்துக் கொள்வர்.

“எல்லோரும் ஓதிக் கொண்டு ரெடியாகுங்கோ ” என்று பயணம் ஆரம்பிக்க முன் வாகனத்தில் உள்ள ஒரு மகான் சொல்லும்.

ஆனால் நான்காவது ஜியரில் வாகனம் சீறத் தொடங்கிய அந்த நிமிடம் ” ஆலுமா டோலுமா ” பாட்டு வரும்…

எதிலயும் பகட்டைக் காட்ட வேண்டிய வாழ்வியல் நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருக்கும் சமூகத்தின் சில பிரகிருதிகள் ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் ரூபா வாடகையில் குடும்பத்துடன் தங்க அறைகள் புக் செய்யும்.

இந்த செய்தி பனாமா ஆவணக் கசிவுகள் போல இவர்களாலேயே தங்கள் சொந்த ஊரிற்கு கசிய வைக்கப்படும். பலாக்காய் வாங்கவே பத்து நிமிசம் யோசிக்கும் பாட்டாளி வர்க்கம் இதைக் கேட்டதும் அரண்டு ஓடும்…

அடடா..என்னா கண் கொள்ளாக் காட்சி…தமிழர்களும் சிங்களவர்களும் புத்தாண்டு பரபரப்பில் இருக்க நமது சமூகம் ஒட்டு மொத்த நுவரெலியாவையும் குத்தகைக்கு எடுத்தது போல் அலையும்.

ஒவ்வொரு ஊர் தமிழும் ஒவ்வொரு டிஸைனில் இருக்கும். இதெல்லாம் பார்க்கும் போது இலங்கையில் முஸ்லிம்களின் சதவீதம் உண்மையிலேயே பத்து வீதமா என்ற பெருந் சந்தேகம் தோன்றி மறையும்.

பல்வேறு விளையாட்டுக்கள் இடம் பெறும், மூகம் ஆர்வத்தோடு பங்கு பற்றும், பராடோக்களில் வந்த சில நோனாமார்களின் முக மூடிகள் தற்காலிக விடுதலை பெற்றிருக்கும்…ஒரு கூட்டம் சில துண்டுக் காகிதங்களில் தங்கள் போன் நம்பர்களை எழுதி கண்ணுக்கு இலட்சணமான பொண்ணுகளைத் தேடித் திரியும்…சில காதல்கள் மலரும்..சிலர் வாழ்வு கருகும்..

நம்மவர் வருகையால் புட்சிட்டிகளில் வியாபாரம் களைகட்டும்..மனுசனுக்கு கொலஸ்திரோலுக்கு காரணமான சகல ஜீவன்களும் துரிதமாய் விற்றுத் தீரும்..ப்ரொய்லர்கள் எல்லாம் இரவுகளில் BBQ ஆகும்……

நண்பர்கள் குலாமோடு ட்ரிப் வந்த கூட்டம் சில தப்புகளை ஓசை இன்றி செய்து முடிக்கும்…

சிலர் ஆர்வக் கோளாறில் யான் பெற்ற இன்பம் பெறுக என்று ஃபேஸ்புக்கில் குடும்ப போட்டோக்களை அடித்துத் தள்ள ஃபேஸ்புக் பெரிய பள்ளிவாசல்,இதில் உள்ள பெண்களின் ஆடை அமைப்புக்கள் இஸ்லாத்திற்கு முரணானது என்றும் ஒழுக்கமற்றவை என்றும் வழக்கம் போல் பத்வா கொடுக்கும்..

22 ஆந் தேதி நாட்டின் அநேகமான பள்ளிகளில் ஜும்மாவின் தலைப்பு நுவரெலியாவில் நடந்த நம்மவர்களின் அட்டகாசங்கள் பற்றியதாக இருக்கும்..ஹஸறத் உணர்ச்சிகளைப் பிழிந்து பயான் செய்வார்…துனியா முடியப் போகிறது என்பார்… எல்லாம் முடிய “இன்றைக்கு பயான் சூப்பர் ” என்று கூறிக் கொண்டு சமூகம் பள்ளியை விட்டு வெளியே வரும்….

-Zafar Ahmed-